ஒரே நாடு ஒரே தேர்தல் எக்ஸ் தளம்
சிறப்புக் களம்

ஒரே நாடு ஒரே தேர்தல்| ”பாஜகவின் நோக்கம் தேர்தல்களை ஒழிப்பது” - சூர்யா கிருஷ்ணமூர்த்தி விரிவான பேட்டி

நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அங்கேஷ்வர்

நாடாளுமன்றம், சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான மசோதாவை, மக்களவையில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் இன்று அறிமுகம் செய்தார். மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தன. முதலில் பேசிய காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டாட்சி, அரசமைப்புக்கு எதிரானது என சாடினார். இதையடுத்து பேசிய திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளை சேர்ந்த எம்பிக்களும், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர்.

மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஆதரவு

பின்னர் பேசிய திமுக எம்பி டி. ஆர்.பாலு, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்துவது சாத்தியமற்றது என்றும், மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தினார். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப பரிந்துரை செய்வதாக அறிவித்தார்.

பின்னர் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 269 பேர் வாக்களித்தனர். 198 எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு மசோதாவை அனுப்புவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

மாநிலக் கட்சிகளை வலுவிழக்கச் செய்யும்

OneNationOneElection

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்பி கனிமொழி, “இது மக்களது கவனத்தை திருப்புவதற்காகக் கூட இருக்கலாம். அதையும்தாண்டி, தன்னால் நினைத்ததை எல்லாம் சாதித்துவிட முடியும் என்ற மனநிலையில் கூட கொண்டு வரப்பட்டதாக இருக்கலாம். தொடர்ந்து, முதலமைச்சர் முக ஸ்டாலினும் திமுகவினரும் இதை எதிர்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். எதிர்ப்போம். நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பினாலும், இது திமுக எப்போதும் எதிர்க்கக்கூடிய மசோதாதான்” எனத் தெரிவித்துள்ளார்.

சூர்யா கிருஷ்ணமூர்த்தி

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுகவின் செய்தித் தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தியைத் தொடர்பு கொண்டு கேள்விகளை முன்வைத்தோம்..

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா???

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதா

இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொண்டு வருவது, பற்றி எரியும் மணிப்பூர் விவகாரம் தொடங்கி, அதானி வரையில் எதிர்க்கட்சிகள் எதிர்க்கும் விவகாரங்களை மடைமாற்றும் உத்தியாக இதை கொண்டு வருகிறார்கள். இரண்டாவதாக, கண்டிப்பாக இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாஜக விரும்பும் பட்சத்தில் ஜனநாயகத்துக்கு விரோதமான வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றைக் கையாண்டுதான் இதைக் கொண்டு வருவார்கள். நடைமுறையில் இந்த திட்டம் சாத்தியமா என்றால், இல்லை.

முதல் பொதுத்தேர்தலே இந்த நடைமுறையில்தானே நடந்தது?

நாட்டின் முதல் பொதுத்தேர்தல் நாடு முழுவதும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ எனும் முறையில்தான் நடந்தது. 1957 ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் கூட எதேச்சையாக ஒரே மாதிரி நடக்கவில்லை. 7 மாநிலங்களின் சட்டப்பேரவைகளின் ஆயுட்காலங்களை, அந்தந்த மாநில அரசுகள் 2 முதல் 3 மாதங்கள் வரை குறைத்துக் கொண்டன. அதாவது, ஜூன் மாதத்தில் நிறைவு பெற வேண்டிய சட்டமன்றத்தை ஏப்ரல் மாதத்துடனே முடித்துக் கொண்டார்கள். இதன் பின்னரே, 1957 பொதுத்தேர்தல் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையில் நடந்தது. 1957 ஆம் ஆண்டிலேயே நடத்த முடியவில்லை. 1967க்குப் பிறகு தேசிய அரசியல், ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைகள் எல்லாம் பெருமளவில் மாறிவிட்ட சூழலில், இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான சாத்தியமான கூறுகள் இல்லை.

சாத்தியம் இல்லாமலா பாஜக தொடர்ந்து வலியுறுத்துகிறது?

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவதற்கான வலு இந்த அரசாங்கத்திடம் இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. உதாரணத்திற்கு சமீபத்தில் நடந்த 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள். ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா, ஹரியானா. ஒன்றிய அரசு நினைத்திருந்தால் இந்த 4 மாநில தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தி இருக்க முடியும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியங்கள் இருந்தும் ஒன்றிய அரசு அதைச் செய்யவில்லை. அரசியல் காரணங்களுக்காக, தனித்தனியாக வைத்தார்கள்.

மகாராஷ்டிரா

அதிலும், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மகாராஷ்டிரா தேர்தலில், அந்த சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவதற்கு 2 தினங்கள் இருக்கும் நிலையில், தேர்தல் முடிவுகள் வருமாறு வாக்குப்பதிவை நடத்தினார்கள். இவ்வளவு நெருக்கடியான கால அளவுகளில் நாம் தேர்தல்களை நடத்துவது கிடையாது. அவர்கள் அதற்கு என்ன காரணம் சொன்னார்கள் என்றால், ‘காஷ்மீரில் பாதுகாப்புக் குறைபாடு இருந்த காரணத்தினால், தனித்தனியாக தேர்தலை நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டது’ எனக் கூறினார்கள். 4 மாநிலங்களுக்கே காஷ்மீரைக் காரணம் காட்டி பாதுகாப்பு கொடுக்கமுடியவில்லை என சொல்லுகிறீர்கள். நாடு முழுவதும் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை எப்படிச் செய்வீர்கள்.

பாஜக சொல்லும் காரணங்களும் உகந்ததாகதானே இருக்கிறது? உதாரணத்திற்கு செலவுகள் குறையும் என்பது...

செலவு மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் காரணமாக ஏற்படும் நிர்வாகத் தாமதங்களை, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான காரணங்களாகச் சொல்கிறார்கள். அடுத்தது, காவல்துறை, துணை ராணுவப்படை இவர்கள் பயன்பாட்டில், தேர்தல் காலத்தில் இழப்பு ஏற்படுகிறது எனச் சொல்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்றால், இந்த மூன்று காரணங்களையும் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் சரிப்படுத்தாது. மாறாக, இந்த மூன்று விஷயங்களிலும், தற்போது உள்ளதைவிட அதிகம்தான் படுத்தும்.

தேர்தலுக்கு அரசு சார்பாக செலவிடக்கூடியத் தொகை நான்காயிரத்தில் இருந்து ஐந்தாயிரம் கோடிதான். கட்சிகள் செலவிடுவது, வேட்பாளர் செலவிடுவது எல்லாத்தையும் சேர்த்து 60 ஆயிரம் கோடி ரூபாய் எனச் சொல்கிறார்கள். இந்த செலவு இந்தியப் பொருளாதாரத்திற்கு உள்ளாகத்தான் சுற்றிக்கொண்டு உள்ளது. அந்தப் பணத்தை யாரும் வெளிநாடுகளுக்கு சென்று கொட்டுவதில்லை. இதனால், இழப்பு ஏற்படுகிறதென்றால், அதை ஏற்றுக்கொள்ளமுடியாது.

மத்திய பட்ஜெட் 2024- 2025

இந்தியாவின் பட்ஜெட் கிட்டத்தட்ட 47 லட்சம் கோடி. இவ்வளவு பெரிய பட்ஜெட் கொண்ட நாட்டில் தேர்தலுக்காக நான்காயிரம் கோடியை ஒதுக்குவது என்பதை பெரியத் தொகை என்று சொல்கிறார்கள். இதன்மூலமே தெரிகிறது. செலவு என்பது பெரிய காரணம் இல்லை. அவர்கள் வேறு ஒன்றை மறைப்பதற்காக செலவினைக் காரணமாக சொல்கிறார்கள்.

ஆண்டுக்கு கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கும் வரிச்சலுகை மட்டும் ஒரு லட்சம் கோடி. அதாவது, அவர்களுக்கான வங்கிக் கடன் தள்ளுபடி எல்லாம் இல்லாமல், வரிச்சலுகை மட்டுமே ஒரு லட்சம் கோடி. அதோடு ஒப்பிடுகையில் இந்த 4 ஆயிரம் கோடி என்பது ஒரு பொருட்டே இல்லை. ஆனால், இந்த செலவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதைச் சரிசெய்ய கிளம்புவது என்பது சந்தேகத்தைக் கிளப்புகிறது.

மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது தானே?

தேர்தல் நடத்தை விதிமுறைகளால், மக்கள் நலத்திட்டங்கள் மக்களுக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது என சொல்கிறார்கள். ஒன்றிய அரசிடம் குவித்து வைத்துள்ள அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு பகிர்ந்துவிட்டால் அந்த சிக்கலும் தீர்ந்துவிடும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கருத்தில்கொண்டு தேர்தல்களைக் குறைக்கிறேன் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் அல்ல. இந்தியாவில், ஒரு குடிமகனுக்கு இருக்கும் அடிப்படை ஜனநாயக உரிமையே தேர்தலில் வாக்களிப்பதுதான். அதை நிர்வாகத்திற்கான சுமை என்ற பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள். அடிக்கடி தேர்தல் நடத்துவதையே நிர்வாகத்திற்கு சுமை என சொல்லுகிறவர்கள், நாளை தேர்தல் என்ற ஒன்றை நடத்துவதையே நிர்வாகத்திற்குச் சுமை என சொல்லுவார்கள். எனவே, தேர்தல்களை ஒழித்துக்கட்டிவிட்டு அதிபர் ஆட்சி முறையை நோக்கி நகர்த்துமோ என்ற அச்சத்தை இது ஏற்படுத்துகிறது.

வேறு என்ன சிக்கல்கள் இருக்கிறது?

ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தற்போது தேர்தலை நடத்துகிறோம். ஒருவேளை, பாராளுமன்றமோ, சட்டமன்றமோ கலைந்துவிட்டதென்றால், அதற்காக தேர்தல் நடக்கும். அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்கும்.

ஆனால், இந்த புதிய நடைமுறையில், அதாவது ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையில் தேர்தல் நடக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் ஒரு மாநில அரசோ அல்லது மத்திய அரசோ கலைந்துவிட்டதென்றால், அதற்காக நடத்தப்படும் தேர்தல் இடைத்தேர்தலாகத்தான் இருக்கும். உதாரணமாக, ஆட்சிப் பொறுப்பேற்று 4 ஆவது ஆண்டில் ஒரு அரசு கலைகிறது. அடுத்த ஒரு ஆண்டுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும். அதன்பின் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தப்படும். இப்படி, நடத்தினால் மேலும் சிக்கல்கள்தானே ஏற்படும்.

தேர்தல் ஆணையமும் இந்த யோசனையைக் கூறியுள்ளது தானே?

தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் ஆணையம் இந்த யோசனையை பலமுறை கூறி, அது அரசுகளால் பரிசீலிக்கப்பட்டு அது நிராகரிக்கப்பட்டது. நடைமுறை சாத்தியம் இல்லை என்றுதான் அந்தந்த மாநில அரசுகள் அதை நிராகரித்தது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்துகிறது என்பதைத் தாண்டி, நடைமுறையில் அதற்கான தேவை என்ன என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்,. அவர்கள் சொல்லுவது போல, செலவு மற்றும் நிர்வாகக் காரணங்கள் என இரண்டையும் சரிசெய்யாது என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தலின் மூலமாக தேர்தல் ஆணையத்தின் மதிப்பையும் இழக்கச் செய்கிறார்கள். ஒவ்வொரு மாநிலங்களிலும் தேர்தல் நடத்தப்படுவதன் மூலம் தொடர்ச்சியாக தேர்தல் ஆணையம் இயங்கிக் கொண்டே இருக்கிறது.

தற்போது உள்ள நடைமுறை தொடர்வதில் என்ன நன்மைகள் இருக்கிறது?

தேர்தல்தான் அரசியல் கட்சிகளுக்கான மதிப்பீடுகள். இடைப்பட்ட காலங்களில் மாநிலங்களில் நடத்தப்படும் தேர்தலால்தான் மோடி அரசாங்கம் மக்கள் விரோத சட்டங்களில் சிலவற்றையாவது செயல்படுத்தாமல் உள்ளது. மிகச்சிறந்த உதாரணமாக, வேளாண் சட்டங்களைச் சொல்லலாம்.

பெட்ரோல்

மேலும், எந்த மாநிலத்திற்கு தேர்தல் நடக்கிறதோ அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு அதிகமாக இருக்கிறது. தினந்தோறும் பெட்ரோல் விலைகளை நிர்ணயிக்கும் திட்டத்தினைக் கொண்டு வந்த பிறகு, தொடர்ச்சியாக பெட்ரோல் விலை ஏறிக்கொண்டே இருந்தது. எங்கெல்லாம் தேர்தல் நடக்கிறதோ அப்போதெல்லாம், தேர்தல் நடத்தப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பில் இருந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் வரை பெட்ரோல் டீசல் விலை மாற்றமில்லாமல் இருக்கும். டீசல் விலை பெட்ரோல் விலையைக் குறைக்க வேண்டுமென்றால், தேர்தல் வரவேண்டிய தேவை உள்ளது. போராட்டம் செய்யும் விவசாயிகளுக்கு நீதிகிடைக்க வேண்டும் என்றாலும், தேர்தல் காலம் வரவேண்டிய தேவை உள்ளது.

தேர்தல்கள்தான் அரசுகளை ஓரளவு அச்சம் கொள்ள வைக்கிறது, அரசுகளை சரிப்படுத்துகிறது. எனவே, இந்த தேர்தல்களை ஒழித்துவிட்டால், அவர்கள் எடுக்கும் முடிவுகளில் இருந்து பின்வாங்க வேண்டாம்; எந்த விதமான சட்ட விரோத முடிவுகளையும் துணிச்சலாக எடுக்கலாம். இந்த நிலையைக் கொண்டு வருவதற்காகத்தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை அவர்கள் முன்னிறுத்துகிறார்கள்.

பாஜகவை மட்டுமே மையமிட்டு பேசுவது சரியா?

பாஜக - காங்கிரஸ்

பாஜகவை மையமிட்டு எதிர்க்கட்சிகள் பேசுகிறார்கள் என்றால், பாஜகவின் இயல்பு அப்படி உள்ளது. மாநில நிர்வாகங்களையே ஒழிப்பது என்பது பாஜகவின் நீண்டகால குறிக்கோள்களில் ஒன்று. அவர்களது நோக்கம் நாடாளுமன்றத்திற்கு அடுத்ததாக மாவட்ட நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதுதான். மாநிலங்களை மாவட்ட நிர்வாகங்களாக பிரித்து ஆளவேண்டும் என்ற கனவுகளுடன்தான் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

கோவிட் காலத்தில்கூட, மாநிலங்களில் எத்தனைபேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கூறாமல், பாதிக்கப்பட்டோர் பட்டியலை மாவட்ட ரீதியாக வெளியிட்டார்கள். பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்ப்பு வந்தபின்பே, மாநில வாரியாக பட்டியலை வெளியிட்டார்கள். இவர்களது நோக்கமே டெல்லியிலிருந்து மாவட்டங்களை ஆள வேண்டும். இடையில் இருக்கும் மாநில அரசுகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதுதான்.

வேறு வேறு காலங்களில் மாநில சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கு காங்கிரஸ், மாநில சட்டப்பேரவைகளை கலைத்ததுதானே முதன்மையான காரணமாகச் சொல்லப்படுகிறது?

காங்கிரஸ் 356 சட்டத்தினைப் பயன்படுத்தி மாநிலங்களைக் கலைத்தார்கள் என்றால், ஆமாம் கலைத்தார்கள். அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதை ஜனநாயகம் என்றும் யாரும் சொல்லவில்லை. அதை யாரும் நியாயமும்படுத்தவில்லை. அது மிகப்பெரிய ஜனநாயக ஒடுக்குமுறை; அதில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆனால், மோடி அதைத்தாண்டிய வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியாவது இருக்கிற சட்டத்தினைப் பயன்படுத்தி ஆட்சியைக் கலைத்தார்கள். ஆனால், நீங்களோ, குதிரைபேரம் மூலம் எம்.எல்.ஏக்களை வாங்கி, ஆட்சியைக் கவிழ்க்கும் வேலைகளில்தான் ஈடுபடுகிறீர்கள். எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பிற்கு பிறகு உங்களால் 356 சட்டப்பிரிவை பயன்படுத்த முடியவில்லை என்பதால், குதிரை பேரம் செய்து நீங்கள் அரசுகளைக் கவிழ்க்கிறீகள்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையை ஆதரித்ததாக கூறுகின்றனர்.. நெஞ்சுக்கு நீதி புத்தகத்தின் இரண்டாம் பாகத்தில், சட்டப்பேரவையைக் கலைத்து பொதுத்தேர்தலை நடத்துவது தொடர்பாக குறிப்பிட்டுள்ளாரே?

கருணாநிதி

கலைஞர் சொன்னது, ஆறேழு மாதங்களுக்குள் அடுத்தடுத்து தேர்தல் வருவதற்கு பதிலாக, ஒரே தேர்தலாக நடத்தலாம் என்று தானாக முன்வந்து சட்டமன்றத்தை கலைத்துக்கொண்டு தேர்தலை எதிர்கொண்டார். இது ஒரே நாடு ஒரே தேர்தலின் வடிவம் கிடையாது. இவர்கள் சொல்லுவது இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்றங்களின் ஆயுட்காலத்தை மாற்றி அமைப்பது.

ஒரு விஷயம் தானாக நடப்பதற்கும், கழுத்தில் கத்தி வைத்து நடத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் தத்துவத்தினை திமுக எல்லாக்காலத்திலும் எதிர்த்து வந்துள்ளது.

அரசியல் கட்சிகள் பலவும் இந்த நடைமுறையை ஆதரித்துள்ளதுதானே?

ஒரே நாடு ஒரே தேர்தலை இவர்கள் ஜனநாயகமாக நடத்துவார்களா என்ற நம்பிக்கையே இல்லை. முதலில் இந்த நிர்வாகமே ஜனநாகப்பூர்வமான நிர்வாகம் இல்லை. ஐந்தாண்டுகளுக்கு இருக்கக்கூடிய ஒரு சட்டத்தினை, நாடாளுமன்றத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்போம், இல்லையெனில் கலைப்போம் அல்லது நீட்டிப்போம் எனக் கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டமன்றம் என்பது நாடாளுமன்றத்திற்கு அடிபணிந்து போகக்கூடிய அவை கிடையாது. அதுவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அவைதான்.

பெரும்பான்மையானோர் ஆதரிக்கிறார்கள். அதனால் கொண்டு வருகிறோம் என்பது ஜனநாயகம் கிடையாது. பெரும்பான்மைவாதம். பெரும்பான்மை வாதத்திற்கும் ஜனநாயகத்திற்கும் வேறுபாடு உள்ளது. திமுக இதை எப்போதும் எதிர்க்கும்.