15 வருட சினிமா பயணத்தில் மொத ராத்திரி மற்றும் டோரதி படங்களின் மூலம் ரசிகர்களின் அன்பை பெற்ற ரிஷிகாந்த், தனது இன்ஸ்டாகிராம் பதிவில் எமோசனலாக நன்றி தெரிவித்தார். இயக்குநர் ராஜா கருப்பசாமி கமெண்டில் கலாய்த்தது ரசிகர்களை கவர்ந்தது.
15 வருட சினிமா வாழ்க்கையில் குறும்படங்கள், துணை நடிகராக மட்டுமே நடித்துவந்த ரிஷிகாந்த், மொத ராத்திரி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார். எளிதில் கவர்ந்துவிடுகிற சாந்தமான முகத்துடன், ஒரு மிடில் கிளாஸ் ஆணின் எமோசனை கடத்தக்கூடிய கதாபாத்திரத்தில் ‘மொத ராத்திரி’ படத்தில் நடித்திருந்த ரிஷிகாந்துக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. சமூகம், குடும்ப அழுத்தங்களுக்கு இடையில் தன்னுடைய சுதந்திரத்திற்காக போராடும் ஒரு சாமான்ய பெண்ணுக்கு துணை நிற்கும் மருது கதாபாத்திரம் பெண்களுக்கு இடையேயும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தசூழலில் மொத ராத்திரி திரைப்படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய டோரதி திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்திருந்த ரிஷிகாந்த், கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருந்தார். இந்த இரண்டு படங்களுக்காகவும் ரிஷிகாந்த் மீது ரசிகர்கள் அன்புமழை பொழிந்துவருகின்றனர்.
இந்நிலையில் தான் ரசிகர்களின் அன்புக்கும், இத்தனை ஆண்டுகளாக தனக்கு துணை நின்றவர்களுக்கும் எமோசனலாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார் ரிஷிகாந்த்.
அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னுடைய 15 வருடப் பயணம் அர்த்தமுள்ளதாக இருந்தது என்று என்னை உணர வைத்த ஒவ்வொரு நல்ல உள்ளத்திற்கும். என்னுடன் இத்தனை காலமும் நின்ற ஒவ்வொருவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.
நீங்கள் என் மீது பொழிந்துகொண்டிருக்கும் அன்பையும். பாசத்தையும், ஆதரவையும் வார்த்தைகளால் முழுமையாகச் சொல்லுவது என்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது. நன்றி... என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி.
இனிமேல் நான் பண்ணும் ஒவ்வொரு படத்திலும் இன்னும் கடினமாக உழைப்பேன். இன்னும் அதிகமாகக் கற்றுக்கொள்வேன். மிக முக்கியமாக, நீங்கள் என்மீது வைத்திருக்கும் அன்பையும். நம்பிக்கையையும் நான் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் உங்கள் நம்பிக்கையை உறுதி செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
இந்தசூழலில் ரிஷிகாந்த் உருக்கமாக பதிவிட்டிருக்கும் பதிவில் கமெண்ட் செய்திருக்கும் மொத ராத்திரி இயக்குநர் ராஜா கருப்பசாமி, “அதெல்லாம் இருக்கட்டும் ஃபோன் பண்ணா எடுப்பீங்களா மாட்டீங்களா” என கமெண்ட்டில் ரிப்ளை செய்துள்ளார்.