"அனிருத்-க்கு தெலுங்கில் வாய்ப்பு, எனக்கு தமிழில் கிடைக்காது.." - SS Thaman | Anirudh
தமிழ் சினிமாவில் `ஈரம்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தமன். தொடர்ந்து தமிழிலிலும் தெலுங்கிலும் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். சிம்பு நடித்த `ஒஸ்தி', `வாலு', `ஈஸ்வரன்', விஷாலின் `பட்டத்து யானை', கார்த்தியின் `ஆல் இன் ஆல் அழகுராஜா', விக்ரமின் `ஸ்கெட்ச்' என பல முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு தமிழில் இசையமைத்துள்ளார். அல்லு அர்ஜுன் நடித்த `அலா வைகுண்டபுரமுலோ' படத்திற்கு பிறகு இவருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
அதன்மூலம் தமிழில் விஜய் நடித்த `வாரிசு', ஷங்கரின் `கேம் சேஞ்சர்' படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இவர் இசையில் தற்போது பாலகிருஷ்ணா நடித்துள்ள `அகண்டா 2' வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார் தமன். அந்த பேட்டியில் பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, பிற மொழி இசையமைப்பாளர்கள் தெலுங்கில் வந்து இசையமைப்பது குறித்து தன கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
”அனிருத்துக்கு தெலுங்கில் வாய்ப்பு, எனக்கு தமிழில் வாய்ப்பில்லை”
அப்பேட்டியில் "உங்கள் வெற்றியை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த யோசனை உங்களுக்கு இருக்குமா? உங்களிடம் அதுபற்றி பேசி பாராட்டுவதெல்லாம் நடக்குமா?" எனக் கேட்கப்பட, அதற்குப் பதிலளித்த தமன், "அவை எல்லாம் இப்போது இல்லை, டாக்சிக் ஆகிவிட்டனர். யாரும் தூய்மையாய் இல்லை. முதுகில் குத்துவது, முதுகிற்குப் பின் பேசுவது அதிகமாகிவிட்டது. யாரும் சுயமாக முன்னேற வேண்டும் என நினைப்பதில்லை. நாம் ஒரு கம்பெனியில் பேசி இருந்தால், நம்மைவிட கம்மி சம்பளத்திற்கு வேறு ஒருவர் சென்று கேட்டு படத்தை பெறுவதெல்லாம் நடக்கிறது.
நாம் இப்போது யோசித்துப் பார்த்தால், நம்முடைய துறையில் உள்ள இசையமைப்பாளர்கள்போல வேறு எங்கும் கிடையாது. நான் தெலுங்கு இசையமைப்பாளர்கள் பற்றி கூறவில்லை. தெலுங்கு சினிமாவில் பணியாற்றும் மற்ற மொழி இசையமைப்பாளர்களைச் சொல்கிறேன். அனிருத்துக்கு இங்கு படம் கிடைப்பது மிக சுலபம். ஆனால் எனக்கு ஒரு தமிழ் சினிமா கிடைப்பது மிக கடினம். எனக்கு வாய்ப்பு தரமாட்டார்கள். நம்முடைய சினிமாவில், நம்முடைய ஆட்களே பணியாற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை.
நான் இதை வருத்தமாக கூறுகிறேன் என நினைக்க வேண்டாம். இந்தப் போட்டி இருப்பது எனக்கு சந்தோஷமே. புதிதாக வரும் திறமையாளர்களுடன் போட்டி போட்டு வேலை செய்வதுதான் எனக்குப் பிடிக்கும். மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை ரெஃபரன்ஸ் ஆக கொடுத்தால்கூட நான் வருத்தப்பட மாட்டேன். அவருக்கு இப்படித்தான் தேவையா என புரிந்துகொள்ளவே முயல்வேன். மற்ற இசையமைப்பாளர்களின் பணிகளையும் நான் ரசிக்கிறேன். சமீபத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த `தண்டேல்' பட பாடல்கள் மிகவும் பிடித்தது. இதுபோன்ற நல்லவைகளை எடுத்துக் கொள்வோம்.
ஆனால் மோசமான விஷயங்கள் நடந்தால் பேச மாட்டோம். போட்டி நல்லதுதான், தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளின் இசையமைப்பாளர்கள் தெலுங்கில் படங்கள் செய்கிறார்கள். ஒரு மலையாளப்பட வாய்ப்பு பெறுவது எப்படி என எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் இங்கு ஒரு PR ஏஜென்சி வைத்துக் கொண்டு வாய்ப்புகள் பெறுகிறார்கள். அவர்களுக்கு தெலுங்கு சினிமா செய்கிறோம் என்ற பெருமிதம் எதுவும் கிடையாது. அதையே கொண்டுசென்று நம் ஹீரோக்களிடம் பாராட்டுகளையும் பெறுவார்கள். அவ்வளவு போலியாக என்னால் வாழ முடியாது. நான் உண்மையாக, ரசிகர்களை மனதில் வைத்து வேலை செய்கிறேன். ஆனால் அவர்களுக்கு பெயர் எடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் இல்லை, இங்கு நல்ல பணம் தருகிறார்கள் என்பதால் பணியாற்றுகிறார்கள். அங்கு அவர்களுக்கு லட்சங்களில்கூட சம்பளம் இருக்காது, ஆனால் அவர்களை இங்கு அழைத்து வந்து கோடியில் சம்பளம் தருகிறோம்" என்றார்.

