சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி திரைப்படம், தமிழ் உணர்வை முன்னெடுத்துச் சென்றதற்காக பாராட்டப்படுகிறது. சுதா கொங்கரா இயக்கிய இப்படம், 1959ஆம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்கள் போராடிய கதையை அடிப்படையாகக் கொண்டது. கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், படம் வெற்றியடைந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் ’பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் எதிர்மறையான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். உடன் அதர்வா, ஸ்ரீலீலா போன்ற நடிகர்கள் நடித்திருக்கும் நிலையில், படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய இசையில் 100ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது..
1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டும் வருகிறது.
இந்நிலையில் படம் வெற்றிபெற்றதற்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது..
பராசக்தி திரைப்படத்தின் வெற்றி விழாவானது சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா, நடிகர்கள் சிவகார்த்திகேயன், ஸ்ரீலிலா, முரளி அதர்வா, சேத்தன் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.
சுதா கொங்கரா
இவ்விழாவில் பேசிய சுதா கொங்கரா, என் படக்குழு இருந்ததாலேயே இந்த வெற்றி சாத்தியமானது. சில நடிகர்கள் முதல்முறை என் படத்தில் நடித்ததால் சில பிரச்னைகள் இருந்திருக்கலாம். அதிகாலை காட்சிகள் படமாக்கப்பட்டபோது சிலர் டார்ச்சர் அனுபவித்திருக்கலாம். அதன்பின் எல்லோரும் பழகிவிட்டார்கள். சிவகார்த்திகேயனுடன் ஆரம்பத்தில் அலைவரிசை ஒத்துப்போகவில்லை. எனக்கு ஒருவருக்கு பின்னால் பேசுவது பிடிக்காது, அதனால் அவருடன் நேராக சென்றுபேசி அவருக்கு புரிய வைத்தேன் என்று கூறினார்.
ஶ்ரீலீலா
கதாநாயகியாக நடித்திருந்த ஸ்ரீலீலா பேசுகையில், என்னுடைய டான்ஸ், பாடலுக்கு பாராட்டுகள் வருவது எனக்கு பழகிவிட்டது. 'பராசக்தி' படம் மூலமாக, முதல்முறையாக நான் நடித்த கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் வருகின்றன. இது தமிழ் சினிமாவில் எனக்கு மிகச்சரியான அறிமுகப் படம் எனத் தோன்றுகிறது. மிகவும் திருப்தியாக உள்ளது, ஒரு அடித்தளம் அமைந்துள்ளது அதை அப்படியே பற்றிக்கொண்டு முன்னேறுவேன் என்று பேசினார்.
சேத்தன்
நடிகர் சேத்தன் பேசுகையில், பேரறிஞர் அண்ணா கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்ததற்கு இயக்குநருக்கு நன்றி. எனக்கு பாராட்டு தெரிவிக்கும் அனைவரும், அண்ணாவாக என்னை திரையில் பார்த்தபோது சிலிர்க்கும் உணர்வை பெற்றதாக கூறினார்கள். படத்தை வெற்றியடைய செய்த அனைவருக்கும் நன்றி என்று கூறினார்.
ரவி கே சந்திரன்
ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் பேசுகையில், இயக்குநர் சுதா கொங்காரா என்னிடம் கதை சொல்ல வரும்போதே, இது சொல்லப்பட வேண்டிய கதை என நினைத்தேன். படம் வரலாற்று பின்னணி கொண்ட படம் என்பதால் கூடுதலாக உழைத்தோம். அதிகாலை 3 மணிக்கு மும்பையில் படப்பிடிப்பு நடத்தியபோது, அங்குள்ள கலைஞர்கள் படக்குழுவின் டெடிகேஷனை பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள் என்று கூறினார்.
அதர்வா
முரளி அதர்வா பேசுகையில், இதுபோன்ற படத்தை உருவாக்குவது அத்தனை எளிதல்ல. டான் பிக்ஸர்ஸ் தான் இந்த படத்தை தயாரிக்க சரியான நிறுவனம். இந்த படத்தில் நான் இருக்க சில முக்கியமான விஷயங்கள் உள்ளன. படபிடிப்பில் எனக்கு முழு சுதந்திரம் இருந்தது. இந்த படம் எனக்கு ஸ்பெஷலானது என்று பேசினார்.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், இந்த படத்தில் 2 முக்கிய விஷயங்கள் உள்ளதாக பார்க்கிறேன். ஒன்று தமிழ் உணர்வு, இன்னொன்று வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது. பராசக்தி படத்தை வெற்றிப்படமாக கொண்டு வந்திருக்கக்கூடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதா கொங்கரா கதை சொன்னபோது இரண்டு விஷயம் தோன்றியது. என்னுடைய கதாபாத்திரத்தின் தன்மை மற்றும் நம்முடைய முன்னோர்களின் தியாகத்தை இன்றைய இளைய தலைமுறையினருக்கு காட்ட வேண்டியது அவசியம் என்பது புரிந்தது. இயக்குனர் இந்தக் கதைக்காக பல காலம் பயணித்திருக்கிறார், இது உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து, ஒரு சில கற்பனைகளுடன் அதே நேரம் இயல்பு தன்மையும் மாறாத வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஜென்சி கிட்ஸ் என்று சொல்லக்கூடிய இன்றைய இளைய தலைமுறைகளுக்கு இந்த கதை தெரியாத ஒரு சூழல் இருக்கக்கூடிய பட்சத்தில் அவர்களுக்கும் பிடித்த மாதிரி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
அதிகாலை 7 மணிக்கு எழுந்து வருவது தொடர்பாக இயக்குனர் தெரிவித்தார்கள், அதுதான் எங்களுடைய வேலை அதற்காகத்தான் வந்திருக்கிறோம். படத்தை ஆதரித்த பத்திரிக்கையாளர்களுக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு குட்டி பையன் தீ பரவட்டும் என வீடியோ வெளியிட்டிருந்தார், அதை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட பெரியவர் ஒருவர் கூறியது மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தது பொங்கல் விடுமுறைகள் அதிகமான மக்கள் இதை பார்ப்பார்கள் என நம்புகிறேன் என பேசினார்.