பராசக்தி | ”அமரனை விட சிறப்பாக உள்ளது..” சிவகார்த்திகேயன் பகிர்ந்த ரிவ்யூ!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படம், இன்று ஜனவரி 10ம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன், படம் அமரனை விட சிறப்பாக உள்ளது என ரிவ்யூ வந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள படம் `பராசக்தி'. சிவாவின் 25வது படமாக உருவாகியுள்ள இந்தப் படம் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் தணிக்கை சான்றிதழ் கிடைக்காமல் இருந்தது.
இப்படத்தை பார்த்த தணிக்கை வாரியம் பல்வேறு காட்சிகளில் கட் செய்யவும், குறிப்பாக இந்திக்கு எதிரான போராட்டம் சார்ந்த காட்சிகளில் ஆட்சேபம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அவற்றை நீக்கினால் படம் சொல்ல வரும் கருத்தே நீர்த்துப் போய்விடும் என்பதால் மும்பையில் Revising Committeeக்கு சென்றது படக்குழு.
இப்படி நீடித்த இழுபறிக்கு இடையில் நேற்று பராசக்தி படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இப்படம் 2 மணிநேரம் 42 நிமிடங்கள் நீளம் எனவும், 16 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோருடன் இணைந்து படத்திற்கு வரலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
விஜயின் `ஜனநாயகன்' படம் தணிக்கை சான்று கிடைக்காததால் வெளிவரமுடியாத சூழல் ஏற்பட்ட நிலையில், பொங்கலுக்கு தனிப்படமாக இன்று வெளியாகி உள்ளது பராசக்தி திரைப்படம்.
அமரனை விட சிறப்பாக உள்ளது..
’பராசக்தி’ படம் பார்க்க சத்யம் திரையரங்கிற்கு வந்த வந்த நடிகர் சிவகார்த்திகேயன், படம் குறித்து வந்த பாசிட்டிவான ரிவ்யூ குறித்து பேசினார்.
செய்தியாளர்களிடம் பேசிய சிவகார்த்திகேயன், ”இப்போதான் படத்திற்கு என்ன மாதிரியான கருத்து வருகிறது என்று கேட்டுட்டு இருக்கன். முதல் ரிவ்யூ மதுரையிலிருந்து வந்திருக்கு, வந்த மெசேஜ்ஜ உங்க முன்னாடியே படிக்கிறன். ‘சார் பராசக்தி அமரனை விட சிறப்பாக இருக்கிறது’ என சொல்லிருக்காங்க. இதுதான் எனக்கு முதல்ல வந்த ரிவ்யூ. இப்போ தான் மக்கள் எல்லா இடத்துலையும் பார்த்துட்டு இருக்காங்க. எல்லாருக்கும் படம் பிடிக்கும்னு நம்புறன். இது எல்லாருக்குமான படமா இருக்கும், நம்முடைய உணர்வுகளை பிரதிபலிக்குற படமா இருக்கும், நானும் மக்கள் கிட்ட இருந்து அதைத்தான் எதிர்ப்பார்க்குறன்” என்று கூறினார்.

