முக்தியடைந்த கோபன்
முக்தியடைந்த கோபன்புதியதலைமுறை

கேரளா: ‘ஏகாதசி நாளில் மரணமடைந்தால் நல்லது..’ குடும்பத்தினரால் உயிருடன் சமாதி செய்யப்பட்ட நபர்?

தன் ‘அதீத’ ‘மூட’ நம்பிக்கையினால் திருவனந்தபுரத்தை சேர்ந்த கோபன் என்பவர், ஏகாதசியன்று தியானம் செய்தபடி உயிர்நீக்க முயன்றுள்ளார். அதாவது, தன்னைத்தானே சாகடிக்கத் துணிந்துள்ளார் அந்நபர். என்ன நடந்தது? பார்க்கலாம்...
Published on

ஏகாதசி நாளில் மரணமடைவோர் மோட்சத்திற்கு செல்வர் என்பது, இந்து மத நம்பிக்கையாக உள்ளது. அதிலும் குறிப்பாக வைகுண்ட ஏகாதசியன்று ஒருவர் ‘இயற்கையாக’ உயிர்நீத்தால் அவருக்கு மறுபிறப்பு கிடையாது என்ற நம்பிக்கை உள்ளது. எந்த ஒரு நம்பிக்கையுமே மூடநம்பிக்கையாக மாறாத வரைதான் பிரச்னை இல்லாமல் செல்லும். இங்கும் அதேதான் நடந்துள்ளது.

சம்பவத்தின்படி, தன் ‘அதீத’ ‘மூட’ நம்பிக்கையினால் திருவனந்தபுரத்தை சேர்ந்த கோபன் என்பவர், ஏகாதசியன்று தியானம் செய்தபடி உயிர்நீக்க முயன்றுள்ளார். அதாவது, தன்னைத்தானே சாகடிக்கத் துணிந்துள்ளார் அந்நபர். இதற்காக அவரது மகன்களே, உயிருடன் இருந்த தங்கள் தந்தைக்கு சமாதி கட்டியுள்ளனர். உள்ளே அவர் தியான நிலையிலேயே மூச்சடைத்து இறக்க விரும்பியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவத்தில், அந்நபர் உயிரிழந்தும்விட்டார் என்பது இன்னும் சோகம்.

அந்நபரின் மரணத்தில் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள், காவல்துறையினரிடம் கோபனின் இறப்பு குறித்த சந்தேகத்தை தெரிவித்தனர். இதனை அடுத்து சமாதி உடைக்கப்பட்டு கோபனின் உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இவ்விஷயத்தில் நடந்தது என்ன? முழுமையாக பார்க்கலாம்...

திருவனந்தபுரத்தை அடுத்துள்ள நெய்யாற்றின்கரை ஆரலும் முடுகவுவிளாகம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் கோபன். இவருக்கு சுலோச்சனா என்ற மனைவியும், ராஜசேனா மற்றும் சனந்தன் என்ற இரு மகன்களும் இருக்கின்றனர். கோபன் தீவிர ஆன்மீகவாதி என சொல்லப்படுகிறது. தன் வீட்டில் சிவன் கோவில் கட்டி பூஜைகள் செய்து வந்துள்ளார் இவர். இதனால் அவரை அப்பகுதி மக்கள் கோபன் சுவாமி என்றே அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தனது உயிரை ஸ்வர்கவதி ஏகாதசி தினத்தன்று விடுவிக்க நினைத்த கோபன், தனது மகன்களை அழைத்து, “நான் என் வாழ்க்கையின் இறுதி கட்டத்தை எட்டி விட்டேன். ஆகவே ஸ்வர்கவதி ஏகாதசி அன்று எனது உயிரை உடலிலிருந்து நீக்கி விடுவேன். ஆகவே எனக்கு இங்கேயே சமாதி கட்டிவிடுங்கள். எனது சமாதியான உடலை குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு யாரும் பார்க்கக்கூடாது” என்று விபரீதமாக ஒரு விஷயத்தை கூறியுள்ளார். கண்மூடித்தனமான இந்த மூடநம்பிக்கையை ஏற்ற அவர் குடும்பத்தினர், அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டு பூஜைகள் செய்து சமாதி கட்டியுள்ளனர்.

அவர் இறந்தபின்னர், இதுபற்றி தகவல் கசிய தொடங்கியுள்ளது. அப்பகுதி மக்கள்தான் முதலில் கோபனின் இறப்புக்குறித்து சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். அதனை அடுத்து போலீசார் கோபனின் சமாதியை திறந்து அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என்றனர். ஆனால் போலீசாரின் கோரிக்கையை கோபனின் குடும்பத்தினர் ஏற்கவில்லை. இன்னும் 45 நாட்கள் சில பூஜைகள் நடத்த வேண்டியிருப்பதால், கோபனின் சமாதியை திறக்கக்கூடாது என்று கோபனின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக சில ஆன்மிக சபாக்கள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் குரல் கொடுத்ததால் சம்பவ இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இருப்பினும், அப்பகுதி சப்-கலெக்டர் மற்றும் அரசுக்கு ஆதரவான சிலர் கொடுத்த வழக்கின் அடிப்படையில், நேற்று கோபனின் சமாதியானது திறக்கப்பட்டு அவரின் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. போலீசார் அதனை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். உண்மையிலேயே கோபன் இயற்கை மரணம் அடைந்திருந்து வீட்டில் புதைக்கப்பட்டிருந்தால், அவரது உடலானது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றும், இயற்கைக்கு மாறான இறப்பாக இருந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com