போராட்டத்தில் குதிக்கும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி.. 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கு ஒன்றின் விசாரணையின்போது சொன்ன கருத்துகளின் பின்னணியில், அபிஜீத் திப்கே என்பவரால் இன்ஸ்டா பக்கத்தில் 'கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’என்ற பக்கத்தைத் தொடங்கினார். அதில் வேடிக்கையான பதிவுகள் பதிவிடப்பட்ட நிலையில், பலரும் அதனைப் பின்தொடரத் தொடங்கினர். ஒருகட்டத்தில், பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தையே அது விஞ்சியது. இதனால், மத்திய அரசுக்கு தடை விதித்தது. எனினும், மீண்டும் அதே பெயரில் ஒரு புதுப் பக்கம் தொடங்கப்பட்டது. தவிர, அந்தப் பக்கமும் இணையத்தில் வேகம்பிடித்து வருகிறது.
இந்த நிலையில், சமூக ஊடகங்களில் புகழ்பெற்ற 'கரப்பான் ஜனதா கட்சி', இந்திய கல்வி முறையின் தோல்விகளுக்கு எதிராக டெல்லியில் நடத்தவுள்ள போராட்டத்திற்கு முன்னதாக, தனது அமைப்பை விரிவுபடுத்த மூன்று புதிய செய்தித் தொடர்பாளர்களை நியமித்துள்ளது. இதன்படி, புலனாய்வு பத்திரிகையாளர் சௌரவ் தாஸ் தலைமை செய்தித் தொடர்பாளராகவும், திரைப்பட இயக்குநர் விஜேதா தஹியா மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் செய்தித் தொடர்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல் செய்ய வலியுறுத்தி, ஜூன் 6க்குப் பிறகு டெல்லியில் அமைதிப் போராட்டம் நடத்த இக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே திட்டமிட்டுள்ளார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சி இந்தியாவில் சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் நிலையில், அக்கட்சியின்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

