பகத் பாசில்
பகத் பாசில்வேட்டையன் திரைப்படம்

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்: குறும்பும் சேட்டையுமாக ‘வேட்டையன்’ ‘பாட்டரி’ பகத் பாசில்!

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘வேட்டையன்’ திரைப்படத்தில் பகத் பாசில் ஏற்று நடித்திருந்த ‘பாட்டரி’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
Published on

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

இந்தியச் சினிமாவின் சிறந்த நடிகர்களுள் ஒருவர் பகத் பாசில். ஏன் இந்தியச் சினிமா என்று சொல்கிறேன் என்றால், கலாசார எல்லைகளைத் தாண்டி அவரால் ஒரு பாத்திரத்திற்குள் எளிதாக கூடு பாய்ந்து விட முடிகிறது. ஒரு சிறந்த கலைஞனின் அடையாளம் இதுதான். ‘மாமன்னன்’ திரைப்படத்தைக் கவனித்தால் அவர் பிறப்பால் மலையாளி என்பதை உணரவே முடியாது. சாதிய வெறி கொண்ட ஒரு தமிழ்நாட்டு ஆசாமியைப் போலவே தோற்றமளிப்பார்.

மாரி செல்வராஜ் - பகத் பாசில்
மாரி செல்வராஜ் - பகத் பாசில்மாமன்னன் திரைப்படம்

இன்றைய தேதியில் அதிகமாக சம்பளம் பெறும் பிஸியான நடிகர்களில் ஒருவராக பகத் பாசில் இருக்கிறார். பல சவாலான பாத்திரங்களை விரும்பிச் சென்று ஏற்கிறார். இப்படியொரு சூழலில் ‘வேட்டையன்’ படத்தில் நடிக்க எப்படி அவர் சம்மதித்தார் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பெரிய பேனர் என்பதாலா? சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பை தவற விடக்கூடாது என்றா? தெரியவில்லை. 

பகத் பாசில் என்னும் யானைக்கு சோளப் பொறியா?

‘வேட்டையன்’ திரைப்படத்தில் பகத் பாசில் ஏற்றிருக்கும் பாத்திரம் மிகச் சாதாரணமானது. ஹீரோவுடன் படம் முழுவதும் பயணிக்கும் எந்தவொரு முன்னணி நகைச்சுவை நடிகரும் செய்து விடக்கூடியது. என்றாலும் பகத் அந்தப் பாத்திரத்தை ஏன் ஏற்றார்? எப்படி இயக்குநர் அவரை cast செய்ய முடிவெடுத்தார். பகத் பாசிலின் நடிப்பை எப்போதும் வியப்பவனாக இந்தக் கேள்விகள் எனக்குள் எழுந்திருக்கின்றன. 

பகத் பாசில்
பகத் பாசில்வேட்டையன் திரைப்படம்

ஆனால் இப்படியொரு சாதாரணமான பாத்திரத்தையும் தன்னுடைய அசாதாரணமான நடிப்பால் மிளிரச் செய்திருக்கிறார் பகத். வேட்டையன் படம் வந்த புதிதில் பார்த்து முடித்த பிறகு மனதில் அழுத்தமாக நின்றவர் ரஜினியோ அல்லது அமிதாப் பச்சனோ அல்ல. ‘பாட்டரி’யாக நடித்த பகத் பாசில்தான். 

‘சிரிப்புத் திருடன் சிங்காரவேலு’ என்கிற கேலிச் சித்திர கேரக்டர், ஒரு காலக்கட்டத்தில், வார இதழ் வாசகர்களிடையே பிரபலமானது. அது போல், ஒரு காமெடியான திருடன் காரெக்டரை  'தொண்டிமுதலும் த்ரிக்சாக்ஷியும்’ என்கிற மலையாளத் திரைப்படத்தில் பிரமிக்கச் செய்யுமளவிற்கு நடித்து விட்டார் பகத். ஆனால் வேட்டையன் திரைப்படத்தில் அவர் காட்டியிருப்பது முற்றிலும் இன்னொரு பரிமாணம். 

பகத் பாசில்
பகத் பாசில்வேட்டையன் திரைப்படம்

எழுத்தாளர் சுஜாதாவின் ‘கணேஷ் - வசந்த்’ காரெக்டர்கள்

இந்தப் படத்தில் ‘பாட்டரி’யாக பகத் நடித்த பல காட்சிகளில், ஒரு பிரபலமான புனைவுக் கதாபாத்திரம் ஒன்று நினைவிற்குள் அலையடித்தபடியே இருந்தது. அது, எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களில் வரும் ‘வசந்த்’. கணேஷ் என்பவர் பிரபலமான வழக்கறிஞர். அறிவுஜீவி. மூளைக்குச் சவாலாக குற்றங்களை துப்பு துலக்குவதில் விற்பன்னர்.

சுஜாதாவின் ‘கணேஷ் - வசந்த்’ காரெக்டர்கள்
சுஜாதாவின் ‘கணேஷ் - வசந்த்’ காரெக்டர்கள்

இவருடைய ‘அராத்து’ அஸிஸ்டெண்ட்தான் ‘வசந்த்’. இவனும் புத்திசாலியே. ஆனால் குறும்புக்காரன். பார்க்கும் பெண்களிடம் எல்லாம் வழிபவன். குறுக்கு வழி சாகசங்களில் ஈடுபட்டு தர்மஅடி வாங்குபவன். ஆனால் உயிர் பிழைப்பவன். ‘நீ கரப்பாம் பூச்சி மாதிரிடா. சாவே கிடையாது’ என்பார் கணேஷ். சீனியருக்கும் ஜூனியருக்குமான முரணும் சுவாரசியமும் இந்தப் பாத்திரங்களை பிரபலமாக்கியது. 

வேட்டையன் படத்தில் வரும் ‘பாட்டரி’ பாத்திரம் எனக்கு ஜூனியர் லாயரான ‘வசந்த்’த்தை அழுத்தமாக நினைவுப்படுத்திக் கொண்டேயிருந்தன.

“கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுங்க” என்று பெண் காவல் அதிகாரி சொல்லும் போது (அதிலும் இளம் பெண் அதிகாரி)

“நீங்க சொன்னா விண்வெளில கூட வெயிட் பண்றேன்”

என்று பாட்டரி குறும்பாக பதிலளிக்கும் போது எனக்குச் சந்தேகமே வரவில்லை. அது நிச்சயம் ‘வசந்த்’ கேரக்டர்தான். அவன்தான் இப்படி பதிலளிப்பான். பாட்டரி செய்யும் புத்திசாலித்தனமான செய்கையைப் பார்த்து, ‘ஐ லவ் யூடா’  என்று புளகாங்கிதமாக சொல்வார் ரஜினி. அந்தச் சமயத்தில் கணேஷிற்கும் வசந்திற்குமான கெமிஸ்ட்ரி நினைவிற்கு வரத் தவறவில்லை. 

ரஜினிகாந்த் - பகத் பாசில்
ரஜினிகாந்த் - பகத் பாசில்வேட்டையன் திரைப்படம்

உதிரிக் குற்றவாளி என்னும் புத்திசாலி

‘வேட்டையன்’ திரைப்படத்தில் ‘பாட்டரி’ என்பவன் யார்? அவனுடைய இயற்பெயர் பாட்ரிக். சைபர் குற்றங்கள் தொடர்பான சில்லறைத் திருட்டுக்களில் ஈடுபடுவதால் ‘சைபர் பாட்ரிக்’ என்பது போலீஸ் ரெக்கார்டில் உள்ள செல்லப் பெயர்.

பகத் பாசில்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | ‘பாட்சா’ மார்க் ஆன்டனி வரிசையில் ‘ஜெயிலர்’ வர்மன்!

பணம் செலுத்துவதற்காக கடைகளில் ஒட்டப்படும் க்யூஆர் கோர்ட் கார்டை மாற்றுவதன் மூலம் குறுக்கு வழிகளில் சம்பாதிக்கிறான் பாட்டரி. காவல்துறையில் எஸ்.பி.யாக இருக்கும் அதியனிடம் (ரஜினிகாந்த்) ஒருமுறை பிடிபடுகிறான். அவனை குற்றவாளியாக பார்க்காமல் அவனுக்குள் இருக்கும் நுட்ப அறிவைக் கண்டு வியக்கும் எஸ்.பி., அவனை தன்னுடன் வைத்துக் கொள்கிறார். குற்றங்களைத் துப்பறியும் இன்ஃபார்மர் வேலை. அதாவது அங்கீகரிக்கப்படாத போலீஸ்காரன் பணி. ஏறத்தாழ அனைவரும் தன்னை திருடனாக மட்டுமே பார்க்கும் சூழலில், ‘மனிதனாக’ பார்க்கும் எஸ்.பிக்கு விசுவாசமாக பணியாற்றுகிறான் பாட்டரி. 

ரஜினிகாந்த் - பகத் பாசில்
ரஜினிகாந்த் - பகத் பாசில்வேட்டையன் திரைப்படம்

கல்வித்துறையில் நிகழும் பெரிய மோசடி, பெண்கள் மீதான வன்முறை, பாலியல் குற்றங்கள், என்கவுன்டர் மீதான விசாரணை என்று வேட்டையன் படம் முழுக்க சீரியஸாக பயணிக்கும் போது, சரவெடிக்கு நடுவே மத்தாப்பூ எரிவது மாதிரி தனது சேட்டைகளால் புன்னகைக்க வைக்கும் பாட்டரி பாத்திரத்தை ரசிக்காதவர்கள் எவருமே இருக்க முடியாது. 

பகத் பாசில்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | தில்லு முல்லு ‘டூயல் ரோல்’... பிரகாசமாக மின்னிய சௌகார் ஜானகி

படத்தின் ஆரம்பக் காட்சியில், காவல்துறையால் தேடப்படும் பெரிய குற்றவாளிகளுக்கு பணிவிடை செய்யும் சமையல்காரன் பாத்திரம் போல் அறிமுகமாகிறான் பாட்டரி. ஹார்லிக்ஸ் என்பது அவனது ஃபேவரைட் பானம். (இதெல்லாம் திரைப்படக் காட்சிகளுக்குள் வலுக்கட்டாயமாக நுழைக்கப்படும் paid விளம்பரமாக இருக்கலாம்!). அந்தப் பானத்தை ரசனையுடன் தயாரித்து அருந்தும் பாட்டரி, அந்த ரவுடிகளை ரகசிய காமிரா மூலம் பதிவு செய்து எஸ்.பி. சாருக்கு அனுப்புகிறான். 

பகத் பாசில்
பகத் பாசில்வேட்டையன் திரைப்படம்

குறும்பும் சமயோசிதமும் நிரம்பிய பாட்டரி

தங்களின் உரையாடலில் எஸ்.பியைப் பற்றி ரவுடிகள் அச்சத்துடன் பேசிக் கொண்டிருக்கும் போது, சமையல் உதவியாள் பாட்டரியிடம் கேட்கிறான்.

“என்ன.. எஸ்.பி.யைப் பத்தி ஓவரா பில்டப் கொடுக்கானுவோ?” - அதற்கு பாட்டரி சொல்லும் வசனம்.

“பில்டப் எல்லாம் இல்லடா. நெசம்” என்கிற பாட்டரி

“போலீஸ்காரங்கள்ல நாலு வகை உண்டு. ஆனா அதையும் மீறி ஒண்ணு இருக்கு” என்று எஸ்.பியின் காரெக்டரை வியக்கிறான். இதெல்லாம் வழக்கமாக ஹீரோவிற்கு காமெடி நடிகர்கள் தரும் பில்டப் காட்சிகள்.

பகத் பாசில் தன் திறமையை இப்படியெல்லாம் வீணடிக்கலாமா என்று தோன்ற வைக்கும் சலிப்பான காட்சிகள்.

கன்னியாகுமரியின் அரசுப் பள்ளியில் பணிபுரியும் சரண்யா என்கிற நேர்மையான ஆசிரியை, பள்ளியில் நிகழும் ஒரு மோசடி பற்றி எஸ்.பிக்கு நேரடியாக கடிதம் எழுதுகிறார். அதை வாசிக்கும் எஸ்.பி,, அதைப் பற்றி ரகசியமாக விசாரிப்பதற்காக பாட்டரியை அனுப்புகிறார்.

“விஷயம் வெளிய தெரியாம பார்த்துக்க” என்று எஸ்.பி. சொல்ல, பாட்டரியின் குறும்பான பதில் இது.

“போலீஸ்காரங்களுக்கு தெரியாம பார்த்துக்கிட்டாலே போதும்”.

எஸ்.பி. முறைக்க பாட்டரி சங்கடமான சிரிப்புடன் “ஸாரி.. சார்” என்கிறான்.

“எவ்ளோ கான்ஷியஸா இருந்தாலும் உண்மையை உளறிடறேன்” என்கிற பின்குறிப்பு வேறு. 

ரஜினிகாந்த் - பகத் பாசில்
ரஜினிகாந்த் - பகத் பாசில்வேட்டையன் திரைப்படம்

சரண்யாவைப் பின்தொடர்ந்து அவளைச் சந்திக்கும் பாட்டரி, கடிதத்தை நீட்ட, அவள் திகைத்துப் போகிறாள். “அய்ய்யயோ. இது லவ் லெட்டர் இல்ல. எஸ்.பிக்கு நீங்க எழுதின லெட்டர். மொட்டைக் கடுதாசியா எழுதாம, பெயர் போட்டு எழுதும் போதே தெரிஞ்சது, நீங்க ஒரு ஆர்வக் கோளாறுன்னு” என்று உரையாடலை ஆரம்பிக்கும் பாட்டரி தன்னுடைய பின்னணியைப் பற்றி சரண்யாவிடம் விவரிக்கிறான்.

“நீங்க போலீஸா?” என்று சரண்யா சந்தேகமாக கேட்க, பாட்டரி அதற்கு பெருமிதத்துடன் சொல்லும் பதில்.

“இல்ல. திருடன்”.

“உங்களை மாதிரி ஒரு அழகான டீச்சர் கிடைச்சிருந்தா நானும் பெரிய ஆளா ஆகியிருப்பேன்” என்கிறான் பாட்டரி. எனில், தனது வழக்கமான கடலை வறுக்கும் வேலையையும் ஆரம்பித்து விட்டான் என்று பொருள். 

பகத் பாசில் - துஷாரா
பகத் பாசில் - துஷாராவேட்டையன் திரைப்படம்

“உங்களுக்காக விண்வெளியில் கூட காத்திருப்பேன்”

தன்னைக் கவரும் பெண்களிடம் எல்லாம் அன்பு என்னும் விதையைத் தூவி விட்டு வரும் பாட்டரிக்கு, சரண்யா கொடூரமான முறையில் கொலை செய்யப்படும் சம்பவம் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

“நீங்க ஏன் இந்தக் கேஸ்ல இவ்வளவு ஈடுபாடு காட்டறீங்க?” என்று ASP ரூபா கேட்கும் போது,

“மத்தவங்க எல்லாம் என்னைத் திருடனா பார்த்த போது எஸ்.பி.சாரும்.. சரண்யாவும்தான் என்னை மனுஷனா பார்த்தாங்க” என்கிறான் பாட்டரி. 

பகத் பாசில்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்: ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ | பாசப்போராட்டத்தில் ரகுவரன்!

ஆசிரியை சரண்யா படுகொலை செய்யப்பட்ட சம்பவம், சமூகத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்துகிறது. அரசிற்கும் காவல்துறைக்கும் நெருக்கடி ஏற்படுகிறது. குற்றவாளியை (?!)  ‘என்கவுன்டர்’ செய்ய வேண்டிய கட்டாயம். என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆன, எஸ்.பியிடம் வழக்கு மாற்றப்படுகிறது. அதற்காகவே காத்திருந்த எஸ்.பி, “மூன்றே நாட்களில் இந்த வழக்கை முடிப்பேன்” என்று சபதம் ஏற்கிறார். 

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்வேட்டையன் திரைப்படம்

எஸ்.பியின் அலுவலத்திற்குள் பந்தாவாக நுழையும் பாட்டரியை தடுத்து நிறுத்தி “யார் நீங்க?” என்று விசாரிக்கிறார் ரூபா (ASP). “என் பிரெண்டுதான் அவரு. பார்க்கணும்” என்று அவன் சொல்ல, “ஒரு முக்கியமான மீட்டிங் போயிட்டிருக்கு. கொஞ்சம் வெளில வெயிட் பண்ணுங்க” என்று ரூபா சொல்லும் போதுதான், இந்தக் கட்டுரையில் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டு விட்ட வசனத்தைச் சொல்கிறான். 

பகத் பாசில்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | துள்ளலான நடிப்பில் இதயத்தை கவர்ந்த ‘தீபக்’ ரஜினிகாந்த்!

“பாட்டரி .. ஐ லவ் யூடா” …..

“இந்தக் கேஸை உடனே முடிக்கணும்” என்று தனது டீமிடம் ஆவேசமாக பேசிக் கொண்டிருக்கும் எஸ்.பி, வெளியே காத்திருக்கும் பாட்டரியை உள்ளே வரச் சொல்லி அறிமுகப்படுத்தி “இவனை நம்ம டீம்ல ஒருத்தனா டிரீட் பண்ணுங்க” என்று சொல்ல அனைவரும் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர். “ரூபா.. இப்ப நாம பேசின விஷயத்தையெல்லாம் பாட்டரிக்கு அப்டேட் பண்ணுங்க” என்று எஸ்.பி. சொல்ல, “அதுக்கு அவசியமே இல்லை சார்” என்கிறான் பாட்டரி.

ரூபாவுடன் பேசும் போதே ஒரு சின்ன காமிராவை ஃபைலுக்குள் அவன் ஒட்டி வைத்து விட்ட விஷயம் தெரிகிறது.

“வந்தவுடனே உன் வேலையை ஆரம்பிச்சிட்டியா..” என்று முறைப்புடன் கேட்கும் எஸ்.பி, பிறகு வழக்கு பற்றிய முக்கியமான தகவலை பாட்டரி சொன்னவுடன் செல்லமான கொஞ்சலுடன்

“ஐ லவ் யூடா” என்று சொல்ல சங்கடமான சிரிப்புடன்

“ஐ டூ சார்” என்று பாட்டரி சொல்லும் காட்சியில் பகத் பாசிலின் நடிப்பு ரசிக்க வைப்பதாக இருக்கிறது. 

குற்றவாளி பதுங்கியிருக்கும் இடத்தை செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடிப்பதற்கான உத்தரவை எஸ்.பி. இட “தர்ட்டி மினிட்ஸ் சார்” என்று ஓர் இளம் அதிகாரி எழுந்து செல்ல முயல்கிறார். அவரை அமர்த்தும் பாட்டரி, அதற்குள் இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி கற்பூரமாக எரிகிறான். 

பகத் பாசில்
பகத் பாசில்வேட்டையன் திரைப்படம்

‘குடிக்க மாட்டேன். அப்படியே சாப்பிடுவேன்’ - ஹார்லிக்ஸ் பிரியனான பாட்டரி

ASP ரூபாவிற்கு ஆரம்பத்தில் பாட்டரி மீது எரிச்சல் வந்தாலும் போகப் போக அவனது புத்திசாலித்தனம், குறும்பு, சேட்டை மீது தன்னிச்சையான ஈர்ப்பு வந்து விடுகிறது. இவர்களின் இருவருக்குமான கெமிஸ்ட்ரியும் சுவாரசியமாக இருக்கிறது. ரவுடிகளிடம் ரூபா மாட்டிக் கொள்ளும் போது “இருங்க மேடம் நான் வரேன்” என்று பாட்டரி சொல்லி முடிப்பதற்குள் ரவுடிகளை அடித்து வீழ்த்துகிறார் ரூபா.

பகத் பாசில்
பகத் பாசில்வேட்டையன் திரைப்படம்

அதைப் பார்த்து “சூப்பர் மேடம்” என்று கைத்தட்டி ரசிக்கிறான் பாட்டரி. இன்னொரு காட்சியில் ஒரு விசாரணைக்காக செல்லும் போது, “அதெல்லாம் பதில் சொல்ல முடியாது” என்று ஒரு பெண் சொல்ல “என்னை யாருன்னு நெனச்சீங்க. நான் டிஎஸ்பி. இவங்க என் அஸிஸ்டெண்ட் ரூபா. ஐடியைக் காட்டுங்க” என்று பாட்டரி பந்தா செய்யும் காட்சியும் சுவாரசியமானது. 

பகத் பாசில்
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | திருநங்கையாக ‘சூப்பர் டீலக்ஸ்’ விஜய்சேதுபதி

இப்படியொரு சுவாரசியமான பாத்திரத்தை இறுதியில் சாகடித்து அனுதாபம் ஈட்ட முயற்சிக்கும் இயக்குநரின் உத்தி அத்தனை சரியாகப்படவில்லை. அப்படியே கடைசி வரை விட்டிருக்கலாம். என்றாலும் எஸ்.பியின் உயிரை தன்னிச்சையாகக் காப்பாற்றும் பாட்டரி, பரிதாபமாக செத்துப் போகிறான்.

மாார்சுவரி பணியாளர் “உங்க பையனா?” என்று கேட்கும் போது எஸ்.பி. துயரத்துடன் தலையாட்டுகிறார். இருவருக்குமான அன்பும் பாசமும் அந்தக் காட்சியில் அழுத்தமாக வெளிப்படுகிறது. 

ரஜினிகாந்த் - பகத் பாசில்
ரஜினிகாந்த் - பகத் பாசில்வேட்டையன் படப்பிடிப்பு தளம்

இந்தச் சமூகமே தன்னைக் குற்றவாளியாக பார்க்கும் போது மனிதராக பார்க்கும் ஒரு நல்ல அதிகாரிக்கு விசுவாசமான ஒற்றனாக செயல்படும் ‘பாட்டரி’ என்கிற பாத்திரத்தில் பகத் பாசில் அசத்தியிருக்கிறார். அவரது புத்திசாலித்தனம், குறும்பு, சேட்டை போன்றவை அந்தப் பாத்திரத்தை மறக்க முடியாதபடி செய்திருக்கிறது எனலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com