50 ஆண்டுகளை நிறைவு செய்த ஷோலே.. அப்படியென்னப்பா ஸ்பெஷல்?
ரமேஷ் சிப்பியின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ஹேமமாலினி, ஜெயா பாதுரி, அம்ஜத் கான் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் பங்களிப்போடு வெறும் 3 கோடி ரூபாயில் உருவானது ஷோலே. 204 நிமிடங்கள் ஓடும் படத்தில் கப்பர் சிங் என்ற கொடூர கொள்ளையனை வீழ்த்த ஜெய் மற்றும் வீரு ஆகிய இருவர் சேர்ந்து முயற்சிப்பதுதான் கதை. நட்பு, பழிவாங்கல் போன்ற வெகுஜன அம்சங்களுடன் கவிதையான பாடல் காட்சிகள் காந்தமாக கவர்ந்திழுத்தது. எந்த தொழில்நுட்ப வசதியும் இல்லாத காலத்தில் எடுக்கப்பட்ட அதிரவைக்கும் சண்டை காட்சிகள் இருக்கையின் நுனிக்கே ரசிகர்களை கொண்டு சென்றன.
மும்பையில் உள்ள மினர்வா திரையரங்கில் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஓடி சாதனை படைத்தது இப்படம். R.D. பர்மனின் இசையமைப்பில் பாடல்கள், வரவேற்பை பெற்று கோடிக்கணக்கில் இசைத்தட்டுகள், கேசட்டுகள் விற்பனையாகின. இத்திரைப்படங்களின் வசனங்கள் திருமணங்களில் மேற்கோள் காட்டப்படுகின்றன.
அரசியல் உரைகள், விளம்பரங்கள் போன்றவற்றில் இப்படத்தின் இவ்வசனங்கள் பிரபலம். இப்படம் உலகின் எட்டாவது அதிசயம் என்று கூறினார், இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தர்மேந்திரா. அனைத்து வகை ருசி கொண்ட உணவுகளும் கொண்ட தட்டு போன்றது ஷோலே.. அதுவே அதன் பெருவெற்றிக்கு காரணம் என்கிறார் திரைப்பட அறிஞர் அம்ரித் கங்கர். இந்திய திரைவரலாற்றில் இடம் பெற்ற இப்படம் வெளியான புதிதில் வரவேற்பை பெறவில்லை. இதெல்லாம் ஒரு படமா என்ற ரீதியில் மோசமான விமர்சனங்களையே சந்தித்தது. ஆனால் சில வாரங்களில் வேகமெடுத்த இதன் பயணம் வரலாறு படைப்பது வரை சென்றது.