‘புத்திசாலி கேப்டன்’ என தோனிக்கு இணையாக மற்றொரு வீரரை பெயரிட்ட அஸ்வின்; கடினமான பேட்ஸ்மேன் இவர்தான்?
இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக தடம்பதித்தவர் தமிழகத்தைச்சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். மூன்று வடிவத்திலும் 765 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இந்திய அரசு சமீபத்தில் பத்மஸ்ரீ விருதை அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிரோபியின் போது, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் தன்னுடைய ஓய்வை அறிவித்த அஸ்வின், சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடவிருக்கிறார்.
இந்நிலையில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் (AWS AI Conclave 2025) பங்கேற்ற ரவிச்சந்திரன் அஸ்வின், தன்னுடைய கிரிக்கெட் கரியரில் பந்துவீசுவதற்கு கடினமான பேட்ஸ்மேன், சிறந்த கேப்டன், சிறந்த டெஸ்ட் போட்டி, சிறந்த டிஸ்மிஸ்ஸல், சிறந்த சுழற்பந்துவீச்சு இணை முதலிய சுவாரசிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அவற்றை பார்க்கலாம்..
பந்து வீசுவதற்கு கடினமான பேட்ஸ்மேன்?
ஜோ ரூட்தான். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். குறிப்பாக அவரை சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறந்த கிரிக்கெட்டராக நான் மதிப்பிடுகிறேன். இடது கை சுழற்பந்துவீச்சுக்கு எதிராக அவருக்கு ஒரு பிரச்சனை இருந்தது, ஆனால் அவரை அவுட்டாக்கும் வழிகளை மிகவும் தாமதமாகதான் நான் கண்டுபிடித்தேன். ஸ்பின்னுக்கு எதிராக சிறந்த ஃபுட் வொர்க்கையும், அழகான கைகளையும் கொண்டிருக்கிறார்.
பிடித்த விக்கெட் டிஸ்மிஸ்ஸல்?
2014-ம் ஆண்டு க்ளென் மேக்ஸ்வெல்லை வெளியேற்றியதை சொல்வேன், அவர் என்னை அந்த போட்டியில் துவம்சம் செய்திருந்தார். அவரை அவுட்டாக்கி வெளியேற்றிய தருணம் பிடித்தமானது, ஆனால் அதில் எந்த பெருமையும் இல்லை.
பிடித்த டெஸ்ட் போட்டி?
2017 பெங்களூருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி மற்றும் 36 ரன்களுக்கு சுருண்ட பிறகு அடுத்த போட்டியில் மெல்போர்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இரண்டு போட்டிகள் பிடித்தமானவை.
2017 டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார். அந்த தொடரில் முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா வெற்றிபெற்று 1-0 என முன்னிலை பெற்றிருந்தது. ஆஸ்திரேலியா இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் என்ற நம்பிக்கை ஏற்பட்ட போது அஸ்வின் அதை முறியடித்தார். 4 போட்டிகள் கொண்ட அந்த தொடரில் 2-1 என இந்தியா வென்றது.
36 ரன் ஆல்அவுட்டுக்கு பிறகான மெல்போர்ன் போட்டியில் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு பங்காற்றினார். அது அவருக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பிடித்தமான போட்டியானது என்றால் பொய்யாகாது. 36 ரன்களுக்கு பிறகு இந்தியா அந்த தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.
உலகின் சிறந்த கேப்டன்?
அணியை கையாள்வது மற்றும் ஒரு வீரரிடமிருந்து சிறந்ததைப் பெறுவது என்றால், அது எம்எஸ் தோனிதான்.
ஆனால், ஆட்டத்தின் சூழலை படிக்கும் தந்திரோபாயத்தில் மிகவும் புத்திசாலித்தனமான நபர் என்றால், அது ஸ்டீவ் ஸ்மித் என்று நான் நினைக்கிறேன்.
சிறந்த பந்துவீச்சு பார்ட்னர்?
ரவீந்திர ஜடேஜா. அவர் பேட்ஸ்மேன்களை அவுட்டாக்குவது பற்றி அதிகம் யோசிக்க மாட்டார், அவருடைய தொழில்முறையில் சிறந்ததை பிடித்து முன்னேறி செல்கிறார். மேலும் களத்தில் நான் ஆக்கப்பூர்வமாக இருக்க, எனக்கு தேவையான வசதிகளையெல்லாம் செய்து கொடுத்தார் அவர்.
மிகவும் சவாலான வெளிநாட்டு ஆடுகளங்கள்?
தென்னாப்பிரிக்கா, அவர்கள் உங்களுக்கு பச்சை மாம்பாக்களைக் கொடுக்கும்போது பந்து வீசுவது மிகவும் கடினமான இடமாக இருக்கிறது.
பிடித்த என்டெர்டெய்னிங் கிரிக்கெட்டர்?
மார்னஸ் லாபுசனே, அவர் களத்தில் கொண்டு வரும் எனர்ஜி எனக்கு பிடித்திருக்கிறது.
உங்கள் பிரைம் ஃபார்மில் பந்துவீச விரும்பும் ஒரு வீரர்?
பிரையன் லாரா, அவர் இலங்கையில் 3 போட்டிகளில் 1000 ரன்களை குவித்தபோது முத்தையா முரளிதரனுக்கு எதிராக டாமினேட் செய்தார்.