"என் சினிமா பயணம் துவங்கியதே கேப்டன் படத்தில் இருந்துதான்..." - யுவன் | Kombu Seevi
சண்முகப் பாண்டியன், சரத்குமார் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள `கொம்பு சீவி' படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, "கேப்டன் சார் படம் பார்த்துதான் குழந்தை பருவத்தில் பூட்ஸ் பேண்ட் வாங்கி போட்டேன். எல்லோருக்கும் ஊக்கம் கொடுக்கக்கூடிய மனிதர் அவர். எங்கள் வீட்டில் ஒரு நாள் அம்மா இரவு உணவை விமரிசையாக ஏற்பாடு செய்தார். அன்று கேப்டன் சார் கல்யாணத்திற்கு பிறகு எங்கள் வீட்டுக்கு வந்தார். அன்று நான் என் உறவினர்கள் எல்லோரும் இணைந்து நடனம் ஆடினோம். அங்கிருந்து இங்கு வந்திருக்கிறேன் என்பது தான் மகிழ்ச்சி.
பொன்ராம் சார் கதை சொன்ன பிறகு, யார் சார் ஹீரோ எனக் கேட்டேன். அவர் சண்முகப் பாண்டியன் என சொன்னதும் ஒரு நொடி கூட யோசிக்கவே இல்லை. நான் செய்கிறேன் என ஒப்புக் கொண்டேன். பலருக்கும் ஒரு தூண் போல உறுதுணையாக இருந்தவர் கேப்டன். சண்முகபாண்டியனுக்கு கண்டிப்பாக ஒரு இடம் இந்த சினிமாவில் உண்டு. சரத் சாரிடம் ஆரம்பித்த என் பயணம் சண்முக பாண்டியன் வரை வந்திருக்கிறது. ஒரு கதையை கேட்டு, அதில் உள்ள காமெடிகளை ரசிக்க வைத்தது இந்தக் கதைதான். இதில், பணியாற்றிய அனுபவமும் மிக ஜாலியாக இருந்தது.
கேப்டன் சாரின் `தென்னவன்' படத்திற்கு நான் இசையமைத்தேன். இப்போது, அவரது மகனுக்கு இசையமைக்கிறேன் எனும் போது என் குடும்பத்தில் ஒருவருக்கு செய்வது போல இருந்தது. இன்று இல்லை, எப்போது அழைத்தாலும், அவருக்காக நான் நிற்பேன்" எனத் தெரிவித்தார்.

