சென்னை: மெத்தபெட்டமைன் விற்பனை - இளம் பெண் உட்பட இருவர் கைது
சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே போதைப்பொருள் கடத்துவதாக வந்த தகவலின் அடிப்படையில் எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே தனிப்படை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு, சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த சொகுசு காரை சோதனை செய்தனர். அப்போது இரண்டு பேர் தப்பியோடிய நிலையில், காரில் இருந்த இளம் பெண் உட்பட இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அசாம் மாநிலத்தில் இருந்து மெத்தபெட்டமைன் மற்றும் கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து காரை சோதனை செய்த போது, சுமார் 30 லட்சம் மதிப்புள்ள 705 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 6 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், காரில் இருந்த நபர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பதும், காய்கறி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
மேலும், காரில் இருந்த இளம் பெண், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாத்திமா பேகம் என்பதும், இவர் அசாம் மாநிலத்தில் இருந்து போதைப் பொருளை கடத்தி வந்து பாலசுப்ரமணியனிடம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. மேலும், காரில் வந்த சாய்தின் மற்றும் முசாபர் ஆகிய இரண்டு இளைஞர்கள் தப்பியோடிய நிலையில், கைதான இருவரிடமும் எழும்பூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.