பாகிஸ்தானுக்கு அடுத்த இடி.. குறிவைக்கும் பலூசிஸ்தான்.. எழுத்தாளரின் வைரல் பதிவு!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம், இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி நேற்று இரவு முதல் போரைத் தொடங்கியது. இதையடுத்து, இந்தியா அதற்குத் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதுடன், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் ட்ரோன்களை வழிமறித்து தகர்த்து வருகிறது. இதனால் இரு நாடுகளிடையே போர் நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் பதிலடி ராணுவத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், பாகிஸ்தான் ராணுவம் திணறிவரும் நிலையில், மற்றுமொரு அடியாக, பலூச் விடுதலை இராணுவமும் அந்நாட்டைத் தாக்கி வருகிறது. அந்த வகையில், பலூசிஸ்தான் மாகாணத்தின் போலன் மற்றும் கெச் பகுதிகளில் நடந்த இரண்டு தனித்தனி தாக்குதல்களுக்கு பலூச் விடுதலை இராணுவம் (BLA) பொறுப்பேற்றுள்ளது. இதில் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
முதல் தாக்குதலில், போலனின் மாக், ஷோர்கண்ட் பகுதியில் பாகிஸ்தான் இராணுவ வாகனத் தொடரணி மீது, BLAஇன் சிறப்புப் படை (STOS) ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் IED தாக்குதலை நடத்தியது. இந்த குண்டுவெடிப்பில் சிறப்பு நடவடிக்கை தளபதி தாரிக் இம்ரான் மற்றும் சுபேதார் உமர் பாரூக் உட்பட 12 வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் இராணுவ வாகனம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. மற்றொரு நடவடிக்கையில், கெச்சின் குலாக் டைக்ரான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழக்கும் படையை BLA போராளிகள் குறிவைத்தனர். இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து பலூச் விடுதலை இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ஜீயாந்த், “பலூச் நிலத்தின் சுதந்திரப் போராளிகளால் ஆன இந்த கூலிப்படை, ஆக்கிரமிப்பு இராணுவத்தின் மீதான தாக்குதல்கள் அதிக தீவிரத்துடன் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பிரபல பலூச் எழுத்தாளர் மிர் யார் பலூச், பாகிஸ்தானிடமிருந்து பலூசிஸ்தான் சுதந்திரம் பெற்றுள்ளதாகவும், புது டெல்லியில் பலூச் தூதரகத்தைத் திறக்க இந்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அவர் பலூசிஸ்தானுக்கு அமைதி காக்கும் படைகளை அனுப்புமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தியுள்ளார். தவிர, பாகிஸ்தான் இராணுவம் அப்பகுதியைவிட்டு வெளியேற வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர், “பயங்கரவாத பாகிஸ்தானின் வீழ்ச்சி நெருங்கி வருவதால், விரைவில் ஒரு சாத்தியமான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். நாங்கள் எங்கள் சுதந்திரத்தை கோருகிறோம். மேலும் பலுசிஸ்தானின் அதிகாரப்பூர்வ அலுவலகம் மற்றும் டெல்லியில் தூதரகத்தை அனுமதிக்குமாறு இந்தியாவைக் கேட்டுக்கொள்கிறோம். பலுசிஸ்தான் ஜனநாயகக் குடியரசின் சுதந்திரத்தை அங்கீகரிக்க ஐக்கிய நாடுகள் சபையையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். மேலும் அங்கீகாரத்திற்கான உங்கள் ஆதரவை வழங்க அனைத்து ஐ.நா. உறுப்பினர்களின் கூட்டத்தையும் கூட்ட வேண்டும். பலூசிஸ்தானின் கட்டுப்பாடு விரைவில் சுதந்திர பலூசிஸ்தான் மாநிலத்தின் புதிய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும், மேலும் ஒரு இடைக்கால முடிவான இடைக்கால அரசாங்கம் விரைவில் அறிவிக்கப்படும்” என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.