பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு.. அமெரிக்கா அதிரடி!
பலூசிஸ்தான் என்பது என்ன? போராடுவது ஏன்?
இந்தியாவுக்கு எதிராக அதிக வரி விதித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நிர்வாகம், அதேநேரத்தில் நமது அண்டை நாடான பாகிஸ்தானுடன் சமீபகாலமாக அதீத நெருக்கம் காட்டி வருகிறது. தவிர, பாகிஸ்தானுடன் கச்சா எண்ணெய் தொடர்பாகவும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதுவே உலகம் முழுவதும் பேசுபொருளாகி வரும் நிலையில், பலூசிஸ்தான் விடுதலை இராணுவத்தை (BLA), ’வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு’ என முத்திரை குத்தியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், அரை நூற்றாண்டாக விடுதலை கோரி போராட்டம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் மேற்குப் பகுதியில் பலுச்சுகள் மற்றும் பஷ்டூன்கள் என இரு சமூக மக்கள் அதிகம் வசிக்கின்றனர். பாகிஸ்தான் தனி நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு, அந்நாட்டிற்குள் வேண்டாவெறுப்புடன் ஒன்றுகலந்த சமூகங்கள் இவை. இதில் பலுச்சு இன மக்கள் பலுசிஸ்தான் விடுதலைக்காகவும், பஷ்த்டூன்கள் பஷ்டூனிஸ்தான் விடுதலைக்காகவும் போராடி வருகிறார்கள். பாகிஸ்தான் அரசின் ஆட்சிமொழியான உருது இவர்களுக்கு பிரதான மொழி இல்லை என்றாலும், பலுசிஸ்தானியர்களுக்கு பலுச் மொழியும், பஷ்டூனியர்களுக்கு பஷ்டோ மொழியுமே பிரதான மொழிகளாக உள்ளன. இந்த இரு சமூகங்களுமே பழங்குடித்தன்மை கொண்ட, ஆப்கன்- ஈரான் பண்பாட்டின் தாக்கம் கொண்ட, அதேசமயம் மிகுந்த தனித்துவமான சமூகங்களாக அறியப்படுகின்றன.
பலூசிஸ்தான் விடுதலைக்காகப் போராடும் அமைப்புகள்
எனினும், இரண்டு பிராந்தியங்களுமே பெரும் சமூக, பொருளாதார, அரசியல் புறக்கணிப்பை எதிர்கொள்பவை. இவற்றில் பலுச் சமூகம்தான் இன்று பாகிஸ்தானுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது. ஆப்கானிஸ்தான்-ஈரான்-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பிராந்தியமான இந்த பலுசிஸ்தான், பாகிஸ்தானுடைய நிலப்பரப்பில் 44% அளவுக்கு விரிந்திருக்கிறது. தவிர, அதன் மிகப் பெரிய மாகாணமும் பலுசிஸ்தான். ஆனால், பாலைவனம்சூழ் நிலமான பலுசிஸ்தானில் மக்கள் செறிவு குறைவு; ஆகையால், பாகிஸ்தானின் 25 கோடி மக்களில் 1.5 கோடி மட்டுமே கொண்ட பலுசிஸ்தானின் குரலுக்கான மதிப்பு குறைவாக உள்ளது.
பிரிவினைவாத இயக்கத்தின் ஆதரவாளர்கள், பாகிஸ்தான் அரசாங்கம் பிராந்தியத்தின் வளங்களைச் சுரண்டி வருவதாகவும், அதேநேரத்தில் அதன் 15 மில்லியன் மக்கள்தொகையைப் புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த மாகாணம் வர்த்தகத்திற்கு முக்கியமாக உள்ளது. குவாதரில் ஆழ்கடல் துறைமுகங்கள் உள்ளன. இது தென்மேற்கு சீனாவை, பாகிஸ்தான் வழியாக அரேபிய கடலுடன் இணைக்கும் திட்டங்களில் ஒரு முக்கிய அங்கமாகும். இதையடுத்தே, பலுசிஸ்தான் விடுதலை ராணுவம், பலுசிஸ்தான் விடுதலை முன்னணி, சிந்துதேஷ் ரெவல்யூசனரி ஆர்மி, பலூச் ரிபப்ளிகன் கார்ட்ஸ், பலூச் தேசிய ராணுவம் என்று பல ஆயுதக் குழுக்கள் தனி நாடு முழக்கத்துடன் பலுசிஸ்தான் விடுதலைக்காகப் போராடிவருகின்றன.
ஐந்து பிரிவினைவாத எழுச்சிகளைச் சந்தித்த பலுசிஸ்தான்
1947இல் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டதிலிருந்து இந்தப் பகுதி குறைந்தது ஐந்து பிரிவினைவாத எழுச்சிகளைச் சந்தித்துள்ளது. மேலும், இந்தியா 1971 போரை ஒட்டி எப்படி வங்கதேச விடுதலைக் குழுக்களுக்குத் துணையாக இருந்ததோ அப்படி பலுச் குழுக்களுக்கும் உதவ வேண்டும் என்ற குரல் இந்தக் குழுக்கள் மத்தியில் ஒலிக்கிறது; ஏற்கெனவே இந்தக் குழுக்களின் செயல்பாடுகளுக்கும், தாக்குதல்களுக்கும் பின்னணியில் இந்தியா இருக்கிறது என்ற குரல் பாகிஸ்தான் அரசு தரப்பில் ஒலிக்கிறது.
இத்தகைய சூழலில் பலுசிஸ்தான் விடுதலை படைகளின் தாக்குதல்கள் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகின்றன. கடந்த மார்ச் 11 அன்று, ’ஜாஃபர் எக்ஸ்பிரஸ்’ என அழைக்கப்படும் ரயிலை பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் கடத்தி, ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 400 பேரை பணயக் கைதிகளாக பிடித்து, பாகிஸ்தானையே அதிரவைத்தது. பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பாதுகாப்புப் படைகள் அந்த ரயிலையும் மற்றும் அதன் பயணிகளையும் மீட்பதற்கு பெரும் பாடுபட்டது. இதில், ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 21 பேர் உயிரிழந்தனர். எனினும், அது பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிரான தாக்குதலை இன்றுவரை நிறுத்தவில்லை. ஆம், அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்களையும் அவர்கள் செல்லும் குடும்பங்களையும் குறிவைத்துத் தாக்கி வருகிறது. சமீபத்தில், அதாவது பஹல்காம் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதத்தில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையைக் கையில் எடுத்தது. அப்போது, பலுசிஸ்தானும் பாகிஸ்தான் ராணுவ வீரர்களைத் தாக்கிக் கொன்றது. இது, இன்றும் தொடர்கிறது. நேற்றுவரை அது, சில ராணுவ வீரர்களைக் கொன்றிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் - பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு
இந்த நிலையில், பலூசிஸ்தான் விடுதலை இராணுவத்தை (BLA) வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்தியுள்ளது. ’மஜீத் படைப்பிரிவு’ என்றும் அழைக்கப்படும் BLA, 2019 ஆம் ஆண்டு தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து ’சிறப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி’ (SDGT) அமைப்பாக மாறியது. இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அந்த அமைப்பை, பயங்கரவாத அமைப்பு என முத்திரை குத்தியுள்ளது. 2019 ஆம் ஆண்டு தொடர்ச்சியான தாக்குதல்களைத் தொடர்ந்து BLA ஒரு SDGT ஆக நியமிக்கப்பட்டது.
அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ, ”இந்த நடவடிக்கை பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது. இந்தக் கொடுமைக்கு எதிரான நமது போராட்டத்தில் பயங்கரவாதப் பெயர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான ஆதரவைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.