கொலை வழக்கில் கேரள நர்சுக்கு மரண தண்டனை - ஒப்புதல் அளித்தார் ஏமன் அதிபர்! இந்தியா சொல்வதென்ன?
யார் இந்த நிமிஷா பிரியா? கொலை வழக்கின் பின்னணி என்ன?
கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் 2008ஆம் ஆண்டு ஏமனுக்குச் சென்ற அவர், செவிலியாகப் பணிபுரிந்து வந்தார். இதற்கிடையே 2014ஆம் ஆண்டு சொந்தமாய்க் கிளினிக்கைத் தொடங்கும் வண்ணம், நிமிஷா பிரியா அந்த நாட்டைச் சேர்ந்த தலால் அபு மஹதி என்பவரைத் தொடர்புகொண்டார். அதன்பிறகு இருவருக்கும் நிதி தொடர்பாக இடையே பிரச்னைகள் எழுந்ததாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக 2016இல் மஹதி அளித்த புகாரின் பேரில் நிமிஷா கைது செய்யப்பட்டார். என்றாலும், பின்னாட்களில் அவர் விடுவிக்கப்பட்டார். ஆயினும் அவர்களுக்குள் பிரச்னை தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், நிமிஷா, தலால் அபு மஹதியிடமிருந்து தனது பாஸ்போர்ட்டை மீட்க முயற்சி செய்தார். ஆனால் அந்தச் சம்பவத்தில், தோல்வியுற்ற நிமிஷா பிரியா, மஹதிக்கு மயக்க மருந்து செலுத்தி ஊசி மூலம் கொலை செயததாக அவர்மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கொலை வழக்கில் கைதான நிமிஷா.. மரண தண்டனை விதிப்பு
இதைத் தொடர்ந்து நிமிஷா பிரியா தப்ப முயன்றபோது அந்நாட்டு போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிமிஷாவுக்கு, இந்த வழக்கில், அந்த நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அப்போதிலிருந்து அந்நாட்டுச் சிறையில் நிமிஷா உள்ளார். 2020ஆம் ஆண்டு, சனாவில் உள்ள ஒரு விசாரணை நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
மரண தண்டனையில் இருந்து தப்பிக்க இருந்த ஒரே வாய்ப்பு - நிமிஷாவின் தாய் எடுத்த முயற்சி!
இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டால் மரண தண்டனை ரத்து செய்வதற்கான வாய்ப்பை ஏமன் நீதிமன்றம் தெரிவித்தது.
இதற்கிடையே, தன் மகள் நிமிஷா பிரியாவை மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் அவரது தாய் பிரேமா மேரி ஈடுபட்டார். அதன்படி, ஏமனுக்குச் சென்ற நிமிஷா பிரியாவின் தாய் பிரேமா குமாரி, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் இழப்பீடு தொகை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்திய தூதரகம் சார்பில் வழக்கறிஞரும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருந்தது.
மறுபுறம், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஏமன் நாட்டு நீதிமன்றத்தில் நிமிஷா பிரியா மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை ஏமன் நாட்டு உச்சநீதிமன்றம் நிராகரித்ததுடன், அவருடைய மரண தண்டனையையும் நவம்பர் 2023இல் தீர்ப்பை உறுதி செய்தது.
மரண தண்டனையை உறுதி செய்த ஏமன் அதிபர்!
இழப்பீடு தொகையை ஏற்க பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்துவரும் நிலையில், மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் ரஷீத் முகமது அல்-அம்மி ஒப்புதல் அளித்துள்ளார். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இழப்பீடு தொகையை ஏற்க மறுத்து வரும் நிலையில், ஒரு மாதத்துக்குள் தண்டனை நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
”நிமிஷா குடும்பத்திற்கு உதவதயார்” - இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்
“நிமிஷா பிரியா குடும்பத்தின் சூழலை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மத்திய அரசு இந்த விவகாரத்தில் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது” என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.