model image chatgpt
சிறப்புக் களம்

டெல்லி CJP போராட்டம் | அண்டை நாடுகளின் Gen Z கிளர்ச்சிபோல் மாறுகிறதா? இயக்குவது யார்.. தாக்கம் என்ன?

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் இணைவதற்கான உறுப்பினர் பதிவு தொடங்கப்பட்ட சிலமணி நேரங்களிலேயே எதிர்பாராத அளவு வரவேற்பு இருந்தது.

PT WEB

கட்டுரையாளர் : போத்தி ராஜ்

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் (சிஜேபி) சார்பில் இளைஞர்கள் திரண்டு நடத்திவரும் போராட்டம் தேசிய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இலங்கை, நேபாளம், வங்கதேசத்தில் நடைபெற்ற இளைஞர்கள், மக்கள் எழுச்சி போன்று கரப்பான் பூச்சி ஜனதா போராட்டம் வளர்கிறதா, சிஜேபி என்பவர்கள் யார், இவர்களின் பின்னால் இருப்பவர்கள் யார், இவர்களை இயக்குவது யார், எதை நோக்கி இந்தப் போராட்டம் திரும்புகிறது, சிஜேபியினர் கோரிக்கை என்ன, ஏன் திடீரென கூடுகிறார்கள் போன்ற கேள்விகள் குறித்து பதில்களை ஆய்வு செய்யலாம்.

சிஜேபி (CJP)என்றால் என்ன?

ஒரு வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், இளைஞர்கள் குறித்து தெரிவித்த கருத்துதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உருவாகக் காரணம். “வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டதாகக் கூறப்படுகிறது.” இதுதான் இளைஞர்களின் கோபத்துக்குக் காரணம். தலைமை நீதிபதியின் விமர்சனத்துக்குப் பதிலடியாக, இளைஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு நையாண்டி இயக்கம்தான் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janta Party-CJP). மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை கிண்டல் செய்யவே, அதன் பெயரைப்போல் ’கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' எனப் பெயரிடப்பட்டது.

வேலை இல்லாத இளைஞர்களை கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
நீதிபதி சூர்யகாந்த்
cockroach janta party

சிஜேபியை யார் தொடங்கியது?

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை அபிஜித் தீப்கே (30வயது) என்ற இளைஞர் 2026 மே மாதம் தொடங்கினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், இளைஞர்களை கரப்பான் பூச்சிகளுடன் ஒப்பிட்டதால் கோபமடைந்த தீப்கே, “அனைத்து கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும்” என்று தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கேட்டிருந்தார். அதற்கு 'ஜென் ஸி' மற்றும் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடமிருந்து எதிர்பாரா ஆதரவு கிடைத்து, அனைவரும் சேர்ந்து ஓர் ஆதரவு தளத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தனர். அப்போது இன்ஸ்டாகிராம், எக்ஸ் பக்கத்தில் உருவானதுதான் இந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.

எத்தனை லட்சம் உறுப்பினர்கள்?

இன்றைய கணக்கின்படி, 2.47 கோடி பின்தொடர்பவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சியில் இணைவதற்கான உறுப்பினர் பதிவு தொடங்கப்பட்ட சிலமணி நேரங்களிலேயே எதிர்பாராத அளவு வரவேற்பு இருந்தது. இதன் இன்ஸ்டா கிராம் பக்கத்தில் திடீரென லட்சக்கணக்கில் பின்தொடர்பவர்கள் சேரத் தொடங்கினர். இன்றைய கணக்கின்படி, 2.47 கோடி பின்தொடர்பவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளனர். அதேபோல எக்ஸ் தளத்தில் சிஜேபி கணக்கை 3.25 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள்.

இதையும் படிக்க: மேற்கு வங்கத்தின் புதிய பெண் சக்தி.. சரிந்தது மம்தா சாம்ராஜ்ஜியம்.. ஒரே மாதத்தில் அசுர மாற்றம்?

யார் இந்த அபிஜித் தீப்கே?

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியை நிறுவியர் அபிஜித் தீப்கே. மகாரஷ்டிராவில் சத்ரபதி சாம்பாஜி பகுதியைச் சேர்ந்தவர் இந்த அபிஜித் தீப்கே. புனேயில் இதழியல் பிரிவில் இளங்கலை படிப்பு படித்த காலத்தில், ஆம் ஆத்மி கட்சியுடன் இணைந்தார். 2020 முதல் 2023 வரை அந்தக் கட்சியின் தகவல் தொடர்பு குழுவில் தீப்கே பணியாற்றியுள்ளார். அதன்பின், முதுகலைப் படிப்புக்காக அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்பு துறையில் சேர்ந்து அங்கு படித்து வருகிறார். அபிஜித் தீப்கே என்பவர் தகவல் தொடர்பு உத்தியாளராக ஆம் ஆத்மியில் இருந்தார், ஒரு கருத்தை எவ்வாறு மக்கள் மத்தியில் உருவாக்கவேண்டும், மக்களிடம் எவ்வாறு செய்தி சொல்ல வேண்டும், டிஜிட்டல் தளங்களில் எவ்வாறு அரசியல் கருத்துகளை உருவாக்க வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர் என்று சொல்லப்படுகிறது. 2020ஆம் ஆண்டில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றதற்கு பின்புலத்தில் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றி, கட்சியின் அரசியல், ஆன்லைனில் மாற்றத்தை உருவாக்கி, இளைஞர்களை ஈர்க்கத் தேவையான உத்திகளை வகுத்தவர் இந்த அபிஜித் தீப்கே.

2020ஆம் ஆண்டில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வென்றதற்கு பின்புலத்தில் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றி, கட்சியின் அரசியல், ஆன்லைனில் மாற்றத்தை உருவாக்கி, இளைஞர்களை ஈர்க்கத் தேவையான உத்திகளை வகுத்தவர் இந்த அபிஜித் தீப்கே.
அபிஜித் தீப்கே

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அங்கீகரிக்கப்பட்டதா?

இளைஞர்களால் இன்ஸ்டாகிராமில் கேலியாகத் தொடங்கப்பட்ட அமைப்புதான் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி என்பதால், இது அதிகாரபூர்வ கட்சி அல்ல. இதுவரை தேர்தல் ஆணையத்தில் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை. இதில் சேரும் இளைஞர்கள் தாமாக முன்வந்து, தங்களை இதில் இணைத்துக்கொண்டு போராட்டங்களில் பங்கேற்கிறார்கள். இதில் மாணவர்கள், படித்த இளைஞர்கள், வேலையில்லாத இளைஞர்கள், வேலையில் இருப்போர், பொதுமக்கள் என அனைவரும் இணைந்துள்ளனர். ஆனால், முறையான அமைப்பாக இன்னும் பதிவாகவில்லை.

இதையும் படிக்க: முடிவுக்கு வரும் ‘மராட்டிய கர்ஜனை'.. சிவசேனாவின் வளர்ச்சியும் சரிவும்.. ஒரு பார்வை!

டெல்லியில் எதற்காகப் போராட்டம்?

மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்தது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். வேலைவாய்ப்பு, கல்வியில் வெளிப்படைத்தன்மை வேண்டும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை பிரதானமாக முன்வைத்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ஜூன் 28ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களுடன் கல்வியாளர் சோனம் வாங்சுக் இணைந்து, தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபடுவேன் எனத் தெரிவித்துள்ளார். கடந்த 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், நாடாளுமன்றம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற சிஜேபி கட்சியினர் மீது போலீஸார் தடியடி நடத்தியது பெரிய சர்ச்சையாகியுள்ளது.

தர்மேந்திர பிரதான் பதவி விலகும்வரை உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபடுவேன்
சோனம் வாங்சுக்

நேபாளம், இலங்கை, வங்கதேசத்தில் நடந்த இளைஞர்கள் போராட்டம்போல் சிஜேபி வளர்கிறதா?

இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளிலும் ’ஜென்சி’ இளைஞர்கள் களத்தில் இறங்கி போராடுகிறார்கள் என்ற ஒரு ஒற்றுமையைத் தவிர நோக்கங்கள் அனைத்து நாடுகளிலும் வேறுபடுகின்றன.

ஆசிய நாடுகளில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. படித்த இளைஞர்களுக்குப் போதுமான வேலையில்லை, வருமானம் குறைவு, ஏழ்மை, ஊழல் குற்றச்சாட்டு, பொருளாதாரச் சீரழிவு, மோசமான நிர்வாகம், அரசியல் ஸ்திரத்தன்மையின்மை ஆகிய சமூகக் காரணிகள்தான் இளைஞர்களை ஒன்றுதிரண்டு போராடி, வன்முறையில் இறங்கவைத்தது. நேபாளம், இலங்கை, வங்கதேசத்தில் அந்நாட்டு இளைஞர்கள் நடத்திய போராட்டத்தையும், இந்தியாவில் சிஜேபி கட்சியினர் நடத்தும் போராட்டத்தையும் ஒப்பிடக்கூடாது முற்றிலும் வெவ்வேறானவை. ஏனென்றால், மேலே குறிப்பிட்ட இந்த 3 நாடுகளிலும் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை, நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்திருந்து, ஊழல் மலிந்திருந்தது, மக்களின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்து, வாழ்வாதாரத்துக்கே சிரமப்பட்டனர். இளைஞர்களிடையே வேலையின்மை அதிகமாக இருந்தது, அரசியல்வாதிகள் ஊழலில் திளைத்து மக்களை மறந்தனர் போன்ற காரணங்கள்தான் போராட்டத்துக்குக் காரணமாக இருந்தது. இங்கு இளைஞர்கள் நடத்தியது அரசியல் புரட்சி. ஆனால், இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளிலும் ’ஜென்சி’ இளைஞர்கள் களத்தில் இறங்கி போராடுகிறார்கள் என்ற ஒரு ஒற்றுமையைத் தவிர நோக்கங்கள் அனைத்து நாடுகளிலும் வேறுபடுகின்றன.

இதையும் படிக்க: அடுத்த இலக்கு ‘பாப் எல் மன்தீப்’ நீரிணை! உலக எண்ணெய் வர்த்தகத்தை முடக்க ஈரான் திட்டம்?

மேலும், இந்தியாவில் நடப்பது அரசியல் சீர்திருத்த போராட்டம் என்றுதான் அர்த்தம்கொள்ள முடியும். இந்தியாவில் ஸ்திரமான அரசு இருக்கிறது, வலுவான பொருளாதாரம், வேலையின்மை குறைந்திருக்கிறது, ஊழல் குற்றச்சாட்டு இல்லை, வெளிப்படையான நிர்வாகம் நடக்கிறது, பொருளாதார வளர்ச்சி இருக்கிறது. நீட் தேர்வில் கேள்வித்தாள் கசிந்தது, தேர்வு ரத்து ஆகிய கோரிக்கைகள்தான் பிரதானம். இது கல்வி சீர்திருத்தம் தேவையென்ற கோரிக்கை அடிப்படையான போராட்டமே தவிர, அரசியல்ரீதியான போராட்டமாக எடுக்கக்கூடாது.

nepal protest

நேபாளத்தில் அரசு விதித்த சமூக ஊடகத் தடை, ஊழல், வேலையின்மை மற்றும் அரசியல்வாதிகளின் முறைகேடுகளுக்கு எதிராக இளைஞர்கள் திரண்டு வெறும் 48 மணி நேரத்தில் ஓர் அரசாங்கத்தைக் கவிழ்த்தனர். மடகாஸ்கரில் இளைஞர்கள் தலைமையிலான இயக்கம் அதன் பிரதமரையே வெளியேற்றியது. வங்கதேசத்தில், வேலையில் இடஒதுக்கீட்டில் பாரபட்சம், மற்றும் ஊழல் மீதான கோபமடைந்த இளைஞர்கள் பிரதமர் ஷேக் ஹசினா ஆட்சியை அகற்றி ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவந்தனர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவு, அந்நியச் செலாவணி குறைவு, அரசியல் நிலையற்ற தன்மை, வாழ்க்கைத் தரம் தாழ்ந்து மக்கள் வாழவே முடியாத நிலையால் அவர்கள் கோபமடைந்து புரட்சி செய்து ராஜபக்சே அரசை அகற்றினர். இதனால், இந்த நாடுகளில் நடந்த போராட்டங்களும், இந்தியாவில் நடக்கும் சிஜேபி போராட்டத்தின் மூலமும் வெவ்வேறானவை.

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்குவது, கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவருவது ஆகிய தனது நோக்கங்களை சிஜேபி அமைப்பு நிறைவேற்றுமா என்பது தெளிவாக இல்லை.

சிஜேபி கட்சியின் போராட்டத்தின் தாக்கம் என்ன?

மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்குவது, கல்வியில் சீர்திருத்தம் கொண்டுவருவது ஆகிய தனது நோக்கங்களை சிஜேபி அமைப்பு நிறைவேற்றுமா என்பது தெளிவாக இல்லை. இந்த விவகாரங்கள் தொடர்பாக மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், புதிதாக நீட் தேர்வும் நடந்து முடிந்துள்ளது, இனிவரும் காலங்களில் நீட் தேர்வு, கேள்வித்தாள் தயாரிப்பை கண்காணிக்க மத்திய அரசு புதிய கண்காணிப்பு குழுவையும் நியமித்துள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியபோது, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாகச் சென்ற மாணவர்களை போலீஸார், துணை ராணுவப் படையினர் தடுத்தனர்.

அப்போது இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டதையடுத்து, இளைஞர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்புகைக் குண்டுகள் வீசி போலீசார் கலைத்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதி போராட்டத்துக்கு வரும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், இளைஞர்களின் போராட்டம் பேசுபொருளாக மாறி எதிர்க்கட்சிகளின் ஆதரவு அதிகரித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா, சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் போராட்டத்துக்கு ஆதரவு அளித்துள்னர்.

இதையும் படிக்க: சிவன் கோயிலா.. கல்லறையா? எழுந்த சர்ச்சைகள்.. பாய்ந்த வழக்குகள்.. தாஜ்மஹாலைச் சுற்றி நடந்தது என்ன?

திசை மாறுகிறார்களா சிஜேபி கட்சியினர்?

கரப்பான் பூச்சி கட்சியினர் நடத்தும் போராட்டத்தின் கோரிக்கைகள் நாளுக்குநாள் மாறிக்கொண்டே வருகிறது. கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீட் தேர்வு குளறுபடிகளை சீரமைக்க வேண்டும் என்பது பிரதானமாக தொடக்கத்தில் ஒலிக்கப்பட்டது. ஆனால், தற்போது பிரதமர் மோடி பதவி விலக வேண்டும், மத்தியஅரசு பேச்சுவார்த்தைக்கு ஜந்தர் மந்தர் வர வேண்டும் என்று திசைமாறுகிறது. அது மட்டுமல்லாமல், சிஜேபி கட்சியினர் அமைதியாகக் கூடி தொடக்கத்தில் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது இளைஞர்கள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர். படித்த இளைஞர்கள், மாணவர்கள் போர்வையில் சமூக விரோதிகள், தேசவிரோத சக்திகள் கலந்து அவர்களை மடைமாற்றுகிறது என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

சிஜேபி கட்சியினர் அமைதியாகக் கூடி தொடக்கத்தில் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது இளைஞர்கள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளனர்.

கூட்டத்தைப் பயன்படுத்தும் எதிர்க்கட்சிகள்

மத்தியில் ஆளும் பாஜக தலைமையில் பிரதமர் மோடியின் ஆட்சிக்கு பல்வேறு குடைச்சல்களை எதிர்க்கட்சிகள் கொடுத்தபோதிலும் அசராமல், ஸ்திரமாக ஆட்சி நடக்கிறது. இந்தச் சூழலில் சிஜேபி கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, ஆதரவு, கூடும் கூட்டத்தை எதிர்க்கட்சிகள் தங்களின் சுயலாபத்துக்குப் பயன்படுத்த திட்டமிடுகின்றன என்ற பொதுவான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. ஏனென்றால், காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம்ஆத்மி போன்ற கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி திட்டங்கள், நோக்கங்கள் இருக்கும் நிலையில் அதை நிறைவேற்ற இந்த கூட்டத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏனென்றால், சிஜேபி கட்சியினர் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்கும் இளைஞர்களில் பெரும்பாலும் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்தவர்களும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்களும், காங்கிரஸ் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்களும் காணப்படுவதாக அங்குள்ள மக்கள், சமூக வலைத்தளங்களில் தெரிவிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் மத்திய அரசு ரத்துசெய்த பல்வேறு சட்டப்பிரிவுகள், ஜம்மு காஷ்மீர் விவகாரம், 370 சிறப்பு பிரிவு ரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை இந்தக் கூட்டத்தில் சிலர் பேசுவதும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. அப்படியென்றால், சிஜேபியின் நோக்கம் திசை மாறுகிறதா, அங்கு வரும் இளைஞர்கள் எதிர்க்கட்சியினரால் பயன்படுத்தப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

சிஜேபியின் நோக்கம் திசை மாறுகிறதா, அங்கு வரும் இளைஞர்கள் எதிர்க்கட்சியினரால் பயன்படுத்தப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

போராட்டம் எப்படிச் செல்லும்?

வன்முறைச் சம்பவங்கள் மற்றும் கல்வியாளர் சோனம் வாங்சுக் கைது போன்ற காரணங்களால், இனி தெருக்களில் பேரணியாகச் செல்லப் போவதில்லை என சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ளார். இந்த அமைப்பு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி. எதிர்காலத்தில் நேரடிப் பேரணிகளுக்குப் பதிலாக டிஜிட்டல் பிரசாரங்கள் மற்றும் சட்டப்பூர்வ வழிமுறைகளை நாட வாய்ப்புள்ளது.

இதையும் படிக்க: பாகிஸ்தானிலிருந்து விடுதலை! ‘பலுசிஸ்தான் தனி தேசம்’ அங்கீகரிக்கப்படுமா? இந்தியா, சீனா நிலை என்ன?