Balochistan google gemeni
சிறப்புக் களம்

பாகிஸ்தானிலிருந்து விடுதலை! ‘பலுசிஸ்தான் தனி தேசம்’ அங்கீகரிக்கப்படுமா? இந்தியா, சீனா நிலை என்ன?

சீன முதலீடுகளும் தொழிலாளர்களும் பெருமளவில் வருவதால் குறைந்த அளவே இருக்கும் பலூச் பழங்குடியினர் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அஞ்சுகிறார்கள்.

PT WEB

கட்டுரையாளர்: போத்தி ராஜ்

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், அந்நாட்டிடமிருந்து சுதந்திரத்தை அறிவித்துள்ளது. மேலும், தன் நாட்டுக்காக தனிக்கொடி, தேசிய கீதம் மற்றும் நாணயத்தையும் அற்வித்துள்ளது. மேலும், தன்னை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தை அது வலியுறுத்தியுள்ளது. இதில் இந்தியா, சீனாவின் நிலைப்பாடு என்ன? இதுகுறித்து விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை...

78 ஆண்டுகளாக பாகிஸ்தான் பிடியிலிருந்த பலுசிஸ்தான், “தாங்கள் பாகிஸ்தானிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டோம்” என்று சுயாதீனமாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறப்போகிறது. ஏனென்றால், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை காலத்திலிருந்து பாகிஸ்தானின் உள்ள மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்றாக, பலுசிஸ்தான் இருந்துவருகிறது. விடுதலைக்காக பலுசிஸ்தானும் 50 ஆண்டுகளாக பாகிஸ்தானிடம் தொடர்ச்சியாகப் போராடி, சண்டையிட்டு, உள்நாட்டுக் கலவரங்களில் ஈடுபட்டு வருகிறது. ஆனாலும், பாகிஸ்தான் அரசு சளைக்காமல் பலுசிஸ்தானை போராட்டங்களை நசுக்கிவருகிறது. இந்தச் சூழலில், மிர் யார் பலூச் என்பவர், எக்ஸ் வலைத்தளத்தில் கடந்த 15ஆம் தேதி பதிவிட்ட செய்தியில், “பலுசிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் 85 சதவீத பகுதிகளைக் கைப்பற்றிவிட்டது. பலுசிஸ்தானுக்கென தனியாக தேசிய கீதம், கரன்சி அறிமுகப்படுத்தியுள்ளோம. சர்வதேச சமூகம், இந்தியர்கள், அறிவுஜீவிகள், ஊடகங்கள் இதை அங்கீகரிக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

பலுசிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் 85 சதவீத பகுதிகளைக் கைப்பற்றிவிட்டது. பலுசிஸ்தானுக்கென தனியாக தேசிய கீதம், கரன்சி அறிமுகப்படுத்தியுள்ளோம. சர்வதேச சமூகம், இந்தியர்கள், அறிவுஜீவிகள், ஊடகங்கள் இதை அங்கீகரிக்க வேண்டும்
மிர் யார் பலூச்

பலுசிஸ்தான் எப்படி இருக்கும்?

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். பரப்பரளவில் மற்ற நான்கு மாகாணங்களுடன் ஒப்பிடும்போது அதன் மக்கள்தொகை குறைவுதான். பலுசிஸ்தானின் வடகிழக்கில் கைபர் பக்துன்கவா, கிழக்கே பஞ்சாப் தென்கிழமே சிந்து, மேற்கே ஈரானுடனும், வடக்கே ஆப்கானிஸ்தானுடனும் எல்லையைப் பகிர்ந்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணம் என்பது, ஈரானின் சிஸ்தான்-பலுசிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் நிம்ரூஸ் மற்றும் ஹெல்மண்ட் உள்ளிட்ட சில பகுதிகளைச் சேர்த்தால்தான் பலுசிஸ்தானின் முழுப் பகுதி. ஒருபுறம் அரபிக்கடலையும் எல்லையாக பலுசிஸ்தான் வைத்துள்ளது. பலுசிஸ்தான் இயற்கை வளங்களால் நிறைந்தது. இங்கு அதிகளவில் எரிவாயு, நிலக்கரி மற்றும் செம்பு, தங்கம், உள்ளிட்ட தாதுக்கள் உள்ளன. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் அந்நாட்டின் 44 சதவீத நிலப்பரப்பைக் கொண்டிருந்தபோதிலும் அங்கு 6 சதவீத மக்களே வாழ்கிறார்கள். இங்கு வாழும் பலூச் பழங்குடியினர் நூற்றாண்டுகளாக வசித்து வருகிறார்கள். இங்கும் வாழும் பஸ்தூன் பிரிவைவிட, பலூச் பழங்குடியினர்தான் மூத்தவர்கள்.

பலுசிஸ்தான் கிளர்ச்சிக்கு முக்கியக் காரணம்?

பாகிஸ்தானிடமிருந்து விடுதலைபெற்று சுதந்திர தேசமாக பலுசிஸ்தான் செயல்பட வேண்டும் என்பதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்று வளர்ந்துவரும் சீனாவின் ஆதிக்கம். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ‘பெல்ட் அன்ட் ரோட் இன்ஷியேட்டிவ்’ என்ற திட்டத்தின் பகுதியாக, ‘சீன பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம்’ திட்டம் இருந்து வருகிறது, இந்தத் திட்டம் பலுசிஸ்தான் முக்கிய வழியாகச் செல்கிறது. ஓமன் வளைகுடாவுக்கு அருகே இருக்கும் ஆழ்கடல் துறைமுக நகரான குவாடர் வரை செல்லும் வழித்தடமாக இருப்பதால் சீனா ஆர்வமாக இருக்கிறது. பலுசிஸ்தானில் உள்ள குவாடர் நகரில் சுரங்கத் திட்டங்கள் மற்றும் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணிகளிலும் சீனா ஈடுபட்டுள்ளது. ஆனால், பலுசிஸ்தான் மக்களோ தங்கள் வளங்களையும் நிலத்தையும் பாகிஸ்தான் ஆதரவுடன் சீனா சுரண்டி வருகிறது. சீன முதலீடுகளும் தொழிலாளர்களும் பெருமளவில் வருவதால் குறைந்த அளவே இருக்கும் பலூச் பழங்குடியினர் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என அஞ்சுகிறார்கள்.

இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். பலுசிஸ்தான் சுதந்திரத்துக்கு அளிக்கப்படும் ஆதரவு, பாகிஸ்தானின் இறையாண்மைக்கு நேரடியாக விடுக்கப்படும் சவாலாக மாறிவிடும்.

இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக பலுசிஸ்தான் அறிவித்ததும், இந்தியாவிடம் இருந்து அங்கீகாரத்தை எதிர்பார்த்தது. ஆனால், இது மிகவும் சிக்கலான சூழல் என்பதால் இந்திய அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த கருத்தும் இல்லை. பலுசிஸ்தான் பகுதியில் மனித உரிமை மீறல் குறித்து இந்தியா குரல் கொடுத்தபோதிலும் இந்த விவகாரத்தில் சீனா, பாகிஸ்தான் நிலைப்பாட்டை எதிர்பார்த்து மெளனமாக இருக்கிறது. உலக அரசியல் வல்லுநர்கள் கருத்துகளின்படி, “இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிடாமல் ஒதுங்கி இருக்க வேண்டும். பலுசிஸ்தான் சுதந்திரத்துக்கு அளிக்கப்படும் ஆதரவு, பாகிஸ்தானின் இறையாண்மைக்கு நேரடியாக விடுக்கப்படும் சவாலாக மாறிவிடும். இதை காரணமாக வைத்து பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தை இழுத்தால் அது இக்கட்டான நிலைக்குத் தள்ளிவிடும். பிற நாட்டு உள்விவகாரங்களில் இந்திய அரசு தலையிடுகிறது என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படலாம். பலுசிஸ்தானையும், காஷ்மீரையும் ஒரே தளத்தில் வைத்துப் பார்த்துவிட்டால் இந்தியாவுக்கே சிக்கலாகும்” என்று தெரிவித்துள்ளனர்.

அரசியல் வியூக வல்லுநரான அமிதாப் திவாரி ஆங்கில சேனலுக்கு அளித்த பேட்டியில், “பலுசிஸ்தான் சுதந்திர விவகாரத்தில் இந்தியாவின் எந்த ஆதரவும், காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் மீண்டும் தொடுவதற்குப் பாதையாக மாறிவிடும். சீனாவுடனும் இந்தியாவுக்குச் சிறப்பான நட்புறவு இல்லை. 2020ஆம் ஆண்டு கல்வான் மோதலுக்குப்பின் சீனா-இந்தியா உறவு சிறப்பாக இல்லை. பலுசிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் சீனாவின் முதலீடு அதிகமாக இருக்கும் நிலையில் பலுசிஸ்தானுக்கு இந்தியா அளிக்கும் ஆதரவு பிராந்தியத்தில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும். பாகிஸ்தான், சீனாவின் நட்புறவை நாமே வலுப்படுத்துவதற்கு துணைபுரிவதாக அமையும், சீனா- இந்திய எல்லைகள் மீண்டும் பதற்றமிக்கதாக மாறிவிடும். பலூச் பிரிவினைவாதிகளுக்கு எந்தவொரு வெளிநாட்டு ஆதரவையும் அளிக்க வேண்டாம் என இஸ்லாமியக் குடியரசும் எச்சரித்துள்ளது. இந்தச் சூழலில் இந்தியா ஆதரவு அளிக்கும்பட்சத்தில் ஈரான் போன்ற இஸ்லாமிய நாடுகளிடமிருந்து இந்தியா தன்னை அந்நியப்படுத்திக்கொள்ள வேண்டியதிருக்கும். ஈரானில் இந்தியா சார்பில் நடந்துவரும் சாபஹர் துறைமுகப் பணிகள், வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பின்னடைவாக அமைந்துவிடும். பலுசிஸ்தானின் இந்த அறிவிப்பு, ஆசியப் பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தும். ஏற்கெனவே ஊடுறுவல், தீவிரவாதப் பிரச்னை இருக்கும் நிலையில் இந்தியா இதில் கவனத்துடன் செயல்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

சீனா ஏன் உன்னிப்பாக கவனிக்கிறது?

பலுசிஸ்தான் நலன் இப்போதைக்கு சீனாவுக்கு மிகவும் முக்கியம். ஏனென்றால், 6,500 கோடி டாலர் மதிப்பில் உருவாகிவரும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் திட்டம் பலுசிஸ்தான் வழியாகவே செல்கிறது. இந்த திட்டம் சீனாவின் மேற்குப் பகுதியையும், அரபிக்கடலையும் இணைக்கிறது. இதற்காக சாலைமார்க்கம், ரயில் போக்குவரத்து, கடல்சார் போக்குவரத்தை சீனா தீவிரப்படுத்தி வருகிறது. மலாகா நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து செல்லும்போது கூடுதல் தொலைவும் செலவும் சீனாவுக்கு ஏற்படுகிறது. ஆனால், பலுசிஸ்தானின் அரபிக் கடல் வழியாகச் செல்லும்போது சீனாவுக்கு போக்குவரத்து எளிதாகும், செலவு பெருமளவு குறையும், மலாகா நீரிணையை எதிர்பார்க்கத் தேவையில்லை. இதற்காகவே பலுசிஸ்தானின் குவாடர் ஆழ்கடல் துறைமுகத்துக்காக சீனா அதிகளவில் முதலீடு செய்துள்ளது. குவாடர் நகரை மிகப்பெரிய வர்த்தக நகராகவும், துறைமுக நகராகவும் மாற்ற சீனா திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ‘ஈஸ்ட்பே எக்ஸ்பிரஸ்வே’, ‘நியூரோட் நெட்வொர்க்’, ‘எரிசக்தி கட்டுமானம்’, ‘குவாடர் சர்வதேச விமானநிலையம்’ என அடுக்கடுக்காக சீனா திட்டங்களை வைத்துள்ளது.

பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதை எந்த நாடேனும் அங்கீகரித்தால், சீனாவின் கோபம் உச்சத்துக்குச் செல்லும், அதன் நீண்டகாலத் திட்டங்கள் சீரழிந்துவிடும். ஆதலால், இப்போதுள்ள சூழலில் கருத்து ஏதும் தெரிவிக்காமல் மெளமான பார்வையாளராகவே சீனா இருக்கிறது.

மத்திய ஆசியா, ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தங்களின் தயாரிப்புகளையும், உற்பத்திப் பொருட்களையும் எளிதாகக் கொண்டு சேர்க்கவும், வர்த்தகத்தைப் பெருக்கவும் குவாடர் துறைமுகம் மிகச்சரியான வழியாக சீனா கருதுகிறது. அது மட்டுமல்லாமல், பலுசிஸ்தான் தாதுவளங்களில் செழிப்பான பகுதி. குறிப்பாக நிலக்கரி, செம்பு வளங்கள் அதிகமாக இருப்பதால், இங்கு சுரங்கப்பணிகளிலும் ஈடுபட சீனா திட்டமிட்டு வருகிறது. இதற்காக சாகை மாவட்டத்தில் செயின்டாக்-காப்பர் திட்டத்தையும் சீனா முன்மொழிந்து பாகிஸ்தானுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தச் சூழலில் பலுசிஸ்தான் சுதந்திரம் பெற்றுவிட்டதை எந்த நாடேனும் அங்கீகரித்தால், சீனாவின் கோபம் உச்சத்துக்குச் செல்லும், அதன் நீண்டகாலத் திட்டங்கள் சீரழிந்துவிடும். ஆதலால், இப்போதுள்ள சூழலில் கருத்து ஏதும் தெரிவிக்காமல் மெளமான பார்வையாளராகவே சீனா இருக்கிறது. பலுசிஸ்தான் விவகாரத்தில் இந்தியா கருத்துகளை கூறினால், சீனாவின் எதிர்வினையும் கடுமையாக இருக்கும் என்று அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். பலுசிஸ்தான் மீதான பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிற்கு ஏதேனும் சவால் ஏற்பட்டால், அது சீனாவின் நீண்டகாலத் திட்டங்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்கும். தற்போதைய சூழலில் பலுசிஸ்தானின் சுதந்திர அறிவிப்பு என்பது சாத்தியக்கூறுக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கும் எனத் தெரிகிறது. பலுசிஸ்தானின் அதிகாரபூர்வ சுதந்திரம், சீனாவின் முதலீடுகளுக்குப் பல வழிகளில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

விருப்பமில்லாமல் இணைந்த பலுசிஸ்தான்

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட பலுசிஸ்தான், பாகிஸ்தான் ராணுவத்தின் அழுத்தத்தின் காரணமாக 1948ஆம் ஆண்டு மார்ச் 27 அதிகாரபூர்வமாக இணைந்து, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இருப்பினும், வலுக்கட்டாயமாக பாகிஸ்தானோடு சேர்க்கப்பட்டதாக பலுசிஸ்தான் மக்கள் நம்புகிறார்கள். அந்நாட்டு மக்கள் தங்களை ஒரு சுதந்திர நாடாகப் பார்க்க விரும்பினாலும் கடந்த 50 ஆண்டுகளாக அது நடக்கவில்லை. அதனால், பாகிஸ்தான் அரசு மற்றும் அதன் ராணுவத்துக்கு எதிராக மக்களின் போராட்டம் தொடர்ந்துவருகிறது. பலுசிஸ்தானின் சுதந்திரத்திற்காக பல பிரிவினைவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் பழைமையானது மற்றும் மிகவும் திறன்வாய்ந்த அமைப்புகளில் ஒன்று பிஎல்ஏ என்ற பலுசிஸ்தான் விடுதலை ராணுவம். கடந்த 2000ஆம் ஆண்டிலிருந்துதான் சுறுசுறுப்பாக விடுதலைக்காக இயங்கத் தொடங்கிய பிஎல்ஏ அமைப்பு பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு அமைப்புகள், ராணுவத்தினர் மீது தாக்குதல்தளை நடத்திவருகிறது. இந்த அமைப்பை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவமும் கடுமைாகப் போராடி இறுதியில் தீவிரவாதப் பட்டியலில் சேர்த்துவிட்டது.

பலுசிஸ்தான் தனி தேசமாக அங்கீகரிப்பது சாத்தியமா

பலுசிஸ்தானை தனி தேசமாக அங்கீகரிக்க 6 முக்கிய அம்சங்கள் தேவை.

1. நிரந்தரமான மக்கள்தொகை

ஓர் அரசுக்கு அதன் எல்லைக்குள் வசிக்கும் நிலையான மக்கள்தொகை இருக்க வேண்டும். பலுசிஸ்தான் தனித்துவமான கலாசார, இன மற்றும் மொழி அடையாளங்களைக் கொண்ட, பலூச் மக்களே பெரும்பாலும் இருக்கிறார்கள். அப்பகுதியில் வசிக்கும் பல்வேறு சமூகங்களை உள்ளடக்குவது தொடர்பான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

2. எல்லை வரையரை

ஒரு நாட்டிற்கு, அது தனது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளும், தெளிவான நிலப்பரப்பும் அவசியம். ஆனால், பலுசிஸ்தானுக்கு அது அல்லை. அதன் எல்லைப் பகுதி பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் சில பகுதிகளில் பரவியுள்ளது. முக்கியமான பகுதி, பாகிஸ்தானுக்குள்ளேயே அமைந்துள்ளது. பலுசிஸ்தானின் சுதந்திரக் கோரிக்கைக்கு இதுவே மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக அமையும்.

3. ஸ்திரமான அரசாங்கம்

ஒரு தேசம் புதிதாக அங்கீகரிக்கப்படும்போது, சட்டம்-ஒழுங்கு பராமரித்தல், அரசு நிறுவனங்களை நிர்வகித்தல், பொதுச் சேவைகளை வழங்குதல் மற்றும் தனது ஆட்சிப் பகுதியை நிர்வகித்தல் ஆகியவற்றைச் செய்யக்கூடிய, திறம்படச் செயல்படும் ஓர் அரசாங்கம் தேவைப்படுகிறது. பலுசிஸ்தானில் ஏற்கெனவே பல போராட்டக் குழுக்கள் செயல்படும்போது, ஸ்திரமான அரசை உருவாக்குவது சாத்தியமற்றது.

4. சர்வதேச உறவுகளை வளர்த்தல்

இறையாண்மை பெற்ற ஒரு தேசம், மற்ற நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்த வேண்டும், வளர்க்க வேண்டும். சர்வதேச விவகாரங்கள், ஒப்பந்தங்கள், ராஜாங்கரீதியான உறவுகளை உருவாக்க வேண்டும். இவை அனைத்தும் பலுசிஸ்தானால் சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்.

ஐநா சபை

5. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பரிந்துரையைப் பெற வேண்டும். ஐ.நா. கவுன்சிலில் உள்ள 15 உறுப்பினர்கள் கவுன்சிலில் குறைந்தபட்சம் 9 நாடுகளின் ஆதரவைப் பெற வேண்டும். வீட்டோ பவர் உள்ள நாடுகள் எந்தவிதமான தடையும் தெரிவிக்கக்கூடாது. வீட்டோ பவர் உள்ள அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா நினைத்தால் மனுவை நிறுத்தவும் முடியும்.

6. ஐ.நா. பொதுச்சபையில் வாக்கெடுப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பலுசிஸ்தான் மனுவை ஏற்கும்பட்சத்தில், அந்த மனு ஐ.நா. சபையில் வாக்கெடுப்புக்கு விடப்படும். 193 உறுப்பு நாடுகளில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெற்றால் மட்டுமே தனிதேசம் சாத்தியமாகும். இவை அனைத்தும் நடந்தால்தான் பலுசிஸ்தான் தனி தேசம் சாத்தியமாகும்.