Sarathkumar Kombu Seevi
கோலிவுட் செய்திகள்

"அன்று விஜயகாந்த் சார் சொன்ன வார்த்தை.." - உருக்கமாக சொன்ன சரத்குமார் | Vijayakanth | Sarathkumar

`கேப்டன் பிரபாகரன்' படத்திலும், கழுத்து அடிபட்டு ஆறு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தேன். அப்போது கேப்டன் பிரபாகரன் முடிய வேண்டிய காலகட்டம். இத்தனைக்கும் நான் அதில் ஒரு கேமியோ ரோல் தான்.

Johnson

சரத்குமார், விஜயகாந்த் அவர்களின் ஆதரவு மற்றும் நம்பிக்கையால் தனது சினிமா பயணத்தை தொடங்கியதை உருக்கமாக பகிர்ந்துள்ளார். 'புலன் விசாரணை' படத்தில் வில்லன் வேடம் மூலம் பிரபலமான சரத்குமார், விஜயகாந்த் அவர்களின் மேன்மையான குணங்களை நினைவுகூர்ந்து, அவரின் ஆதரவு இல்லாமல் தனது பயணம் சாத்தியமில்லை என தெரிவித்தார்.

சண்முகப் பாண்டியன், சரத்குமார் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள `கொம்பு சீவி' படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் சரத்குமார் "இந்த மேடையில் நான் நிற்கையில் பழைய நினைவுகள் எல்லாம் வருகின்றன. விஜயகாந்த் சாரை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அதை யோசித்தால் என் கண்களில் நீர் வழிய ஆரம்பித்துவிடும். புலன் விசாரணை படத்திற்கு வில்லனை தேடிக் கொண்டிருந்த நேரம். அப்போது நான் ரொம்ப கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தேன். விஜயகாந்தின் மேக்கப் மேன் ராஜூ, நேராக விஜயகாந்த் சாரிடம் என்னை பற்றி சொல்லி இருக்கிறார். உடனே அவரிடம் என்னை அழைத்து சென்றார்கள். அவர் `நீங்கள் ராவுத்தரையும், செல்வமணியையும் பார்த்துவிடுங்கள்' என சொன்னார்.

Pulan Visaranai

செல்வமணியை பார்த்ததும் `வில்லன் வேடம் நடிக்க வேண்டும்' என்றார். என்ன வேடம் என்றாலும் நடிப்பேன் எனக் கூறினேன். அப்போது `இவர் மீசை இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்' என அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள். உடனடியாக போய் மீசையை மழித்துவிட்டு அவர்கள் முன் நின்றேன். அப்படி துவங்கியது தான் என் பயணம். அந்தப் படம் முடிந்ததும் விஜயகாந்த் சார் சொன்ன வார்த்தை `சரத் உங்களுக்கு தான் இந்தப் படத்தில் பெரிய பெயர் கிடைக்கும்' என்றார். எந்த ஹீரோவும் சொல்ல துணியாத வார்த்தை அது. அதே போல அப்படத்தின் ஸ்டண்ட் காட்சியில் நடிக்கும் போது எனக்கு அடிபட்டுவிட்டது. டூப் வைத்து எடுக்கலாம் என சொன்னவர்களிடம், `இல்லை சரத் குணமாகி வரட்டும்' என்றார் விஜயகாந்த்.

அதே போல தான் `கேப்டன் பிரபாகரன்' படத்திலும். கழுத்து அடிபட்டு ஆறு மாதங்கள் மருத்துவமனையில் இருந்தேன். அப்போது கேப்டன் பிரபாகரன் முடிய வேண்டிய காலகட்டம். இத்தனைக்கும் நான் அதில் ஒரு கேமியோ ரோல் தான். விஜயகாந்த் சார் நினைத்திருந்தால் வேறு ஒருவரை நடிக்க வைத்து படத்தை முடித்திருக்கலாம். ஆனால் சரத் வரட்டும், அதுவரை காத்திருக்கலாம் என்றார் விஜயகாந்த் சார். அதுதான் அவரது மேன்மையான குணத்தை காட்டுகிறது. அப்படியான பிணைப்பு தான் எனக்கும் அவருக்குமானது. அதன் பிறகு தொடர்ந்து அவருடன் பயணித்தேன். அவரை பற்றி சொல்வதென்றால் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தப் படத்தில் நான் நடிக்க பொன்ராம் முக்கியமான காரணம் என்றாலும், சண்முகப்பாண்டியன் இதில் இருக்கிறார் என தெரிந்ததும் உடனடியாக சம்மதித்தேன். நான் உறுதியாக சொல்கிறேன் சண்முகபாண்டியன் பெரிய நட்சத்திரமாக வருவார். விஜயகாந்தின் குணங்கள் எல்லாம் உங்களிடமும் அப்படியே இருக்கிறது. பட காட்சிகளை பார்த்துவிட்டு உண்மையாகவே மாமா, மச்சான் போல நடித்திருப்பதாக சொன்னார்கள். நடிக்கவில்லை வாழ்ந்தோம் என்றுதான் சொல்ல வேண்டும். நான் சண்முகப்பாண்டியனிடம் சொன்னேன், ஒருவேளை உங்கள் மகன் பேரன் நடிக்க வரும் போதும் நான் அவர்களுடனும் நடிக்க வேண்டும். எனக்கு இந்த உறவு அத்து போக கூடாது" என்றார்.