கொடி மற்றும் தேசிய கீதத்துடன் தனி நாடாக அறிவித்த பலுசிஸ்தான்.. அங்கீகரிக்க கோரிக்கை!
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், அந்நாட்டிடமிருந்து சுதந்திரத்தை அறிவித்துள்ளது. மேலும், தன் நாட்டுக்காக தனிக்கொடி, தேசிய கீதம் மற்றும் நாணயத்தையும் அற்வித்துள்ளது. மேலும், தன்னை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தை அது வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், அரை நூற்றாண்டாக விடுதலை கோரி போராட்டம் நடத்தி வருகிறது. இத்தகைய சூழலில் பலுசிஸ்தான் விடுதலை படைகளின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான தாக்குதலை அது இன்றுவரை நிறுத்தவில்லை. இந்த நிலையில், பலுசிஸ்தான் பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரத்தை அறிவித்துள்ளது. ஜூலை 15ஆம் தேதி, மிர் யார் பலோச் என்பவரின் எக்ஸ் தளப் பதிவு மூலம் இவ்வறிப்பு வெளியாகி உள்ளது. அதில், ’பலூசிஸ்தான் குடியரசின் பாதுகாப்புப் படைகள், பலூசிஸ்தானின் 85 சதவீத நிலப்பரப்பைப் பாதுகாத்துள்ளன. பலூசிஸ்தான் தனது தேசிய கீதமான 'மா சுகேன் பலூச்சானி'யை ஏற்றுக்கொண்டு, தனது தேசியக் கொடியை அறிமுகப்படுத்தி, 'பலூச்சி ஃபாலுஸ்' என்ற தனது சொந்த நாணயத்தையும் நிறுவியுள்ளது’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுதொடர்பான அறிக்கையில், ’அப்பகுதி முழுவதும் உள்ள தங்கம் மற்றும் செப்புச் சுரங்கங்கள், எரிவாயு வயல்கள், நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளிட்ட முக்கிய இயற்கை வளங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கின்றன’ என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில், பாகிஸ்தானின் இராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளின் உறுப்பினர்கள் ராஜினாமா செய்து பலூச் இயக்கத்தில் இணைந்துள்ளதாகவும், பலூசிஸ்தான் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் சிவில் நிர்வாகம் ஆகியவற்றை உள்ளடக்கிய 5,00,000 வீரர்களைக் கொண்ட ஒரு படை, 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்புப் படைகளை வீழ்த்துவதற்குத் தயாராக உள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, சுயமாக பிரகடனப்படுத்திக் கொண்ட நிர்வாகம், பலுசிஸ்தானை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்குமாறு சர்வதேச சமூகத்தை வலியுறுத்தியுள்ளது. பலுசிஸ்தான் போராளிகள் மற்றும் ஆர்வலர்கள் தங்களைத் தனி நாடாகப் பிரகடனப்படுத்திக் கொண்டாலும், நடைமுறையில் அது இன்னும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது.
பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் பலுச்சுகள் மற்றும் பஷ்டூன்கள் என இரு சமூக மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு, அந்நாட்டிற்குள் வேண்டாவெறுப்புடன் ஒன்றுகலந்த சமூகங்கள் இவை. இதில் பலுச்சு இன மக்கள் பலுசிஸ்தான் விடுதலைக்காகவும், பஷ்த்டூன்கள் பஷ்டூனிஸ்தான் விடுதலைக்காகவும் போராடி வருகிறார்கள். பாகிஸ்தான் அரசின் ஆட்சிமொழியான உருது இவர்களுக்கு பிரதான மொழி இல்லை என்றாலும், பலுசிஸ்தானியர்களுக்கு பலுச் மொழியும், பஷ்டூனியர்களுக்கு பஷ்டோ மொழியுமே பிரதான மொழிகளாக உள்ளன.
இந்த இரு சமூகங்களுமே பழங்குடித்தன்மை கொண்ட, ஆப்கன்- ஈரான் பண்பாட்டின் தாக்கம் கொண்ட, அதேசமயம் மிகுந்த தனித்துவமான சமூகங்களாக அறியப்படுகின்றன. எனினும், இரண்டு பிராந்தியங்களுமே பெரும் சமூக, பொருளாதார, அரசியல் புறக்கணிப்பை எதிர்கொள்பவை. இவற்றில் பலுச் சமூகம்தான் இன்று பாகிஸ்தானுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.
ஆப்கானிஸ்தான்-ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பிராந்தியமான இந்த பலுசிஸ்தான், பாகிஸ்தானுடைய நிலப்பரப்பில் 44% அளவுக்கு விரிந்திருக்கிறது. தவிர, அதன் மிகப் பெரிய மாகாணமும் பலுசிஸ்தான். ஆனால், பாலைவனம்சூழ் நிலமான பலுசிஸ்தானில் மக்கள் செறிவு குறைவு; ஆகையால், பாகிஸ்தானின் 25 கோடி மக்களில் 1.5 கோடி மட்டுமே கொண்ட பலுசிஸ்தானின் குரலுக்கான மதிப்பு குறைவாக உள்ளது. பிரிவினைவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் அரசாங்கம் பிராந்தியத்தின் வளங்களைச் சுரண்டி வருவதாகவும், அதேநேரத்தில் அதன் 15 மில்லியன் மக்கள்தொகையைப் புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த மாகாணம் வர்த்தகத்திற்கு முக்கியமாக உள்ளது. குவாதரில் ஆழ்கடல் துறைமுகங்கள் உள்ளன. இது தென்மேற்கு சீனாவை, பாகிஸ்தான் வழியாக அரேபிய கடலுடன் இணைக்கும் திட்டங்களில் ஒரு முக்கிய அங்கமாகும். இதையடுத்தே, பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், பலுசிஸ்தான் விடுதலை முன்னணி, சிந்துதேஷ் ரெவல்யூசனரி ஆர்மி, பலூச் ரிபப்ளிகன் கார்ட்ஸ், பலூச் தேசிய ராணுவம் என்று பல ஆயுதக் குழுக்கள் தனி நாடு முழக்கத்துடன் பலுசிஸ்தான் விடுதலைக்காகப் போராடிவருகின்றன.

