’பராசக்தி படத்தை தடை செய்யவேண்டும்.. முழுக்க பொய், கட்டுக்கதை’ - தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த பராசக்தி திரைப்படம், காங்கிரஸ் கட்சியை தவறாக சித்தரித்ததாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. 1959ஆம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்களின் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம், வரலாற்று உண்மைகளை மாற்றி சித்தரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், படத்தை தடை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் ’பராசக்தி’. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் ரவி மோகன் எதிர்மறையான கதாபத்திரத்தில் நடித்துள்ளார். உடன் அதர்வா, ஸ்ரீலீலா போன்ற நடிகர்கள் நடித்திருக்கும் நிலையில், படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இது அவருடைய இசையில் 100ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றுவருகிறது..
1959ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய மாணவர்கள் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்திருக்கும் பராசக்தி திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், மொழி உணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்ற முன்னெடுப்பிற்காக பாராட்டப்பட்டு வருகிறது.
இந்தசூழலில் படத்தில் காங்கிரஸ் கட்சி சார்ந்து தவறான காட்சிகளும், கட்டுக்கதைகளும் திணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராசக்தி படத்தை தடைசெய்யவேண்டும்..
தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தரப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், ‘ பராசக்தி திரைப்படத்திற்கு கண்டன அறிக்கை:
காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்களின் கவனத்திற்கு!!! பராசக்தி படம் தடை செய்யப்பட வேண்டிய திரைப்படம்!!!
படத்தில் இடம் பெற்ற சில முக்கிய கண்டிக்கத்தக்க காட்சிகள்:
1. அனைத்து மாநிலங்களிலும் உள்ள Post Office களில் இந்தியில் மட்டும் தான் படிவங்கள் இனி நிரப்பப்பட வேண்டும் என்று 1965ல் காங்கிரஸ் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கட்டுக்கதை.
2. படத்தில் இரும்பு மங்கை இந்திரா காந்தி அவர்களை சிவகார்த்திகேயன் சந்தித்து பேசுகிற மாதிரியும், அதன் பின் இந்திரா காந்தி அவர்கள் வில்லத்தனமாக பேசும் வண்ணம் வசனங்களை வைத்துள்ளார்கள்.
இந்த படத்தை தயாரித்த முட்டாள் கூட்டத்திற்கு மறைந்த தலைவர்களை திரையில் காண்பிக்கும் போது வரலாற்றில் நடைபெறாத காட்சிகளை கற்பனையாக காண்பிக்க கூடாது என்பது சட்டத்தில் உள்ளது என்பதே தெரியாமல் படத்தை அவர்கள் இஷ்டத்திற்கு வரலாற்றில் நடைபெறாத காட்சிகளை எடுத்துள்ளார்கள்.
3. இன்னும் ஒரு படி மேலே சென்று 12 Febraury 1965 அன்று கோயம்புத்தூருக்கே வராத தியாகத் தலைவி இந்திரா காந்தியை அங்கு வந்ததாக படமாக்கி அவர் கண் முன் ரயில் எரிந்து வந்து இந்தி திணிப்புக்கு எதிராக கையெழுத்து கொடுக்கும் காட்சியெல்லாம் வரலாற்றில் நடைபெறவே இல்லை அதை படமாக்கியது மிகவும் கண்டிக்கத்தக்கது.
4. இறுதியில் படம் முடிந்த பிறகு End Credits இல் நம் தலைவர்களான காமராஜர், இந்திரா காந்தி மற்றும் அன்றைய பிரதம மந்திரி லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் மூவரின் நிஜ புகைபடத்தை காண்பித்து காங்கிரஸ் 200க்கும் மேற்பட்ட தமிழர்களை பொள்ளாச்சியில் சுட்டுக் கொன்றது என்று எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் நம் கட்சியையும் தலைவர்களையும் பொய்யான தரவுகளுடன் சித்தரித்துள்ளது.
இதை தவிர காங்கிரஸ் கொடியை எரிக்கும் காட்சியையும் படத்தில் திணித்துள்ளனர்.
ஆக மொத்தம் இந்த படம் முழுவதுமே சித்தரிக்கப்பட்ட சொந்த கற்பனையில் வரலாற்றுக்கு முற்றிலும் முரணாக காங்கிரஸ் கட்சியை தாக்கும் வகையில் பல பொய்களை கொண்டு எடுக்கப்பட்ட படமாகும்.
பராசக்தி படத்தில் உள்ள வரலாற்றில் நடைபெறாத அனைத்து காட்சிகளும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். படத்தயாரிப்புக் குழு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் படக்குழு மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் இதற்கு குரல் கொடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

