கொலை வழக்கில் கேரள நர்சுக்கு மரண தண்டனை.. தாயார் கண்ணீர் மல்க வேண்டுகோள்!
கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு, ஏமன் நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. அந்நாட்டைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்குக்காக அவருக்கு இந்த தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அவருடைய மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபரும் ஒப்புதல் அளித்துள்ளார். விரைவில் அந்த தண்டனை நிறைவேற்றப்பட இருக்கிறது. இந்த நிலையில், அவரது தாயார் பிரேமா குமாரி, மத்திய மற்றும் கேரள அரசுகளின் உதவிகளை நாடியுள்ளார். இதுகுறித்து உள்ளூர் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், ”இந்திய அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும். மகளுக்கு இன்னும் அதிக நேரம் இல்லை. இந்திய மற்றும் கேரள அரசுகளுக்கும், அவளைக் காப்பாற்ற அமைக்கப்பட்ட குழுவிற்கும், இதுவரை வழங்கிய அனைத்து ஆதரவிற்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் இது எனது இறுதி வேண்டுகோள். தயவு செய்து அவளுடைய உயிரைக் காப்பாற்ற உதவுங்கள். நேரம் கடந்துவிட்டது” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு டிசம்பரில் டெல்லி உயர் நீதிமன்றத்தால் பிரேமா குமாரி ஏமன் செல்ல அனுமதிக்கப்பட்டார், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துடன் blood money பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் மற்றும் அவரது மகளை தூக்கில் இருந்து காப்பாற்றவும் இந்த அனுமதி வழங்கப்பட்டது. அவரது மகளை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டு வந்தார். இதற்காக அங்கு தங்கி, கொலை செய்யப்பட்ட மஹ்தியின் குடும்பத்தினருடன் இழப்பீட்டுத் தொகை [blood money] குறித்து பேச்சுவார்த்தை நடத்த முயன்றார். பாதிக்கப்ட்டவர் குடும்பம் பணத்தை ஏற்றுக்கொண்டு சம்மதம் தெரிவித்தால் தண்டனை குறைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும். இது ஏமனில் ஒரு பாரம்பரிய நடைமுறையாகும். ஆனால் நிமிஷா விஷயத்தில் blood money பேச்சுவார்த்தை முயற்சிகள் பின்னடைவைச் சந்தித்து வந்தது. தற்போது மரண தண்டனைக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு blood money கொடுக்க தயாராக இருப்பதாகவும் அவர்களுடன் உடனே பேச்சுவார்த்தை நடத்தி அதை ஏற்றுக்கொள்ள சம்மதிக்க வைக்க வேண்டும் என்று பிரேமா குமாரி மற்றும் நிமிஷாவின் கணவர் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரத்தில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு தொகையை ஏற்க மறுத்து வரும் நிலையில், ஒரு மாதத்துக்குள் தண்டனை நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. என்றாலும், ”இந்த விவகாரத்தில் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ள மத்திய அரசு, அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் 2008ஆம் ஆண்டு ஏமனுக்குச் சென்ற அவர், செவிலியாகப் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே 2014ஆம் ஆண்டு சொந்தமாய்க் கிளினிக்கைத் தொடங்கும் வண்ணம், நிமிஷா பிரியா அந்த நாட்டைச் சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரைத் தொடர்புகொண்டார். அதன்பிறகு இருவருக்கும் நிதி தொடர்பாக இடையே பிரச்னைகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக 2016இல் மஹதி அளித்த புகாரின் பேரில் நிமிஷா கைது செய்யப்பட்டார். என்றாலும், பின்னாட்களில் அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆயினும் அவர்களுக்குள் பிரச்னை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், நிமிஷா, தலால் அபு மஹதியிடமிருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்க முயற்சி செய்தார். ஆனால் அந்தச் சம்பவத்தில், தோல்வியுற்ற நிமிஷா பிரியா, மஹதிக்கு மயக்க மருந்து செலுத்தி ஊசி மூலம் கொலை செயததாக அவர்மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நிமிஷா பிரியா தப்ப முயன்றபோது அந்நாட்டு போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிமிஷாவுக்கு, இந்த வழக்கில், அந்த நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்போதிலிருந்து அந்நாட்டுச் சிறையில் நிமிஷா உள்ளார்.