மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 68 |பாசமுள்ள தகப்பனின் பாத்திரத்தில் ’ராதா ரவி’
ராதா ரவி நடிக்க வந்து ஏறத்தாழ 48 வருடங்கள் ஆகின்றன. வில்லனாகவும் குணச்சித்திரமாகவும் நகைச்சுவையிலும் ஏராளமான பாத்திரங்களில் நடித்து விட்டார். இத்தனை வருடங்களாக அவர் நடித்திருந்தாலும், ஒரு படம், ஒரேயொரு திரைப்படம் அவருக்கு சமீபத்தில் நல்ல பெயரை வாங்கித் தந்தது. அதிலும் கூட ஒரேயொரு காட்சிதான். அந்தத் திரைப்படம் ‘பிசாசு’.
ராதாரவிக்கு என்றிருந்த திரைபிம்பத்தை ஒட்டுமொத்தமாக மாற்றியமைத்த திரைப்படம் என்று ‘பிசாசு’வை சொல்லலாம். வில்லனின் பிம்பத்தைக் கொண்டிருந்த ராதாரவியை ஒரு பாசமுள்ள தகப்பனின் பாத்திரத்தில் கற்பனை செய்வதற்கு ஓர் இயக்குநருக்கு அசாதாரணமான துணிச்சல் வேண்டும். அது மிஷ்கினிடம் இருந்தது. ‘கிரியேட்டர்’ என்கிற சொல்லுக்கு உள்ள தனித்துவமே இதுதான். அவனால் எதையும் ஆக்க முடியும்.
வில்லன் நடிகரின் பிம்பத்தை மாற்றியமைத்த இயக்குநர்
நடிகரின் பிம்பத்தை மட்டுமல்ல, பேயின் பிம்பத்தைக் கூட மிஷ்கின் இந்தப் படத்தின் மூலம் மாற்றியமைத்தார். ‘ஹாரர் படம்’ என்றாலே அது மனிதர்களைக் கொடூரமாக துரத்திக் கொல்கிற, பயமுறுத்துகிற, துன்புறுத்துகிற பேய்களை மட்டுமே இதுவரையான சினிமாவில் பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு ‘நல்ல பேயை’ முதன் முதலில் சித்தரித்த திரைப்படமாக ‘பிசாசு’வை சொல்லலாம்.
“என் அஸிஸ்டெண்ட்ஸ் முதற்கொண்டு பல பேர் கேட்டாங்க.. ஏன்.. சார். மகள் மீது இப்படி பாசம் இருக்கிற அப்பா காரெக்ட்டருக்கு ராதா ரவியா.. வேணாம் சார். செட் ஆகாது.. அவரு இதுவரைக்கும் கெட்ட ரோல்தான் பண்ணியிருக்காருன்னாங்க.. நான் பதிலுக்குச் சொன்னேன். அவர் சினிமாலதானே அப்படிப் பண்ணியிருக்காரு.. உனக்கா கெட்டது பண்ணாருன்னு கேட்டேன்” என்று ஒரு நேர்காணலில் சொல்லிச் சிரிக்கிறார் மிஷ்கின்.
தனக்கு வழங்கப்பட்ட சவாலான பாத்திரத்திற்கு நியாயம் சேர்ப்பது மாதிரியான பங்களிப்பைத் தந்திருக்கிறார் ராதாரவி. அவரை சிறப்பாக பயன்படுத்தியிருக்கிற மிஷ்கினுக்குத்தான் முதலில் பாராட்டைச் சொல்லியாக வேண்டும். ‘பிசாசு’ திரைப்படத்தில் ராதாரவி வரும் காட்சிகள் குறைவு. அதிலேயே ஒரேயொரு காட்சியில்தான் அவரது நடிப்பு சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. என்றாலும் கூட இந்தப் பாத்திரத்தை நம்மால் மறக்க முடியவில்லை என்றால் அது இயக்குநர் + நடிகரின் கூட்டணிக்கு கிடைத்த மகத்தான வெற்றி.
பாசமுள்ள தகப்பனாக ராதா ரவி
இந்தப் படத்தில் ராதாரவிக்கென்று தனியான பாத்திரப் பெயர் இல்லை. ‘பவானியின் தந்தை’ என்றுதான் குறிப்பிட வேண்டியதாக இருக்கிறது. இந்த கேரக்டரைப் பற்றி பார்ப்பதற்கு முன் படத்தின் அவுட்லைனை சுருக்கமாக பார்த்து விடலாம்.
இசைக்கலைஞனாக இருக்கும் ஓர் இளைஞன், ஓர் அழகான இளம் பெண் விபத்தில் சிக்குவதைப் பார்க்கிறான். மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடுகிறான். சாகும் தறுவாயில் அவனுடைய கையைப் பற்றிக் கொள்ளும் அந்தப் பெண், அவனை நோக்கி இறைஞ்சுவது போன்ற தொனியில் .ப்பா.. என்று கத்தி விட்டு அடிபட்ட பறவை போல் விழுந்து இறந்து போகிறாள். அந்த மரணம் அந்த இளைஞனை வெகுவாக பாதிக்கிறது.
அதன் பிறகு அவனுடைய வீட்டுக்குள் விநோதமான விஷயங்கள் நடக்கின்றன. அவன் குடிப்பதற்காக வைக்கும் பியர் பாட்டில் காணாமல் போகிறது. பேய் ஓட்டும் மந்திரவாதிகள் உள்ளிட்ட பல விஷயங்களைச் செய்கிறான். எதுவும் பலிப்பதில்லை. இறந்து போன பெண் அவனுடைய வீட்டில் ஆவி வடிவத்தில் இருப்பதை அவனால் உணர முடிகிறது. அவனுடைய நிம்மதி பறி போகிறது. அவனுடைய அம்மாவிற்கு மண்டையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கும்படியாகிறது.
இந்தப் பேயால் தனது நிம்மதியே தொலைந்து போனதை எண்ணி எப்படியாவது இந்தத் தொல்லையில் இருந்து விடுபட நினைக்கிறான். துப்பறிவாளன் போல பெண்ணின் விபத்து சார்ந்த வழக்கை ஆராய்கிறான். பெண்ணின் வீடு இருக்கிற இடமும் அவளது தகப்பனார் பற்றிய விவரமும் அவனுக்கு கிடைக்கிறது. இறந்து போன இளம் பெண்ணின் பெயர் பவானி. அந்தப் பெண்ணின் தந்தைதான் ராதாரவி.
ஒரு விபத்தும் அதன் எதிர்வினைகளும்
ராதாரவிக்குச் சொந்தமான ஐஸ் பாக்டரிக்குப் பின்னால் உள்ள மைதானத்தில் தனது மகளை கல்லறை கட்டி புதைத்து வைத்திருக்கிறார். இளைஞனும் நண்பர்களும் செல்லும் போது, தயாராகிக் கொண்டிருக்கும் கல்லறையின் பக்கத்திலேயே தந்தை உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு திகைத்துப் போய் திரும்புகிறான்.
வீட்டில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் அதிகமாகின்றன. எனவே நண்பர்களை அழைத்துக் கொணடு கடப்பாறை உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு கல்லறை இருக்குமிடத்திற்கு கொலைவெறியுடன் விரைகிறான், அந்த இளைஞன். கல்லறையை உடைத்து பிணத்தை எரித்தால்தான் பேயின் ஆர்ப்பாட்டம் அடங்கும் என்கிற நோக்கத்துடன் அவர்கள் ஆவேசமாக செயல்பட, சத்தம் கேட்டு வரும் பெரியவர் அவர்களைத் தடுக்கிறார்.
“டேய் .. யார்ரா நீங்கள்லாம்.. அது என் பொண்ணோட சமாதிடா.. அதை ஏண்டா இடிக்கறீங்க.. வேணாண்டா.. விட்டுடுங்கடா.. அவ என் சாமிடா.. பவானி நான் பெத்த பொண்ணுடா.. ‘ என்று பெரியவர் கதறினாலும் இளைஞர்களின் ஆவேசம் அடங்கவில்லை. அவரை அடித்து தள்ளி விட்டு கல்லறையை இடித்தாலும் பெரியவர் கெஞ்சுவது இளைஞனின் மனதை சலனப்படுத்துகிறது. “யோவ்.. உன் பொண்ணு.. என் உசுரை வாங்கறாய்யா.. என் வீட்ல வந்து உக்காந்துக்கிட்டு அட்டகாசம் பண்றா. என் அம்மாவுக்கு மண்டைல அடிபட்டுச்சு.. அவங்களுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா. உன் பொண்ணு உயிரோட இருந்தா கொலை பண்ணியிருப்பேன்..” என்று ஆவேசமாக கத்தும் இளைஞனிடம் “என்னது.. என் பொண்ணு.. உங்க வீ்ட்ல இருக்காளா?” என்று ஆச்சரியமாகக் கேட்கிறார் பெரியவர்.
‘அது பேய் இல்ல.. நம்ம வீட்டு சாமி’...
“வாய்யா. காட்டறேன்.. நீயே வந்து பாரு” என்று அவரை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான் இளைஞன். வீடு நிசப்தமாக இருக்கிறது. எந்த விநோத சம்பவமும் நிகழவில்லை. காத்திருக்கிறார்கள். பொறுமையிழக்கும் பெரியவர் கிளம்ப முயற்சிக்க, இளைஞன் தடுத்து நிறுத்தி “எங்கய்யா. கௌம்பறே.. உன் பொண்ணால என் நிம்மதி போச்சு. அவளுக்கு நான் நல்லதுதானே பண்ணேன்.. என் அம்மா ஆஸ்பிட்டல்ல கிடக்கறாங்க. உன் பொண்ணைக் கூட்டிட்டுப் போ” என்று கத்த “என்னடா.. உளர்ற. அவதான் செத்துப் போயிட்டாளே.. நீதானே ஆஸ்பிட்டல்ல சேர்த்தே.. உனக்கு பணம் கிணம் வேணும்னா சொல்லு” என்று பெரியவரும் பதிலுக்கு ஆத்திரப்படுகிறார்.
அப்போது மருத்துவமனையில் இருந்து அம்மாவின் தொலைபேசி அழைப்பு. பேயின் கொடுமையை நிரூபிக்க விரும்பும் மகன், “அம்மா.. சொல்லும்மா.. அந்தப் பேய்தானே.. உன்னைக் கீழ தள்ளிச்சு.. ஸ்பீக்கர்ல போடறேன். சத்தமா சொல்லுங்கம்மா. எல்லோரும் கேக்கணும்” என்று தனது தரப்பை நிரூபிக்க ஆவேசப்படுகிறான். அவனுடைய அம்மா சொல்லும் விளக்கம் முற்றிலும் வேறானதாக இருக்கிறது. “அது பேய் இல்லடா.. தெய்வம். என்னைக் காப்பாத்தின தெய்வம். பாத்ரூம்ல வழுக்கி தலைல அடிபட்டுக் கிடந்தேன். யாருமே இல்ல. அப்பத்தான் அவளைப் பார்த்தேன். அவளாலதான் நான் இப்ப உயிரோடு இருக்கேன்.. அவ நம்ம சாமிடா” என்று சொல்ல பொியவர் திகைத்துப் போகிறார். அவருக்கு ஏதோவொன்று புரிந்தது போல் இருக்கிறது.
ஏதோவொன்றை தீர்மானித்தவர் போல, மேஜை மீது சிகரெட் மற்றும் தீப்பெட்டியை வைக்கிறார். அப்போது அது நிகழ்கிறது. கிச்சன் சிம்னியின் வழியாக ஒரு உருவம் விரைந்து வந்து சிகரெட், தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு மறைகிறது.
ஒரு தகப்பனின் பாசக் கதறல்
பெரியவருக்குப் புரிந்து விடுகிறது. அது அவரது மகள்தான். “அய்யோ.. என்னைப் பெத்தவளே.. என் சாமி.. அம்மா.. அப்பாவைப் பாரும்மா பவானி. அப்பா கிட்ட வாம்மா.. நம்ம வீட்டுக்குப் போலாம்மா.. வீட்ல யாருமே இல்லம்மா.. பவானி.. ஃபேக்டரில அப்பாவிற்கு உதவியா இரும்மா.. இவ்ள தூரம் ஏம்மா வந்தே.. இந்தப் பையன் உனக்கு நல்லதுதானே பண்ணான்.. நாம ஏம்மா இன்னொருத்தருக்கு பாரமா இன்னொரு வீட்ல இருக்கணும்.. வந்துடும்மா.. சாமி.. ஏன் கண்ணு.. அப்பாவைப் பார்க்கப் பிடிக்கலையா.. எனக்கு யாருமே இல்லம்மா.. வந்துடும்மா.. நம்ம வீட்ல நீ சாமியா இரு சாமி.. அப்பா அநாதையா ஆயிட்டம்மா..”...
சில நிமிடங்களுக்கு மேல் நீளும் காட்சி இது. தவழ்ந்து கொண்டே வந்து இறைஞ்சியபடியே கதறி அழுத படி ஒவ்வொரு அறையாக ஸ்தூல வடிவத்தை தேடிய படியே பேசி நடிக்க வேண்டும். இந்த ஒரு காட்சியில் ராதாரவியின் நடிப்பு அத்தனை அற்புதமாக இருக்கிறது. மிஷ்கின் இவரைக் கையாண்ட விதமும் ராதாரவியின் அத்தனை வருட திரை அனுபவமும் இணைந்து இந்தக் காட்சியை மறக்க முடியாததாக ஆக்கியிருக்கிறது.
விபத்தில் இறந்து போன மகளின் மீது கணக்கில் அடங்காத பாசத்தையும் பிரியத்தையும் பிரிவுத் துயரத்தையும் வெளிப்படுத்தும் ஒரு தகப்பனின் பாத்திரத்தில் மறக்க முடியாத நடிப்பைத் தந்திருக்கிறார் ராதா ரவி.