ஒவ்வொரு மனிதருக்கும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் உள்ளன. அதில் ஒன்றாக சினிமாவும் உள்ளது. பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.
கன்னட திரைப்பட நடிகர் சிவராஜ்குமார் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். 62 வயதான சிவராஜ்குமார், சமீபத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற பைரதி ரங்கல் பட வெற்றிவிழாவில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு, அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தார். அவருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறப்பட்டது.
இச்சூழலில், அமெரிக்காவின் மியாமி புற்றுநோய் சிகிச்சை மையத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக, சிவராஜ்குமார் நேற்றுமுன் தினம் சென்றார். அவருக்கு வரும் 24ஆம் தேதி அறுவைசிகிச்சை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமார், இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ’விடாமுயற்சி’. சமீபத்தில் இப்படத்தில், அஜித் மற்றும் திரிஷா இணைந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் நிகழ்ச்சித் தொகுப்பாளரான விஜே ரம்யா நடித்து இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மலையாளத்தில் வெளியாகி வெற்றிப்படமான ஆர்டிஎக்ஸ் திரைப்படத்தை இயக்கிய நிகாஸ் ஹிதாயத் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், நாயகனாக நடிகர் துல்கர் சல்மானும் நாயகியாக பிரியங்கா மோகனும் நடிக்கின்றனர். ஆக்ஷ்ன் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார். ஏற்கெனவே, ஃபஹத் ஃபாசில் நடிக்கும் மலையாளப் படமொன்றிலும் எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் ’மிஸ்டர் பாரத்’ என்ற புதிய படத்தைத் தயாரிக்கிறார். இந்த படத்தில் பிரபல யூடியூபர் பாரத் என்பவர் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் சம்யுக்தா விஸ்வநாதன், பால சரவணன், நிதி பிரதீப், லிங்கா, ஆதித்யா கதிர் ஆகியோர் நடிக்க உள்ளனர். இயக்குநர் நிரஞ்சன் இந்த படத்தை இயக்குகிறார். இந்நிலையில் ’மிஸ்டர் பாரத்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ஜெய் தற்போது 'பேபி & பேபி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்கியுள்ளார். இப்படத்தில் சத்யராஜ், யோகி பாபு, பிரக்யா நாக்ரா, சாய் தன்யா, கீர்த்தனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட்டுள்ளார். மேலும் டீசர் மர்றும் ட்ரெய்லர் விரைவில் வெளியாக இருக்கிறது.
22வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறந்த நடிகருக்கான விருது 'மகாராஜா' படத்திற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. 'அமரன்' படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதை நடிகை சாய் பல்லவிக்கு வழங்கப்பட்டது. ’மெய்யழகன்' படத்திற்காக 'மக்களுக்குப் பிடித்த நடிகர்' என்ற பிரிவில் விருதை அரவிந்த்சாமி வென்றார். 'வேட்டையன்' படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது, துஷாரா விஜயனுக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் பேசிய இயக்குநர் பாக்யராஜ், ” 'கங்குவா' திரைப்படத்திற்கு வந்த கடுமையான விமர்சனங்களைப் பார்த்து கவலைப்பட்டேன். ஒருசில திரைக்கதை குறைபாடுகளைத் தவிர திரைப்படம் அருமையாக இருந்தது. நல்ல திரைப்படம்தான் 'கங்குவா'. அவ்வளவு பெரிய உழைப்பு அப்படத்தில் இருந்தது. சிறுசிறு குறைகளை விமர்சிக்கலாம். ஆனால், மக்கள் அந்தப் படத்தைப் பார்த்திடவே கூடாது என்ற நோக்கத்தில் கட்டம் கட்டி கடுமையாக விமர்சிப்பது மிகவும் தவறான விஷயம். நம்முடைய சினிமாவை நாமே வீழ்த்தக் கூடாது. பொறுப்புடன் திரைப்படங்களை விமர்சிக்க வேண்டும்" என அவர் தெரிவித்தார்.
அம்பேத்கரை யாராலும் ஒதுக்க முடியாது என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், ”பாபாசாகேப் அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, புறம் தள்ளவும் முடியாது. அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டமைக்கவே முடியாது. என்பதை அமித் ஷாவும் பாஜகவினரும் புரிந்துகொண்டிருப்பார்கள் என நம்புகிறேன். அம்பேத்கர் பெயருக்கு பின்னால் இருக்கும் பவரை இப்போது உணர்ந்திருக்கிறார்கள். அம்பேத்கரின் கருத்துகளை கொண்டு நமக்குள் இருக்கும் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டிய நேரம் இதுதான் என நினைக்கிறேன். பாபாசாகேப் அம்பேத்கரை பின்பற்றுபவனாக பெருமையாக உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால், தற்போது 'துடரும்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மோகன்லால் தற்போது தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசிய மோகன்லால், தனது அடுத்த படத்தை ’ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்க உள்ளதாக கூறினார். பகத்பாசில் நடிப்பில் வெளியாகி இருந்த ’ஆவேஷம்’ படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வரும் நிலையில் தனக்கு கணவராக வருபவரின் தகுதிகளை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார். அவர், “ஒரு உறவில் அன்பு, அக்கறை, நல்ல இதயம், வெளிப்படைத்தன்மை, உண்மை போன்றவை இருப்பது அவசியம். இது என்னிடம் இயல்பாகவே இருக்கிறது. என்னை போன்ற ஒத்த குணங்களைக் கொண்ட ஒருவர்தான் என் கணவராக வரவேண்டும் என்று விரும்புகிறேன். எனது ஏற்ற தாழ்வுகள் அனைத்திலும் அவர் துணையாக நிற்க வேண்டும். நேர்மையாகவும், கவனத்துடனும், பொறுப்புடனும் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.