சமுத்திரக்கனி
சமுத்திரக்கனி விசாரணை படம்

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | விசாரணை ‘முத்துவேல்’ சமுத்திரக்கனி | இவர் நல்லவரா கெட்டவரா?

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் தொடரில் ‘விசாரணை’ திரைப்படத்தில் ‘சமுத்திரக்கனி’ ஏற்று நடித்திருந்த ‘முத்துவேல்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.
Published on

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

காவல் அதிகாரி கேரக்டர் என்றால், பொதுவாக தமிழ் சினிமாக்களில் இருவகையாகத்தான் சித்தரிப்பார்கள். ஒன்று, நேர்மையான, வீரமான, கம்பீரமான போலீஸ் ஆஃபிசர். தங்கப்பதக்கம் சிவாஜி முதற்கொண்டு சிங்கம் சூர்யா வரை ஏராளமான உதாரணங்கள் இதற்குண்டு. ஏனெனில் இவை ஹீரோயிஸத் தன்மையைக் கொண்டிருக்கும். 

இரண்டாவது வகை கெட்ட போலீஸ். பொதுவாக வில்லன்கள் அல்லது துணைப் பாத்திரங்கள்தான் இந்தக் கேரக்டரை கையாள்வார்கள். லஞ்சம் வாங்குபவர்களாக, அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களாக, அரசியல்வாதிகளுக்கு துணை போகிறவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

போலீஸ்
போலீஸ்

இப்படியாக கருப்பும் வெள்ளையுமாக சித்தரிக்கப்படும் போக்கிலிருந்து மாறி, இரண்டு நிறங்களும் கலந்த கிரே ஷேடில் யதார்த்தமான முறையில் காட்டப்பட்ட காவல்துறை அதிகாரி பாத்திரங்கள் மிகக் குறைவு. அந்த வகையில் ‘விசாரணை’ திரைப்படத்தில் சமுத்திரக்கனியின் ‘முத்துவேல்’ பாத்திரம் குறிப்பிடத்தக்கது. 

முத்துவேல் நல்லவரா, கெட்டவரா?

இவர் நல்லவரா என்றால் கிடையாது. கெட்டவரா என்றால் அதுவும் கிடையாது. அதிகாரத்தின் பகடைக்காயாகவும் மனச்சாட்சியின் குரலைக் கேட்பவராகவும் இரண்டிற்கும் இடையே தத்தளிக்கும் விதத்தை தனது நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் சமுத்திரக்கனி. ‘சிறந்த துணை நடிகருக்கான’ தேசிய விருது இந்தப் படத்தின் மூலம் இவருக்குக் கிடைத்தது. 

விசாரணை படம்
விசாரணை படம்

தமிழ்நாட்டில் இருந்து பிழைப்பிற்காக ஆந்திரா சென்றிருக்கும் மூன்று இளைஞர்கள். மளிகைக் கடையில் பணிபுரிகிறார்கள். சந்தேகக் கேஸில் பிடிபட்ட அவர்களை ஒரு ஹை-ஃபுரொபைல் திருட்டு வழக்கில் சிக்க வைக்க ஆந்திர போலீஸ் முடிவு செய்கிறது. விசாரணை என்கிற பெயரில் அடி, உதை, கடுமையான சித்திரவதை என்று குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்கிறார்கள். 

ஆனால் நீதிமன்றத்தில் ஜட்ஜ் முன்னால் ஓர் இளைஞன் வாய் விட்டு அழுது உண்மையை கத்திச் சொல்ல, மற்றவர்களும் இதை அழுகையுடன் ஆமோதிக்கிறார்கள். ஆனால் இவர்கள் பேசும் தமிழ், நீதிபதிக்குப் புரியவில்லை. மொழிப் பிரச்சினை. ‘தமிழ் பேசும் நபர் யாராவது இருக்கிறார்களா?’ என்று தேடும் போது அதே நீதிமன்றத்தில் கிடைப்பவர்தான் முத்துவேல் (சமுத்திரக்கனி). இவரின் வருகை அந்த இளைஞர்களின் வாழ்க்கையில் கூடுதல் பாறாங்கல்லாக மாறப் போகிறது என்பதை அப்போது யாரும் அறிய மாட்டார்கள். ஏன், முத்துவேலுக்கே அது தெரிந்திருக்காது. 

விசாரணை படம்
விசாரணை படம்

அது சரி, தமிழக காவல்துறை அதிகாரியான முத்துவேல் எப்படி ஆந்திர நீதிமன்றத்திற்கு வந்தார்? கே.கே என்கிற ஒரு பினாமி ஆசாமி. ஆடிட்டர் என்கிற பெயரில் தமிழக எதிர்க்கட்சி தலைவரின் சொத்துக்களைப் பராமரிக்கிறவர். அவரைக் கைது செய்து அம்பலப்படுத்தினால், அடுத்த முறையும் பதவிக்கு வந்து விடலாம் என்று கணக்குப் போடுகிறது ஆளும் கட்சி. எனவே கே.கேவை ரவுண்டு கட்ட பிளான் போடுகிறது. இதை மோப்பம் பிடித்து விடும் கே.கே. ஆந்திராவிலுள்ள கோர்ட்டில் சரண் அடைய முடிவு செய்கிறார். 

ஆனால் அவர் கோர்ட்டில் சரண் அடைவதற்குள் தூக்கியாக வேண்டும். இந்த அசைன்மென்ட் இன்ஸ்பெக்டர்  முத்துவேலுவிற்கு தரப்படுகிறது. தனிப்படையாக அவர்கள் கிளம்பி ஒரு வாரமாக ஆந்திராவில் முகாமிட்டிருக்கிறார்கள். 

சமுத்திரக்கனி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | ஈகோ, பொறாமை, வெட்டி வீராப்பு, அலப்பறைகளுடன் ‘J பேபி’ மாறன்!

அப்பாவி இளைஞர்களின் வாழ்க்கையில் நுழையும் முத்துவேல்

முத்துவேலின் பிளானை மீறி கோர்ட்டிற்குள் வெற்றிகரமாக சென்று விடுகிறார் கே.கே. இது சார்ந்த டென்ஷனில் முத்துவேல் இருக்கும் போது அந்த அழைப்பு வருகிறது. “சார்.. தமிழ் தெரிஞ்சவங்களை பக்கத்து கோர்ட் ஜட்ஜ் கூப்பிடுகிறார்” என்று தகவல். அங்கு செல்லும் முத்துவேல், தமிழ் இளைஞர்கள் கதறுவதைப் பார்த்து நீதிபதியிடம் உண்மையை எடுத்துரைத்து அவர்களின் விடுதலைக்கு காரணமாக இருக்கிறார். இந்த நன்றிக்கடன் காரணமாக முத்துவேல் சொல்லும் ஒரு வேலையை அந்த இளைஞர்கள் செய்கிறார்கள். அது கே.கே.வை காருக்குள் இழுத்துப் போட்டு கடத்துவது. அதன் பின்னாலுள்ள அபாயம் குறித்து அவர்களுக்குத் தெரியவில்லை. 

விசாரணை படம்
விசாரணை படம்

போலீஸ் காரிலேயே சென்னைக்கு இளைஞர்களை அழைத்து வரும் முத்துவேல் “இனி மேலாவது ஜாக்கிரதையா இருங்க. கிளம்புங்க” என்று அனுப்புகிறார். ஆனால் விதி என்பது ஏட்டய்யாவின் வடிவில் வருகிறது. ‘அய்யா.. ஸ்டேஷன்ல ஆயுத பூஜை கொண்டாடணும்.. சர்க்குலர் வந்திருக்கு. இந்தப் பசங்களை வெச்சு ஸ்டேஷனை சுத்தப்படுத்தலாமா?” என்று கேட்க, முத்துவேல் அந்த இளைஞர்களைப் பார்க்கிறார். மீண்டும் நன்றிக்கடன். செய்ய ஒப்புக் கொள்கிறார்கள். இல்லையென்றால் எத்தனை வருடம் ஆந்திர ஜெயிலில் இருந்திருப்பார்களோ?

முத்துவேல் இன்ஸ்பெக்டராக இருக்கும் ஸ்டேஷனில்தான் கே.கே. ரகசிய விசாரணையில் வைக்கப்படுகிறார். அவரை விசாரிக்கும் விதத்தில் முத்துவேலிடம் இருக்கும் அசலான போலீஸ்காரனின் குணாதிசயம் வெளிப்படுகிறது. முதலில் “சொல்லுங்க சார்..” என்று ஆடிட்டரின் பின்னணி பற்றி புட்டுப் புட்டு வைத்து மரியாதையாக விசாரிக்கிறார் முத்துவேல். ஏனெனில் கே.கே.வின் பேக்ரவுண்ட் அப்படி. ஆனால் சாமர்த்தியசாலியான கே.கே. எந்த விஷயத்தையும் கசிய விடாமல் ஜாக்கிரதையாக பேசுகிறார். இதனால் முத்துவேலிற்கு உள்ளூற எரிச்சல் ஏற்படுகிறது.

விசாரணை படம்
விசாரணை படம்

“என்னய்யா.. அந்தாளு பேசினானா.. இல்லையா.. மேலே இருந்து கேட்டுட்டே இருக்காங்க” என்று உயர் அதிகாரியிடம் இருந்து முத்துவேலுவிற்கு நெருக்கடி வருகிறது. “அடிச்சுக் கூட விசாரி.. பரவால்ல” என்கிற மாதிரி சிக்னல் கிடைத்தவுடன் “உனக்கு ரெண்டு நிமிஷம் தரேன். அதுக்குள்ள எல்லா டீலையும் சொல்லணும். இல்லைன்னா பல அவமானங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும்” என்று சொல்லி விட்டு கே.கேவின் கன்னத்தில் பலமாக நாலைந்து அறைகளை விடுகிறார். முத்துவேலிற்குள் இருந்த போலீஸ்காரர், மிருகமாக விழித்தெழுந்ததின் அடையாளம் அது. அந்த மிருகம் உயர் அதிகாரிகளால் அவிழ்த்து விடப்பட்டது. 

சமுத்திரக்கனி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்: ‘டௌரி கல்யாணம்’ டெல்லி கணேஷ் | சின்ன ரோலிலும் அத்தனை உருக்கம்!

லாங் டேக்கில் அசத்தியிருக்கும் சமுத்திரக்கனி

ஆடிட்டரை மரியாதையுடனும் உள்ளூற எரிச்சலுடன் விசாரிக்கும் ஆரம்பக் காட்சிகள், சிக்னல் கிடைத்தவுடன் ஜட்டியுடன் கே.கே.வை கீழே அமர வைக்கும் காட்சிகள் என்று இரண்டிற்குமான நடிப்பை மிகுந்த வித்தியாசத்துடனும் நுட்பத்துடனும் தந்திருக்கிறார் சமுத்திரக்கனி. சுருட்டை முடி, உயரம், முறுக்கலான உடம்பு, கூர்மையான பார்வை என்று இயல்பிலேயே அவருக்கு ஒரு போலீஸ்காரனின் சாயல் இருக்கிறது. அது இந்தப் பாத்திரத்திற்கு கூடுதலாக உதவியிருக்கிறது.

விசாரணை படம்

ஆடிட்டர் கே.கே.வை முத்துவேல் அடிப்பது ஒரு லாங் டேக்கில் படமாக்கப்பட்டிருக்கிறது. சில நிமிடங்களுக்கு மேலாக நீளும் காட்சி இது. இந்தக் காட்சியில் சமுத்திரக்கனியின் நடிப்பு அத்தனை இயல்பாக இருக்கிறது. நாமே அந்த போலீஸ் ஸ்டேஷனில் இருப்பது போன்ற படபடப்பு ஏற்பட்டு விடுகிறது. சவுண்ட் டிசைன், ஒளிப்பதிவு, இயக்கம் போன்ற அம்சங்களோடு சமுத்திரக்கனி போன்ற திறமையான நடிகர்கள் இணையும் போது காட்சிகளுக்கு தன்னாலேயே உயிர் வருகிறது. 

முத்துவேல் இல்லாத சமயம் பார்த்து இன்னொரு உயர் அதிகாரி உள்ளே புகுந்து கே.கேவை அடித்து துவம்சம் செய்து ஏரோபிளேன் மாதிரி தொங்க விடுகிறார். உண்மை வெளியே வரக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. இந்தத் தகவல் கேட்டு ஸ்டேஷனிற்குள் கோபத்துடன் நுழையும் காட்சியிலும் சமுத்திரக்கனியின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. தொங்க விடப்பட்டதின் காரணமாக கே.கேவின் எலும்பு உடைந்து இறக்கும் நிலைமைக்கு போகிறார்.

“உன்னை வெச்சு என்னை முடிச்சாங்க. இனி வேற யாரையாவது வெச்சு உன்னை முடிப்பாங்க” என்று அசரிரீ போல சொல்லி விட்டு இறக்கிறார் கே.கே. அந்த வசனம் முத்துவேலிற்குள் சலனத்தை ஏற்படுத்துகிறது. அதுவரை உயர் அதிகாரிகளுக்கு அடிமையாக இருந்த முத்துவேல், “இல்லீங்கய்யா.. இவரை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போவேங்கய்யா.. டி.சி ஐயா கிட்ட நான் பேசிக்கறேன்” என்று உத்தரவை எதிர்த்துப் பேசும் துணிச்சலுக்கு ஆளாகிறார்.

விசாரணை படம்

இந்த சமாச்சாரம் கே.கே.வின் கொலையோடு முடியவில்லை. டெபுடி கமிஷனர் நேரடியாக ஸ்டேஷனிற்கு வந்து முத்துவேலை அமர வைத்து பேசுகிறார். இந்த மரணத்தை எப்படி லாபமாக மாற்றுவது என்கிற மாதிரியான பேச்சு அது. அதில் உடன்பட முடியாமல் தத்தளிப்புடன் அமர்ந்திருக்கிறார் முத்துவேல். அவரையே இந்த வழக்கில் சிக்க வைப்பதற்கான ஸ்கெட்ச் போடப்படுவதால் குற்றத்தை மறைப்பதைத் தவிர முத்துவேலிற்கு வேறு வழியில்லை. 

சமுத்திரக்கனி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | கண்டிப்பு, கறார், கருணை, கரிசனம்... ‘தினந்தோறும்’ ரேணுகா!

மனச்சாட்சிக்கும் பிழைப்பிற்கும் இடையே ஓர் ஊசலாட்டம்

தனது பிளானை சொல்லிக் கொண்டே டி.சி. வெளியே வரும் போது பாத்ரூம் சுத்தம் செய்வதற்காக நிற்கும் இளைஞர்களைப் பார்த்து திகைத்து விடுகிறார். இது ஆட்சியை மாற்றக்கூடிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கொலை என்பதால் ஒரு சிறு ரகசியத்தையும் கசிய விட டி.சி. தயாராக இல்லை. எனவே ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் இந்த இளைஞர்களை மாட்டி விட்டு என்கவுன்டர் செய்வதென்று ஏற்பாடாகிறது. 

ஆனால் இது முத்துவேலின் மனச்சாட்சியை உறுத்துகிறது. “அய்யா.. மிரட்டி அனுப்பிடலாங்கய்யா.. பசங்க வாய் திறக்க மாட்டாங்க” என்று டி.சி.யிடம் கெஞ்சிப் பார்க்கிறார். ஆனால் அவரோ எந்த சான்ஸையும் எடுக்க தயாராக இல்லை. முத்துவேலிற்கும் வேறு வழியில்லை. என்கவுன்டருக்கு உடந்தையாக இருக்க வேண்டிய நெருக்கடி.

விசாரணை படம்

இதை அந்த இளைஞர்கள் எப்படியோ உணர்ந்து விடுகிறார்கள்.  “அய்யா. நீங்க சாகடிக்கப் போறீங்கன்னு பேசிக்கறாங்க. நீங்க அப்படி பண்ண மாட்டீங்கள்ல?” என்று ஓர் இளைஞன் வெள்ளந்தியாகக் கேட்க, குற்றவுணர்வுடன் “இல்லை" என்று தலையாட்டும் காட்சியில் சமுத்திரக்கனியின் முகபாவம் சிறப்பாக இருக்கிறது. அதற்குள் ஒரு மரணம் நிகழ்ந்து விடுகிறது. 

“நீங்க சொன்னீங்கன்னுதானே.. ஸ்டேஷன் க்ளீன் பண்ண வந்தோம்.. எங்களைப் போய்..” என்று மற்றவர்கள்  கண்ணீர் விட்டு கெஞ்சினாலும் அவர்களுக்கு உதவ முடியாத சூழலில் இருக்கிறார் முத்துவேல். இறுதிக்காட்சியில்,  புதருக்குள் பதுங்கியிருக்கும் கடைசி இளைஞனுக்கும் முத்துவேலிற்கும் நடக்கும் உரையாடலும் சிறப்பாக இருக்கிறது. 

அப்பாவி இளைஞர்களைக் காப்பாற்ற விரும்பும் நல்லவர், வேறு வழியில்லாமல் போட்டுத் தள்ள விரும்பும் கெட்டவர் என்று இரண்டு மனநிலைக்குள்ளும் தத்தளிக்கும் காட்சிகளில் சமுத்திரக்கனியின் நடிப்பு அபாரமாக இருக்கிறது.

விசாரணை படம்

இறுதியில் கே.கே. சொன்ன வசனம்தான் முத்துவேலின் விஷயத்தில் உண்மையாகிறது. “உன்னை வெச்சு என்னை முடிச்சாங்க. இனி வேற யாரையாவது வெச்சு உன்னை முடிப்பாங்க”

இயல்பிலேயே மனச்சாட்சியைக் கொண்ட நல்ல ஆசாமி, பணிச்சூழல் காரணமாக அதைக் கழற்றி வைத்து உத்தரவுகளுக்கு அடிபணியும் முரட்டு ஆசாமி என்று இரண்டு விதமான மனநிலைகளுக்கும் அலைபாய்ந்து தத்தளிக்கும் ஒரு இன்ஸ்பெக்டரின் பாத்திரத்தை ‘முத்துவேல்’ வழியாக தனது சிறப்பான நடிப்பால் தந்து அசத்தியிருக்கும் சமுத்திரக்கனியின் பங்களிப்பை மறக்கவே முடியாது.

சமுத்திரக்கனி
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | பூரணத்துவமான அக்கா ‘பூர்ணி’யாக... ‘அலைபாயுதே’ சொர்ணமால்யா!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com