மசாலா திரைப்படங்களில் ஹீரோவிற்கு நிகரான வலிமையும் ஸ்கிரீன் ஸ்பேஸூம் வில்லனுக்கும் அளிக்கப்பட்டாக வேண்டும். அப்போதுதான் ஹீரோ சந்திக்கும் சவால்கள் நெருக்கடி மிகுந்ததாகவும் பரபரப்பாகவும் அமையும். வணிகப்படத்தின் சூத்திரங்களை அறிந்தவர்கள் இந்த விஷயத்தை சரியாக திட்டமிடுவார்கள். ஹீரோவை விடவும் வில்லனின் காரெக்டர் ஸ்கெட்ச்சிற்கு மண்டையை உடைத்துக் கொள்வார்கள்.
அவரது படங்களில் வில்லன் பாத்திரங்கள் இன்றளவும் நினைவில் நிற்கக்கூடியதாக இருக்கும். உதாரணம் ‘பாட்சா’வின் மார்க் ஆன்டனி. இந்த வரிசையில் சமீபத்திய வில்லனாக ஜெயிலர் திரைப்படத்தின் ‘வர்மனை’ சொல்லலாம்.
மலையாள சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகராக விநாயகன் இருந்தாலும், தமிழில் ஏற்கெனவே சில காரெக்டர்களை ஏற்றிருந்தாலும், தமிழ் சினிமாவில் அவரை அழுத்தமாக அறிய வைத்த படம் ‘ஜெயிலர்’. ஒரு சைக்கோத்தனமான, எக்சென்ட்ரிக் வில்லனை அட்டகாசமாக வெளிப்படுத்தி மிரட்டியிருந்தார். 2006-ம் ஆண்டு வெளியான படம் ‘திமிரு’. அதில் ஈஸ்வரி என்கிற வில்லிக்கு துணைப் பாத்திரமாக வரும் அதே நபரா இவர் என்று கேட்குமளவிற்கு தனது நடிப்பை சிறப்பாக தந்திருந்தார் விநாயகன்.
சினிமாவில் நடனக்கலைஞராக தனது பயணத்தை துவங்கியவர் விநாயகன். ‘மாந்திரிகம்’ (1995) என்கிற மலையாள திரைப்படத்தில் அறிமுகம். மைக்கேல் ஜான்சனை நகலெடுக்கும் சிறிய காரெக்டர். பிறகு அவரது வளர்ச்சி சிறிது சிறிதாக வளர்ந்து, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக உருமாறியிருக்கிறார். ‘கம்மட்டிபாடம்’ என்கிற மலையாள திரைப்படத்தில் அவர் தந்திருப்பது one of the best.
பொதுவாக மாஸ் திரைப்படங்களில் ஹீரோவின் அதிரடியான என்ட்ரியோடு படம் துவங்குவதுதான் வழக்கம். ஆனால் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் வர்மனின் காரெக்டரை பதிவு செய்யும் விதமாகத்தான் படம் ஆரம்பிக்கும். இத்தனை சைக்கோத்தனமான வில்லனிடம், ஹீரோவின் குடும்பம் சிக்கினால் என்னவாகும் என்கிற பதட்டத்தை ஆரம்பத்திலேயே விதைத்திருப்பார் இயக்குநர் நெல்சன்.
ஒரு சிறுவன் சுருட்டுகள் அடங்கிய பாக்கெட்டை எடுத்துக் கொண்டு மறைவிடத்திற்குள் செல்வதோடு காட்சி துவங்கும். அவன் சுருட்டைக் கொண்டு போய் தரும் இடத்தில் தலையை உலுக்கிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு கஞ்சா அடித்தவர் போல் ஓர் ஆசாமி உட்கார்ந்திருப்பார். காமிரா அவரது முன்னால் இல்லாதது போல அப்படியொரு இயல்பான உடல்மொழி.
சுருட்டை முடி, ஆட்டு தாடி, அடர் நிறத்தில் சட்டையும் வேட்டியும். அவரைப் பார்த்தால் இண்டர்நேஷனல் அளவில் நிழலான வேலையைச் செய்பவர் என்று நம்புவது சிரமம். பிக்பாக்கெட் கேஸ் மாதிரியான அழுக்கான உருவத்தில்தான் இருக்கிறார். பெயர் வர்மன். தொழில் சிலைக்கடத்தல். தான் செய்யும் வேலையில் மிக சின்சியராக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். வர்மனின் மொழியிலேயே சொன்னால் ‘100% professional’.
கம்பெனி ரகசியத்தை வெளியில் சொல்லி விட்டானோ என்று மூன்று அடியாட்களின் மீது வர்மனுக்கு சந்தேகம். மூன்று பேரும் கட்டப்பட்டு தலைகீழாக தொங்கவிடப்பட்டிருக்கிறார்கள். கீழே ஆசிட் டிரம். மரணத்தின் வாசலில் பதட்டத்துடன் இருக்கிறார்கள். அவர்களில் யார் கறுப்பு ஆடு என்று விசாரித்து அவனை மட்டும் போட்டுத் தள்ளுவதுதானே முறை? ம்ஹூம்.. வர்மனின் நீதிமன்றத்தில் அந்த மாதிரியான கருணையெல்லாம் கிடையாது.
‘அண்ணே.. ஒருத்தன் பண்ண தப்புக்காக மூணு பேரையும் சாகடிக்கலாமாண்ணே.. விசாரிச்சுப் பாருண்ணே’ என்று ஒருவன் கதற, வர்மன் எக்காளமாக சொல்கிறான், ‘விசாரிக்கறதுக்கு நான் என்ன சிபிசிஐடியா.. ?’ என.
“கொஞ்சம் கருணை காட்டுண்ணே” என்று அவன் உயிர் அச்சத்துடன் கதற “பத்து வருஷமா என் கூடவே இருந்து நான் பண்றதையெல்லாம் பார்த்துட்டு என் கிட்ட கருணை கேட்கறே.. என்னை இன்சல்ட் பண்றே?.. தன்ராஜூ அவனுக்கு கொஞ்சம் கருணையைக் காட்டு” என்று சுருட்டைப் புகைத்துக் கொண்டே சொல்கிறான்.
எப்படியும் தன்னைக் கொன்று விடுவார்கள் என்பதை உணரும் அடியாள், அச்சத்தை உதறி விட்டு “வர்மா.. இப்படியே பண்ணிட்டு இருந்தா.. கடைசில உன் கூட யாருமே இருக்க மாட்டாங்க” என்று சாபம் மாதிரியாக கத்த, சைக்கோத்தனமான சிரிப்புடன் எழுந்து செல்கிறான் வர்மன். போகும் போதே ஒரு சுத்தியலை உருவிச் செல்கிறான். சுருட்டு புகையும் வாயுடன் “வர்மனைக் காப்பாத்தறதுக்கு வர்மனே போதுண்டா” என்று ஆக்ரோஷமாக சொன்னபடி சுத்தியலை ஓங்கி.. நச்…
காவல்துறையில் அஸிஸ்டெண்ட் கமிஷனராக இருக்கும் தனது மகன் மர்மமான முறையில் காணாமல் போவதால் அவனைத் தேடிக் கண்டுபிடிக்கும் பயணத்தில் இறங்குகிறார் முத்துவேல். (ரஜினிகாந்த்). அவர் ஒரு முன்னாள் ஜெயிலர். அந்தப் பயணம் சீனு என்பவனை பலி கேட்கிறது. சீனு வர்மனின் ஒரு முக்கியமான பிஸ்னஸ் காண்டாக்ட்.
ஒருவன் தனக்கு எதிரியாகி விட்டால் முதலில் எதிரியின் குடும்பத்தைத் தூக்குவதுதான் வர்மனின் பாலிசி. கடைசியாகத்தான் எதிரியிடம் வருவான். எனவே முத்துவேலின் பேரனை பள்ளி வாசலில் போட்டுத்தள்ள ஓர் அடியாளை ஆட்டோவில் அனுப்புகிறான். கடைசி நொடியில் இதை கவனித்து விடும் முத்துவேல் பேரனைக் காப்பாற்றுகிறார். அடுத்த கணமே வர்மனிடமிருந்து முத்துவேலிற்கு மொபைல் அழைப்பு.
“எந்தா சாரே. எங்காள் சீனுவைக் கொன்னுட்டு பேரனோட ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு இருக்கே. ம்.. ஜஸ்ட் மிஸ்ஸூ. இல்லைன்னா தலை போச்சு.. காப்பாத்திட்டல.. எவ்ளோ வாட்டி காப்பாத்திடும்.. ரெண்டு வாட்டி. பத்து வாட்டி.. நூறு வாட்டி காப்பாத்திடுமா.. ஏய்.. நான் ஆயிரம் வாட்டி பண்ணுவேன். உன் பேரன் தலையை அறுத்து உனக்கு பார்சல் அனுப்புற வரைக்கும் எனிக்கு உறக்கமில்ல சாரே!”
- என்று உறுமும் வர்மன் பின்குறிப்பாக ஒன்றை சொல்கிறான் ‘மனசிலாயோ?’. பிறகு தனது ஆட்களிடம் சொல்லி துள்ளலான இசையை ஒலிக்கச் செய்து அவர்கள் நடனமாடுவதைப் பார்த்தபடி தன்னை கூல் செய்து கொள்கிறான்.
தனது குடும்பத்திற்கு ஆபத்து ஏற்படுமோ என்று நினைக்கும் முத்துவேல் வர்மனை சந்தித்து மன்னிப்பு கேட்பதற்காக அப்பாயிண்ட்மெண்ட் கேட்கிறார். அதுவொரு முயற்சி மட்டுமே. வர்மன் அப்படியெல்லாம் மன்னிக்கும் ஆளல்ல என்பது முத்துவேலிற்கும் தெரியும். “இத்தோட நிறுத்திக்கலாம்” என்று கோரிக்கை வைக்கும் முத்துவேலிடம் மொபைலில் வர்மன் சொல்கிறான்.
“எப்ப ஸ்டார்ட் பண்ணணும் ஸ்டாப் பண்ணணும்ன்னு நான்தான் முடிவு பண்ணுவேன். வர்மனோட ஆளைக் கொன்னவனை வர்மன் சும்மா விட்டான்னா.. என் கூட வொர்க் பண்ற ஆளுங்க மதிக்க மாட்டாங்க. இதுவே வர்மனோட ஆளை வர்மன் கண்டம் துண்டமா வெட்டிப் போட்டான்னு நியூஸ் போச்சுன்னா. என் பசங்களுக்கு ஒரு பூஸ்ட்டு. இண்டஸ்ட்ரில ஒரு டாக்” என்று முத்துவேலின் கோரிக்கை நிராகரிக்கும் வர்மன், பிறகு சொல்லும் வசனத்தை கல்வெட்டில் கூட எழுதி வைக்கலாம்.
“நம்ம பார்க்கற வேலையை நாம கரெக்ட்டா பார்த்தாதானே.. நமக்காக வேலை பார்க்கறவன் அவனோட வேலையை கரெக்டா பார்க்கும்.. சத்தியமா சொல்றேன் சாரே.. நான் இதை ஹாபிக்காக பண்ணலை. ஹண்ட்ரர்ட் பொ்சென்ட் புரொபஷனல். மனசிலாயோ?” என்று கேலியான சிரிப்புடன் உரையாடலை கட் செய்கிறான் வர்மன்.
முத்துவேல் தனது குடும்பத்தை ஒரு மருத்துவமனையில் ஒளித்து வைத்திருப்பதை காவல்துறையில் உள்ள ஒரு கறுப்பு ஆட்டின் வழியாக அறிந்து கொள்ளும் வர்மன், பழிவாங்குவதற்காக செல்கிறான்.
முத்துவேலை மொபைலில் அழைத்து கேலியாக செய்தி சொல்கிறான். “எந்தா சாரே.. உன் குடும்பத்தை 150 கிலோ மீட்டர் அந்தப் பக்கம் வெச்சா. என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனச்சிட்டியா.. சாரே.. அப்ப உனக்கும்.. எனக்கும். அவ்வளவுதானா பழக்கம்.. அசிங்கப்படுத்திட்ட சாரே.. எனக்கு ரொம்ப ஹர்ட் ஆகுது. ஆக்சுவலி.. உன் பேரன் தலைய அறுத்து உனக்கு பார்சல் அனுப்பணும்னுதான் நெனச்சேன்.. ஆனா இப்ப லைவ்வா காண்பிக்கறேன்” என்றபடி முத்துவேல் தங்கியிருக்கும் அறையின் கதவை உதைப்பதற்காக ஓங்கி காலை உயர்த்துகிறான்..
ஆனால் வர்மனின் சிலைக்கடத்தல் விவரங்களை துப்பறிந்து விடும் முத்துவேல் அந்த விஷயத்தை வைத்து செக் பாயிணட் வைக்கிறார். ‘பத்து கோடி.. மயிரா போச்சு.. சாரே’ என்றபடி வர்மன் மீண்டும் காலை ஓங்க.. அவனது அடுத்தடுத்த டீல்களின் விவரங்களை முத்துவேல் சரியாக சொல்ல ‘இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்?’ என்று அதிர்ச்சியடைகிறான் வர்மன். “என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நெனச்சிட்டியா..அப்ப உனக்கும்.. எனக்கும். அவ்வளவுதானா பழக்கம்.. எனக்கு ரொம்ப ஹர்ட் ஆகுது. காலை கட் பண்றேன்” என்று செக் பாயிண்ட் வைக்கிறார் முத்துவேல்.
தனது பழிவாங்கல் உணர்ச்சியால் தொழிலே முடங்கிப் போவதை விரும்பாத வர்மன் காம்பரஸைக்கு மறுபடியும் அழைக்கிறான். “ஹாஹா.. அதெப்படி ஈஸியா விட முடியும். நீ என் ஃபேமிலியை தொட வந்தது தப்புதானே.. அதுக்கு பரிகாரமா.. அவங்க கிட்ட பத்து ரூவா தர்மம் வாங்கிட்டு வா” என்கிறார் முத்துவேல். ‘தர்மம்ன்னா..?’ என்று தனது ஆளிடம் வர்மன் கேட்க “உன்னை பிச்சையெடுக்கச் சொல்றான் வர்மா” என்று விளக்கம் கிடைக்கிறது.
அடுத்த நொடியே அறையின் கதவு பலமாக தட்டப்படுகிறது. கோபம் தாங்காமல் வர்மன் பழிவாங்கி விடுவானோ..என்று பார்த்தால்.. சட்டையைக் கழற்றி விட்டு உடம்பைக் குறுக்கி, கதவைத் திறக்கும் முத்துவேல் மனைவியிடம் “ரொம்ப பசிக்குதும்மா.. ஒரு பத்து ரூபா இருந்தா தர்மம் பண்ணுங்க தாயி" என கேட்க... முத்துவேலின் பேரன் இரக்கப்பட்டு தரும் பழைய பத்து ரூபாய் நோட்டை ஆக்ரோஷமாக வெறித்துப் பார்த்தபடி நிற்கிறான் வர்மன்.
பத்து ரூபாயை முத்துவேலிடம் ஒப்படைத்து விட்டு “உங்க ஃபேமிலியை இனிமே டிஸ்டர்ப் செய்ய மாட்டேன். அது போல சாரும்.. என் பிஸ்னஸை சார் டிஸ்டர்ப் செய்யக்கூடாது.. மனசிலாயோ?” என்று சொல்கிறான் வர்மன். ‘ஓகே’ என்கிற மாதிரி ஒப்புக் கொண்டு அவனை அனுப்புகிறார் முத்துவேல். ஆனால் இரண்டு புலிகளுமே பதுங்குவது போல் பாவனை செய்வது அடுத்த பாய்ச்சலை நிகழ்த்துவதற்காகத்தான். முத்துவேலின் குடும்பத்தை அன்று இரவே கண்டம் துண்டமாக வெட்டுவதற்கு வடக்கிலிருந்து கூலிப்படையை ஏவுகிறான் வர்மன். ஆட்டம் தொடர்கிறது.
முன்பே சொன்னதுதான். ஒரு திரைப்படத்தில் வில்லனின் காரெக்டர் வலிமையாகவும் சுவாரசியமாகவும் எழுதப்பட்டு அது ஒரு சிறந்த நடிகரின் கையிலும் கிடைத்து விட்டால் அந்தப் படத்தின் வெற்றிக்கான குறைந்தபட்ச உத்தரவாதம் அப்போதே எழுதப்பட்டு விட்டது என்று அர்த்தம். அப்படியொரு வெற்றியை ஜெயிலர் திரைப்படத்திற்கு ஈட்டித் தந்ததில் வர்மனின் பங்களிப்பும் முக்கியமானது. இந்தப் பாத்திரத்தில் அட்டகாசமாக நடித்து மறக்க முடியாத பாத்திரமாக ஆக்கி விட்டார் விநாயகன். மனசிலாயோ?!