சிவன் கோயிலா.. கல்லறையா? எழுந்த சர்ச்சைகள்.. பாய்ந்த வழக்குகள்.. தாஜ்மஹாலைச் சுற்றி நடந்தது என்ன?
கட்டுரையாளர் : போத்திராஜ்
முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது காதல் மனைவி மும்தாஜின் நினைவாகக் கட்டிய தாஜ்மஹால், இன்றுவரை உலக அதிசயமாக, சந்தேகத்திற்கிடமின்றி காதலின் ஒரே அடையாளமாகத் திகழ்கிறது. எனினும், இதைச் சுற்றி பல்வேறு கட்டுக்கதைகளும், சர்ச்சைகளும், வழக்குகளும் சுற்றிவந்திருக்கின்றன. அதுகுறித்து அலசுகிறது இந்தக் கட்டுரை...
தாஜ்மஹால், யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னம், உலக அதிசயம், சந்தேகத்திற்கிடமின்றி காதலின் ஒரே அடையாளமாக இன்றுவரை திகழ்கிறது. தாஜ்மஹால் குறித்து புத்தகங்களில் படித்தவர்கள், திரைப்படங்கள், சமூக வலைத்தளங்கள் வாயிலாக அறிந்தவர்களால் ஒருபோதும் அதன் ஸ்பரிசத்தை, தனித்துவத்தை உணர முடியாது. ஒருவர் ஆக்ரா சென்று, தாஜ்மஹாலை நேரடியாகப் பார்க்கும்போது மட்டுமே, “ஏன் இன்றளவும் காதலின் சின்னமாக நிலைத்து நிற்கிறது, உலக அதியசங்களில் ஒன்றாக இருக்கிறது” என்பது புரியும்.
அமாவாசை இரவுகளில் பேரரசர் ஷாஜஹானும், மும்தாஜ் மஹாலும் இன்றும் அங்கு சந்திப்பதாக ஒரு கதை உலவுகிறது.
தாஜ்மஹாலைப் பார்த்த உடனே மிரட்சியில் வாயடைத்துவிடுவார்கள் என்பதுதான் நிதர்சனம். அமாவாசை இரவுகளில் பேரரசர் ஷாஜஹானும், மும்தாஜ் மஹாலும் இன்றும் அங்கு சந்திப்பதாக ஒரு கதை உலவுகிறது. எம்.சாதிக் இயக்கிய ’தாஜ் மஹால்’ திரைப்படத்திலும் சித்தரிக்கப்பட்டிருந்தது. தாஜ்மஹால் குறித்து வடமாநிலங்களில் ஏராளமான கற்பனைக் கதைகள் உலவுகின்றன. ஆனால் அவை அனைத்தும் காதலர்களைச் சுற்றியேதான் இருக்கிறது என்பதுதான் முத்தாய்ப்பான அம்சம். 17-ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசில் வந்த அரசர் ஷாஜஹான், அவரின் மனைவி மும்தாஜ் மஹால் நினைவாக வெள்ளைப் பளிங்குக் கற்களால் எழுப்பப்பட்டதுதான் தாஜ்மஹால் என்று வரலாற்றுத் தரவுகள் கூறுகின்றன. இதையே இந்திய தொல்லியல் துறையும் உறுதி செய்கிறது.
தாஜ்மஹால் குறித்த சர்ச்சைகள்
பல்வேறு காலகட்டங்களில் தாஜ்மஹால் குறித்தும், அதற்கு எதிராகவும் பல்வேறு சர்ச்சைகள் உருவாகி, காலப்போக்கில் காற்றில் கரைந்துவிட்டன. குறிப்பாக, தாஜ்மஹால் என்பது கல்லறை அல்ல, 12ஆம் நூற்றாண்டில் இருந்த சிவன் கோயில். இதில்தான் தாஜ்மஹால் கட்டப்பட்டது என்று பலர் உத்தரப்பிரதேச நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்தனர். அவை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில், வழக்கறிஞர் ஹரிசங்கர் ஜெயின் என்பவர், “தாஜ்மஹால் என்பது இந்துக் கோயில். இதை சர்வே செய்ய வேண்டும்” என ஆக்ரா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த ஆக்ரா நீதிமன்றம் மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, மனுதாரர் ஹரிசங்கர், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரின் மனுவில், “தாஜ்மஹால் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்துக் கோயில், அங்கு இந்துக்கள் வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும். நீதிமன்றம் சார்பில் வழக்கறிஞரை நியமித்து, தாஜ்மஹால் குறித்து புகைப்படங்கள், வீடியோ எடுத்து அதை ஆய்வுசெய்து, சர்வே செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கோரினார். ஆனால், மனுதாரரின் மனுவை உடனடியாக தள்ளுபடி செய்யாமல், மத்திய அரசு, இந்திய தொல்லியல் துறை பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
முதல் சர்ச்சை எப்போது?
முகலாயப் பேரரசர்களில் ஒருவரான ஷாஜஹான் மனைவி மும்தாஜ் மஹால் 1631ஆம் ஆண்டு காலமானார். பேரரசர் ஷாஜஹான் அவரின் மனைவி மும்தாஜ் நினைவாக 1632ஆம் ஆண்டில் தாஜ்மஹால் எனும் நினைவுச் சின்னத்தை எழுப்ப விரும்பினார். இந்தக் கல்லறை, ஏறக்குறைய 22 ஆண்டுகள்வரை கட்டப்பட்டதாகவும் 1648ஆம் ஆண்டு முடிக்கப்பட்டதாகவும், அடுத்த சில ஆண்டுகளில் சுற்றுவட்டாரப் பணிகள் முடிந்தன என்று வரலாறு தெரிவிக்கிறது.
தாஜ்மஹால் கட்டுவதற்காக இடத்தை ஆம்பர் பகுதியின் அரசர் மிர்சா ராஜா ஜெய் சிங் என்பவரிடம் இருந்து பேரரசர் ஷாஜஹான் வாங்கினார் என்றும், இதற்குப் பதிலாக அவருக்கு 4 மாளிகைகளை ஷாஜஹான் வழங்கியதாக வரலாற்றுத் தரவுகள் தெரிவிக்கின்றன. தலைமைக் கட்டடக்கலை நிபுணர் உஸ்தாத் அகமது லஹோரி தலைமையில் தாஜ்மஹால் கட்டுமானப் பணி நடந்து முடிந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், முதல்முறையாக மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பல கட்டடக்கலை வல்லுநர்கள் தாஜ்மஹாலை தாங்கள் எழுப்பியதாக உரிமை கொண்டாடினர். ஐரோப்பாவைச் சேர்ந்த வெனிடியன் ஜெரோனிமோ வெரோநியோ என்ற நகை வியாபாரி, ’தாஜ்மஹாலை கட்டியது மேற்கத்திய கட்டடக் கலை வல்லுநர்கள்’ என்று உரிமை கொண்டாடினார்.
17ஆம் நூற்றாண்டில் துருக்கியின் சுல்தானால் கட்டடக் கலைஞர் முஹம்மது எஃபெண்டி என்பவர் தாஜ்மஹால் கட்ட அனுப்பிவைக்கப்பட்டார் என்று 'தாரிக்-இ-தாஜ் மஹால்' நூலில் முகல் பெக் என்ற வரலாற்று அறிஞர் ஒரு கூற்றை முன்வைத்தார். இருப்பினும், பிற்காலத்தில் வெளிவந்த தகவல்கள்படி, எஃபெண்டி ஒரு கட்டடக் கலைஞர் அல்ல என்பதை உறுதிப்படுத்தின. இதுதான் தாஜ்மஹால் குறித்த முதல் சர்ச்சையாகும். 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நகை வியாபாரி ஆஸ்டின் டி போர்டாக்ஸ் என்பவர்தான் தாஜ்மஹாலை உருவாக்கினார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தாஜ்மஹால் கட்டத் தொடங்கிய, 1632ஆம் ஆண்டே ஆஸ்டின் இறந்துவிட்டார்.
வரலாற்று அறிஞரின் வாதம்!
தாஜ்மஹால் என்பது பேரரசர் ஷாஜஹான், தனது மனைவி மும்தாஜ் நினைவாக எழுப்பிய கல்லறை என்பது வரலாற்று உண்மை. இதை இடைக்கால இந்தியாவில் வாழ்ந்த எந்த வரலாற்று அறிஞர்களும் மறுக்கவில்லை. இர்பான் ஹபிப், அத்தர் அலி போன்ற வரலாற்று அறிஞர்களும், புகழ்பெற்ற சதீஸ் சோப்ரா, சயத் அலி நதீம் ரிஸாவி ஆகியோரும் இதை உறுதி செய்தனர். ஆனால், வரலாற்று அறிஞர் அல்லாத ஒருவர், ஆசிரியராக இருந்து, வழக்கறிஞராக பின்னர் பத்திரிகையாளராக மாறிய பிஎன் ஓக் என்பவர் இந்த கருத்திலிருந்து மாறுபட்டிருந்தார்.
தாஜ்மஹால் என்பது கல்லறை அல்ல, அது ஒரு’தேஜோ மாஹல்யா’ கோயில் என 1965ஆம் ஆண்டு வாதத்தை முன்வைத்தார். 4-ஆவது நூற்றாண்டில் ராஜ்புத் மன்னர்களால் கட்டப்பட்ட அரண்மனை என்று பிஎன் ஓக் சர்ச்சையை எழுப்பினார். இந்துக் கோயிலாக இருந்ததை ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜ் நினைவுக்காக கல்லறையாக மாற்றிக்கொண்டார். ஆனால், பிஎன் ஓக்கின் வாதத்தை வரலாற்று அறிஞர்கள் ஏற்கவில்லை. அதன்பின் 24 ஆண்டுகளுக்குப்பின், ஓக் தனது கருத்தை மாற்றிக்கொண்டு, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்துக் கோயில் என்ற வாதத்தை வைத்தார்
அது மட்டுமல்லாமல், ’தாஜ் மஹால்: ஓர் உண்மைக் கதை’ என்ற நூலையும் பிஎன் ஓக் எழுதினார். அதில், தனது வாதத்தை வலுப்படுத்த தாஜ்மஹாலை இந்துக் கோயிலுடன் தொடர்புபடுத்தி ஓக் எழுதினார். ஓக் கூற்றுக்கு எந்த வரலாற்று ஆதாரங்களும் இல்லை எனக் கூறி வரலாற்று ஆசிரியர்களும், நிபுணர்களும் நிராகரித்தனர். 2000ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்திலும் தாஜ்மஹால் இந்துக் கோயில் எனக் கோரி பிஎன் ஓக் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.
அடுத்தடுத்து வழக்குகள்
2005ஆம் ஆண்டு, அயோத்தியா சத்பவனா சமிதியைச் சேர்ந்த அமர்நாத் மிஸ்ரா என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் ”தாஜ்மஹால் என்பது ஓர் இந்துக் கோயில், இதை 1189ஆம் ஆண்டு சந்தேலா அரசர்களால் கட்டப்பட்டது” என்றார். ஆனால், இந்த மனுவை உயர் நீதிமன்றம் விசாரிக்காமல் தள்ளுபடி செய்தது. அடுத்து, 2015ஆம் ஆண்டில் ஆக்ரா நீதிமன்றத்தில் ஒருவர் மனுத்தாக்கல் செய்திருந்தார், அதில், “தாஜ்மஹால் என்பது இந்துக் கோயில். அதை சர்வே செய்ய உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இதை விசாரித்த ஆக்ரா நீதிமன்றம், மனுவை நிராகரித்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டில், ஒருவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார், அதில், “தாஜ் மஹாலில் திறக்கப்படாத 22 அறைகள் உள்ளன. அதைத் திறந்து பார்க்க உத்தரவிட வேண்டும். அதில் இந்துக் கடவுள்களின் சிலைகள், கல்வெட்டுகள் மறைந்திருக்கலாம்” எனத் தெரிவித்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், “மனுதாரரின் வரலாற்றுரீதியான கேள்விகளுக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் பதில் வராது. அதற்குப் பதிலாக கல்வியாளர்களை அணுகலாம்” எனத் தெரிவித்தது.
இதற்கிடையே 2022ஆம் ஆண்டு பாஜக தலைவர் ஒருவர், உச்ச நீதிமன்றத்தில் தாஜ்மஹால் குறித்து மனுத்தாக்கல் செய்திருந்தார். அதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அடுத்த இரு ஆண்டுகளுக்குப்பின், சிலர் தாஜ்மஹாலுக்குள் கங்கை நீரைக் கொண்டு சென்று வழிபாடு நடத்த முயன்றனர். 2017ஆம் ஆண்டுக்குப்பின் மாநில அரசின் சுற்றுலா நூலில் தாஜ்மஹால் குறித்து நீக்கப்பட்டுவிட்டது.
இந்திய தொல்லியல் துறை என்ன சொல்கிறது?
2017ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறை வெளியிட்ட அறிக்கையில், ”தாஜ்மஹால் 17ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கல்லறை. அந்த கட்டடம் கட்டுமானம், வடிவமைப்பு ஆகியவை இடைக்கால இந்தியாவில் இல்லை. இந்துக் கோயிலாக முன் இருந்தது என்பதற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை” எனக் கூறி முடித்துவைத்தது. அது மட்டுமல்லாமல், நாடாளுமன்றத்திலும் மத்திய அரசு அளித்த விளக்கத்தில், “தாஜ்மஹால் உண்மையில் இந்தக் கோயில் என்பதற்கு உறுதியான வரலாற்று ஆதாரங்கள் ஏதும் இல்லை” என தெரிவித்தது. எனினும், தாஜ்மஹாலைப் பற்றிய சர்ச்சைகள் இன்றுவரை சுற்றிக்கொண்டே இருக்கின்றன.

