இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக உருவாகி வந்த படம்தான் விடாமுயற்சி. படத்தில் த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். அஜர்பைஜானில் ஹாலிவுட் தரத்தில் படம் உருவான நிலையில், படத்தின் டீசர் வெளியாகி பட்டையை கிளப்பி இருந்தது. படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான sawadeeka பாடலும் சோசியல் மீடியாவை அதிரவைத்தது.
முதலில் பொங்கலுக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ரசிகர்களும் “பொங்கல் கோப்பை மேல அஜித் பேர எழுதுங்கப்பா” என துள்ளிக்குதித்தனர். ஆனால், கடந்த ஆண்டின் கடைசி நாளில் வெளியான அறிவிப்பு, அஜித் ரசிகர்களின் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கவலையை பரிசாகக் கொடுத்தது. ஏனெனில், விடாமுயற்சி வெளியீடு தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, தனது ரசிகர்களுக்கு பொங்கல் பரிசாக தனது கார் ரேஸ் வெற்றியை கையளித்தார் அஜித். இத்தகைய சூழலில் விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. கார் ஸ்டண்டுடன் ஆரம்பிக்கும் ட்ரைலர் காதல் காட்சியில் நகர்ந்து மீண்டும் ஆக்சனில் முடிவடைகிறது. ட்ரைலரில் இடம்பெற்றுள்ள வசனங்களும் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது. அஜித் கூறுவதுபோல் அமைந்துள்ள வசனமொன்று, “எனக்கு இந்த ஜெனரேசன பத்தி தெரியாது கயல். நாம சின்னபிள்ளையா இருந்தப்ப வாட்ச் கெட்டுப்போச்சுனா ரிப்பேர் பண்ணுவோம், டிவி கெட்டுப்போச்சுன்னா ரிப்பேர் பண்ணுவோம். தூக்கிப்போட மாட்டோம்” என இருக்கிறது.
அனிருத்தின் இசையும் வழக்கம்போல் கவனத்தை ஈர்க்கிறது. ட்ரைலரை தனது இசையால் அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார். ட்ரைலரில் இடம்பெற்றுள்ள விடாமுயற்சி பாடல் வரிகளும் அசத்தலாக அமைந்துள்ளது. ட்ரைலரின் முடிவில் படம் பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் ப்ரேம் பை ப்ரேமாக கொண்டாடி வருகின்றனர். வெளியான ஒரு மணி நேரத்தில், ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது ட்ரைலர்.
அஜித்தின் படங்கள் பொங்கலுக்கு திட்டமிடப்பட்டு பிப்ரவரியில் வெளியாவது ஒன்றும் புதிதும் அல்ல. இதற்கு முன் என்னை அறிந்தால், வலிமை, ஜி, அசல் போன்ற படங்களும் ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டு பிப்ரவரி மாதத்தில் வெளியான திரைப்படங்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.