செய்தியாளர் - யஸ்வந்த்
உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்த், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். மணிமகுடம் தரித்த அவரது திரைப்பயணத்தை சற்று பின்னோக்கி சென்று பார்க்கலாம்.
அது 1975ஆம் ஆண்டு... ‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் மூலமாக பூட்டியிருக்கும் கேட்டை ஸ்டைலாக திறந்துகொண்டு, திரையுலகில் நுழைந்தார் ரஜினி. இளம் ரஜினிக்கு முதல் படம் முதல் காட்சியே கமலுடன் மோதும் காட்சிதான்... அடுத்த 50 ஆண்டுகள் இந்த இரண்டு இளைஞர்களுக்கும் இடையேதான் போட்டி என்று அன்று அவர்களே நினைத்திருக்க வாய்பில்லை…
மூன்று முடிச்சு, அவர்கள், 16 வயதினிலே போன்ற படங்களில் ஸ்டைல் வில்லனாக அரிதாரம் பூசிய ரஜினி… புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து 60 வரை, முள்ளும் மலரும், ஜானி உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாக, குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றார்…
அதுவரையில் தமிழ் சினிமாவில் இருந்த ஹீரோ மெட்டிரியலுக்கான எந்த ஃபார்முலாவிலும் அடங்காதவர் ரஜினி. ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எல்லா விதிகளையும் உடைத்தெறிந்தவர். கருப்பு நிறம், பரட்டைத் தலை, கட்டம் போட்ட கைலி என தோன்றிய ரஜினியைப் பார்த்த சாமானிய ரசிகர்கள் தன்னைத்தானே ஹீரோவாக திரையில் பார்ப்பது போல, உணர்ந்தார்கள்... கொண்டாடித் தீர்த்தார்கள்...
கிராமத்துக்கு ‘முரட்டு காளை’… சிட்டி- க்கு ’பில்லா’ என அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் காந்தமாக ஈர்த்த ரஜினிகாந்த்… டூரிங் டாக்கீஸில் மண்ணில் அமர்ந்து படம் பார்த்தவர் நம் தாத்தாக்களையும் ஆட வைத்தார்... மல்டி பிளெக்ஸ் திரையரங்கில் ஏஸியில் பார்க்கும் 2கே கிட்ஸையும் ரசிக்க வைக்கிறார். மூன்று தலைமுறையாக திரையுலகின் முடிசூடா மன்னராக உச்சத்தில் கொடிகட்டி பறக்கிறார்
தமிழ் சினிமாவை பிளாக் அண்ட் ஒயிட் கல்ர் என்று பிரிப்பது போல, ரஜினிக்கு முன் ரஜினிக்குப் பின் என்று தாராளமாகப் பிரிக்கலாம். அந்தளவுக்கு ரஜினிக்குப் பின் வந்த அத்தனை நடிகரிடமும் ரஜினியின் சாயல் இருக்கிறது!
90 களில் ஹிந்தி சினிமாவின் ஆதிக்கம் தமிழ்நாடு வரை பதவி இருந்த காலத்தில், தமிழ் சினிமா படங்களையும் பிற மொழி மக்கள் ரசித்து பார்க்க வைத்ததில் முக்கிய பங்கு ரஜினி படங்களுக்கு உண்டு… இன்டர்நெட் இல்லாத காலத்திலேயே ட்ரெண்ட் ஆகி பான் இந்தியா ஹிட் அடித்திருக்கின்றன சில ரஜினி படங்கள். இலங்கை தொடங்கி ஜப்பான் வரை அதாவது பான் வேர்ல்ட் எனச் சொல்லும் அளவுக்குத் தமிழ் படங்களை கொண்டு சேர்த்தவர் ரஜினி… வெளிநாட்டு ரசிகர்கள் ரஜினிபோல பேசியும், நடித்தும் வெளியிடும் இணைய விடீயோக்களே அதற்கு சாட்சி...
கூலி தொழிலாளி , பால் காரன் , ஆட்டோகாரன் , டாக்சி ஓட்டுனர் போன்ற சாமானியர்களின் வாழ்க்கையை சூப்பர் ஹீரோவாக திரையில் பிரபலித்த தங்க மகன்… மன்னன், அண்ணாமலை , பாட்ஷா, முத்து, அருணாசலம், படையப்பா, சந்திரமுகி, சிவாஜி, எந்திரன், ஜெயிலர் என தனது சாதனையை தானே முறியடிக்கும் பிளாக் பஸ்டர் உலகின் எஜமான்... எத்தனை ஸ்பேர் பார்ட்ஸ் மாற்றினாலும், மைலேஜில் தெர்டு ஜெனரேஷன் வண்டிகளையே ஓரங்கட்டும் எந்திரன்... திரை வாழ்வில் அரை சதம் அடித்த பாட்ஷா.... ரசிகர்களால் எப்போதும் தலைவர் என்று போற்றப்படும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், திரைப்பயணம்... வெற்றிப் பயணமாகத் தொடரட்டும்...