காதலிக்க நேரமில்லை, டென் ஹவர்ஸ் pt web
சினிமா

கடைசி நேரத்தில் விலகிக் கொண்ட விடா முயற்சி.. பொங்கல் ரேஸில் மோதும் 4 திரைப்படங்கள்!

பொங்கலன்று எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள சூழலில், தற்போது வரை பொங்கல் ரேஸில் 4 திரைப்படங்கள் உள்ளன.

Angeshwar G

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விடாமுயற்சி திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டதில் இருந்து அஜித்தின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இத்தகைய சூழலில், புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ள படக்குழு, அறிக்கையின் அடுத்த வரியிலேயே அஜித் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தவிர்க்க முடியாத சூழல் காரணமாக விடாமுயற்சி படம் பொங்கலன்று வெளியாகாது என தெரிவித்துள்ளது.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

இந்நிலையில், பொங்கலன்று எந்தெந்த திரைப்படங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது வரை பொங்கல் ரேஸில் 4 திரைப்படங்கள் உள்ளன.

காதலிக்க நேரமில்லை

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான பாடல்கள் எல்லாம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்நிலையில், காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கலன்று வெளியாக இருப்பதாக என தகவல் வெளியாகியுள்ளது.

வணங்கான்

இயக்குநர் பாலா இயக்கத்தில் அருண்விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்கான். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் v creations நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர்கள், பாடல்கள் வெளியாகி பாரட்டுகளையும் வரவேற்பினையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படமும் பொங்கலை ஒட்டி ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகிறது.

கேம் சேஞ்சர்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கேம் சேஞ்சர். தமன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இத்திரைப்படமும் பொங்கலை ஒட்டி ஜனவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரைலர் நாளை மாலை (2/1/25) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படத்தின் பாடல்கள் வரவேற்பினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

டென் ஹவர்ஸ்

இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் இயக்கத்தில் நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ். இத்திரைப்படத்தினை Duvin Studios தயாரித்துள்ளது. இப்படத்திற்கான அறிவிப்பினை சிபி சத்யராஜின் 41 ஆவது பிறந்த நாளன்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இயக்குநர்கள் கணேஷ் விநாயக், ஜெகன் ராஜசேகர் மற்றும் வினோத் DL போன்றோரிடம் உதவி இயக்குநராக இளையராஜா கலியபெருமாள் பணி புரிந்துள்ளார். க்ரைம் த்ரில்லராக உருவாகியுள்ள இத்திரைப்படம் பொங்கலை ஒட்டி வெளியாக உள்ளது.