பிரதமர் மோடி, டொனால்ட் ட்ரம்ப் pt web
சிறப்புக் களம்

“உலக சர்வாதிகாரிகளே ஒன்றுபடுங்கள் என்பது போல...” - அமெரிக்கா - இந்தியா ஓர் ஒப்பீடு!

“சர்வாதிகாரியாகவும், எதேச்சதிகாரியாவும் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம்தான் ட்ரம்பிற்குப் பிடிக்கிறது. ‘உலக சர்வாதிகாரிகளே ஒன்றுபடுங்கள்’ எனும் கொள்கையில்தான் ட்ரம்ப் இருப்பதுபோல் தெரிகிறது” - ராஜன்குறை கிருஷ்ணன்

Angeshwar G

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பொறுப்பேற்றாலும் ஏற்றார், அவர் குறித்தும் அமெரிக்கா குறித்தும் தினமும் அதிரடியான சில செய்திகளாவது வந்துவிடுகின்றன. அமெரிக்க அதிபராக அவர் எடுக்கும் முடிவுகள் உலகளவிலும் எதிரொலிக்கும் என்பதுதானே நிதர்சனம். அதற்காகவாவது அந்த செய்திகளை கவனிக்க வேண்டும்தானே..

அதிபராக ட்ரம்பின் முதல் பதவிக்காலத்திற்கும், இரண்டாவது பதவிக்காலத்திற்கும் இடையே மிகப்பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கும் என்பதைத்தான் உலகம் முழுவதிலுமுள்ள அறிஞர்கள் மீண்டும் மீண்டும் கூறிவருகின்றனர். ட்ரம்பின் வெற்றியை வலதுசாரிப் புரட்சி என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனெனில், அவர் அமெரிக்க தேசநலன் என்ற கருத்திற்காக அனைத்து ஜனநாயக சமநிலைகளையும் மீறத் தயாராக இருக்கிறார்.

டொனால்டு ட்ரம்ப்

இந்த செயல்பாட்டுமுறை உலகெங்கிலும் உள்ள வலதுசாரி அரசாங்கங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருக்கிறது. உதாரணத்திற்கு, அர்ஜெண்டினா, ஹங்கேரி போன்ற நாடுகளின் அரசாங்கங்களைச் சொல்லலாம். பெரும்பான்மையான வலதுசாரி அரசாங்கங்கள் இருக்கும் நாடுகளில் இஸ்லாமிய மக்கள் அச்சத்துடனே வாழ்க்கையைக் கழிக்கின்றனர் என்பதையும் உலக அரசியலை உற்று நோக்குபவர்கள் தெரிவிக்காமல் இல்லை.

இந்த இடத்தில்தான் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் ஒப்பீடுகள் என்ன? இந்தியா மீது அமெரிக்கா எவ்வகையில் ஆதிக்கம் செலுத்தும்? எந்த திசையில் இந்தியா பயணிக்கிறது? என்பது குறித்து உலக அரசியலை கவனிக்கும் ஆய்வாளர்களிடம் பேசினோம்.

அமெரிக்காவுக்கு சாதகமாக இந்தியா மாறுமா?

இதுதொடர்பாக எழுத்தாளர் இரா. முருகவேளைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறுகையில், “உலகமயமாதல், தாராளமயமாதல்தான் உலகம் முழுவதும் நிகழ்ந்து வருகிறது. மக்களை பாதிக்கும் பொருளாதாரங்களைக் கொண்டு வருவது, நினைத்தே பார்க்க முடியாத பல விஷயங்களை தலைகீழாக மாற்றுவது என்பதெற்கெல்லாம் பாசிசத்தன்மை கொண்ட கட்சிகள்தான் தயாராக இருக்கும்.

இரா. முருகவேள்

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா தீவிரமாக செயல்படுவதை குறைக்க ட்ரம்ப் விரும்புகிறார். ட்ரம்ப் சொல்வதையெல்லாம் கேட்டுக்கொண்டே இருந்தால், இந்தியா அமெரிக்காவுக்கு ஜால்ரா அடிக்கும் நாடு போல் மாறிவிடும். எனவே, அணிசேரா நாடுகள் போன்று செயல்படுவதுதான் இந்தியாவிற்கு சரியாக இருக்கும். ஆனால், பிரிக்ஸில் இருந்து விலகி அமெரிக்காவிற்கு சாதகமாக இந்தியா மாறினால், அமெரிக்கா இந்தியாவை எடுபுடியாகத்தான் நடத்தும்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாக மேலும் கருத்துகளைக் கேட்பதற்காக புதுதில்லி அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் ஆய்வறிஞருமான ராஜன்குறை கிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

உலகில் பல நாடுகளில் வலதுசாரி அரசாங்கங்கள்தான் இருக்கின்றன. இது எம்மாதிரியான அரசியலை நோக்கி மக்களை இட்டுச் செல்லும்?

“150 அல்லது 200 வருடங்களுக்கு முன் சமத்துவ சமூகம் அமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பல நாடுகளில் முயற்சிகள் நடந்தது. ஆனால், 2000ஆம் ஆண்டு பிறந்தபின் நியூயார்க் இரட்டை கோபுர தகர்ப்பு, ஈரான் - ஈராக் போர் போன்ற இம்மாதிரியான சம்பவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பெரிய வலதுசாரி அலை எல்லா நாடுகளுக்கும் பரவும் தன்மையை ஏற்படுத்தியது. இதனிடையே, எகிப்து போன்ற நாடுகளில் ‘வசந்தத்தின் புரட்சி’ போன்ற விஷயங்கள் எல்லாம் நடந்தது என சொன்னார்கள். ஆனால், அது எதுவும் உலக நாடுகள் மத்தியில் பெரிய அளவில் பரவவில்லை.

எப்போதெல்லாம் முதலாளித்துவ அமைப்புகள் நெருக்கடிக்கு உள்ளாகிறதோ, அப்போதெல்லாம் தீவிர வலதுசாரி தன்மைக்கான செயல்பாடுகளை அவை மிக முனைப்புடன் மேற்கொள்ளும்.. ஒருகாலத்தில் ஆதிக்கம் செலுத்திய சோசியலிசப் புரட்சிகளும், கம்யூனிசப் புரட்சிகளும் மெதுவாகப் பின்னடைவைச் சந்தித்தது. இப்போது அந்த பெண்டுலம் வலது பக்கம் அதாவது வலதுசாரிகள் பக்கம் நகர்ந்துள்ளது. தற்போதைய காலக்கட்டம் என்பது பெரிய எதிர்ப்புரட்சிக் காலக்கட்டமாக மாறி, வலதுசாரிகளின் எழுச்சி எல்லா இடத்திலும் இருக்கும் காலமாக உள்ளது. இந்தப்போக்கு மறுபடியும் மாறுமா என்றெல்லாம் தெரியவில்லை.

எப்போதெல்லாம் முதலாளித்துவ அமைப்புகள் நெருக்கடிக்கு உள்ளாகிறதோ, அப்போதெல்லாம் தீவிர வலதுசாரி தன்மைக்கான செயல்பாடுகளை அவை மிக முனைப்புடன் மேற்கொள்ளும்..

ஏனெனில், தொழில்நுட்பத்தில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்கள், அரசியலில் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைக் கணிக்க முடியவில்லை. உதாரணத்திற்கு, சமூக ஊடகங்கள் வந்தபோது மிக முற்போக்காக இருக்கும் என நினைத்தோம். ஆனால், முற்போக்கிற்கு பதிலாக அதிகமான பிற்போக்கு சக்திகள் சமூக ஊடகங்களைக் கையாளுவதைப் பார்க்கிறோம். பொய்யான தகவல்களைப் பரப்புவதற்கு வாட்ஸ் அப் மிக வசதியாக உள்ளது. இம்மாதிரியான மாறிவரும் தொழில்நுட்பச் சூழலில் இந்த வலதுசாரி எழுச்சியை எப்படித் தடுத்து நிறுத்த முடியும்?

சமத்துவ சமூகங்களை உருவாக்கும் முற்போக்கு செயல்பாட்டிற்கு மக்களை எப்படி நகர்த்துவது என்பது குறித்தும் உறுதியாகத் தெரியவில்லை. ஊடகப் பெருக்கமும், கேளிக்கைப் பெருக்கமும், கவனச் சிதறலும் மக்களிடையே மிகப்பெரிய அளவில் இருக்கிறது. மானுடத் தன்னுணர்வைத் தொகுத்து முற்போக்கான மக்கள்திரளை ஒன்றுதிரட்டி செயல்படுவது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ட்ரம்ப்

ட்ரம்பின் வெற்றி அனைத்து நம்பிக்கைகளையும் துடைத்துப் போடுவதுபோலான மோசமான வெற்றி. முன்னணி ஜனநாயக நாடான அமெரிக்காவிலேயே மோசமான மனிதர் ஒருவர் கடுமையான இன வெறுப்பு அரசியலைப் பேசி ஆட்சிக்கு வரமுடியும் என்றால் இனி நாம் எங்கு சென்று மக்களாட்சியை எதிர்பார்ப்பது என்பதே திகைப்பாகத்தான் இருக்கிறது. நம்பிக்கையாக சொல்வதற்கு எந்த ஒரு அம்சங்களும் இல்லை, இதில் தமிழ்நாட்டின் நிலவரம் மட்டும்தான் சற்றே நம்பிக்கை அளிக்கிறது.

ட்ரம்ப்பின் மீள் வருகை இந்தியாவில் என்னமாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும்? இந்தியா இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

அமெரிக்காவின் தயவில்லாமல் இந்தியாவில் யாரும் ஆட்சி செய்வதே கஷ்டம் என்றுகூட சொல்லலாம்.

இந்தியாவால் எப்போதும் அமெரிக்காவின் தயவில்லாமல் இருக்க முடியாது. அமெரிக்கா என்பது மிகப்பெரிய முதலீட்டு சக்தி. அமெரிக்காவின் தயவில்லாமல் இந்தியாவில் யாரும் ஆட்சி செய்வதே கஷ்டம் என்றுகூட சொல்லலாம். அமெரிக்காவுடன் அதிகமான விஷயங்களில் அனுசரணையான போக்கு இருந்தால்தான் பெரும்பாலான உலக நாடுகளால் தப்பிக்க முடியும். எனவே, யாரும் அமெரிக்காவை எதிர்த்து அவ்வளவு சுலபமாக எதுவும் செய்துவிட மாட்டார்கள்.

முன்னாள் பிரதமர் நரசிம்மராவ்

நரசிம்மராவ் எப்போது அந்நிய முதலீட்டுக்கான கதவுகளைத் திறந்து, உலகமயமாதல் என்பதற்கான ஒன்றை ஆரம்பித்தாரோ அப்போதில் இருந்து, முதலீட்டிற்கான இந்தியாவின் சூத்திரக் கயிறுகள் அமெரிக்காவிடம்தான் அதிகம் இருக்கிறது. அப்படி இருக்கும்வரை அமெரிக்காவைத் தாண்டி நம்மால் எதுவும் செய்ய முடியாது. யார் அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, அவர்களுக்குத் தலையாட்டுவதைத் தவிர நமக்கு வேறு வேலையில்லை. நாம் அவர்களை ஆதரிப்பது எல்லாம் அமெரிக்காவுக்கு ஒரு பொருட்டல்ல; அமெரிக்காவின் ஆதரவுதான் இந்தியாவிற்கு தேவை. அனைத்து வளரும் நாடுகளும் அமெரிக்காவை சார்ந்திருக்கும் நாடுகள்தான். சீனா, ரஷ்யா, ஈரான், வடகொரியா போன்றவை அமெரிக்காவுக்கான எதிர்முனையாக உருவாகிறார்கள். ஆனால், அந்த எதிர்முனைக்கு இந்தியா போவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.

நாம் அவர்களை ஆதரிப்பது எல்லாம் அமெரிக்காவுக்கு ஒரு பொருட்டல்ல; அமெரிக்காவின் ஆதரவுதான் இந்தியாவிற்கு தேவை.

ரஷ்யாவுடன் இந்தியா தொடர்பில்தானே இருக்கிறது? இதை எப்படி எடுத்துக் கொள்வது?

சந்தர்ப்பவாத அரசியல்தான் செய்யமுடியும்; கொள்கை ரீதியில் எதுவும் செய்யமுடியாது. சந்தர்ப்பவாதமாக ரஷ்யாவிடம் எண்ணெய் கிடைத்தால் வாங்கிக்கொள்ளலாம், படேல் சிலை அமைப்பதற்கான சில பொருட்களை சீனாவிடம் இருந்துதானே இந்தியா வாங்கியது. வியாபாரத்திற்கு யாரெல்லாம் அனுசரணையாக இருப்பார்களோ அந்தப்பக்கம் எல்லாம் சற்றே சாய்ந்துகொள்ளலாமே தவிர அரசியல் ரீதியாக எதையும் செய்ய முடியாது.

அமெரிக்காவிலும் இந்தியாவிலும் வலதுசாரி அரசாங்கங்கள்தான் இருக்கிறது. இருநாடுகளுக்கும் இடையேயான ஒப்பீடுகள் என்ன?

இரண்டும் மோசமான வலதுசாரி அரசுகள்தான். ட்ரம்ப், சர்வதேச நலனுக்காக இல்லாமல், தேசிய நலனுக்காக செயல்படும் அதிபராக தன்னை காண்பிக்க விரும்புகிறார். எந்த ஒரு நாடும் அமெரிக்காவிடம் advantage எடுத்துக்கொள்ள முடியாது, அமெரிக்காதான் அனைத்து நாடுகளிலும் advantage எடுக்கும்.

மோடி வலதுசாரி என்பதால் ட்ரம்பிற்கு மோடியுடன் நட்புறவு இருக்கலாம். ஆனால், அமெரிக்காதான் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மனநிலையில்தான் ட்ரம்ப் இருப்பார். மோடிக்கும் வேறு சாத்தியங்கள் இல்லை. எதிர்த்து எதையும் செய்வதற்கான வாய்ப்புகளும் கிடையாது. இதை ‘மோடிக்கு ட்ரம்ப் விருந்து கொடுத்தார். இருவரும் சிரித்து சிரித்து பேசினார்கள்’ என காண்பிக்க முயலுவார்கள். குறிப்பாக, நட்பு நாடாக காட்ட முயலுவார்கள்.

மற்றபடி, இஸ்லாமிய எதிர்ப்பு, வலதுசாரி எதிர்ப்பு போன்றவற்றில் பிரதமர் மோடியை ட்ரம்ப் உற்சாகப்படுத்துவார். ஜனநாயக மதிப்பீடுகளின் மேல் ட்ரம்பிற்கு நம்பிக்கை இல்லாததால் அதற்கு எதிராக செயல்படுவதை நிச்சயமாக ஆதரிப்பார். யார் எல்லாம் சர்வாதிகாரியாகவும், எதேச்சதிகாரியாவும் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம்தான் ட்ரம்பிற்குப் பிடிக்கிறது. ‘உலக சர்வாதிகாரிகளே ஒன்றுபடுங்கள்’ எனும் கொள்கையில்தான் ட்ரம்ப் இருப்பதுபோல் தெரிகிறது” என்றார்.