அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு கிடைக்குமா? நிபுணர்கள் கூறுவது என்ன?
உலகின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாக கருதப்படும் நோபல் பரிசு, ஸ்வீடனை சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் (Alfred Nobel) நினைவாக, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தான், 2026-ம் ஆண்டுக்கான நோபல் விருதுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்பதில் அனைவரின் கவனமும் குவிந்திருக்கிறது. காரணம் என்ன? என்பது குறித்துப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற பிறகு, ட்ரம்ப் பல்வேறு சர்வதேச பிரச்சினைகளில் தலையிட்டு, இஸ்ரேல் காசா போர் மற்றும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் உள்ளிட்ட பல மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்து உலகில் அமைதியை ஏற்படுத்தியதாக கூறிவருகிறார். அதனடிப்படையில், தனக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் ட்ரம்ப் பலமுறை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார். குறிப்பாக, இந்த கருத்துக்கள் கடந்த 2025-ம் ஆண்டு நோபல் பரிசு அறிவிப்பின் போது சர்வதேச அளவில் பெறும் கவனத்தை பெற்றிருந்தது. ட்ரம்ப்க்கு நோபல் வழங்கப்பட வேண்டும் என்று கடந்த ஆண்டு இஸ்ரேல், பாகிஸ்தான் உள்ளிட்டநாடுகள் பரிந்துரை செய்திருந்தன. ஆனால், நோபல் குழுவின் முடிவு வேறுவிதமாக அமைந்தது.
வெனிசுலாவில் ஜனநாயக உரிமைகளுக்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து அமைதியான மாற்றம் ஏற்படுவதற்காகவும் போராடியதற்காக மரியா மச்சாடோவுக்கு (Maria Machado) 2025 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ட்ரம்பும் வெள்ளை மாளிகையும் கடுமையான எதிர்வினையாற்றியிருந்தன. குறிப்பாக, ”அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது” என காட்டமாக விமர்சித்திருந்தது.
இந்தச்சூழலில் தான், 2026-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த அக்டோபர் 5-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுக்கு பரிசு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு வரும் வெள்ளிக்கிழமை அதாவது அக்டோபர் 9-ம் தேதி அறிவிக்கப்படவிருக்கிறது. இந்தச்சூழலில் தான், ட்ரம்புக்கு இந்த ஆண்டுக்கு நோபல் பரிசு அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா? என்ற கேள்வி எழும் நிலையில், அதற்கு வாய்பில்லை எனக் கூறுகின்றனர் நிபுணர்கள்.
ஈரானுக்கு எதிரான போர், சர்வதேச ஒத்துழைப்பு அமைப்புகள் மற்றும் ஊடகங்கள் மீதான அவரது விமர்சனங்கள் உள்ளிட்ட காரணங்களால், அவருக்கான வாய்ப்பு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஒஸ்லோவில் உள்ள அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் ஹாக்கான் ஜெர்லோ (Håkon Jerlo), நோபல் பரிசு தேர்வில் ட்ரம்ப் ஒரு முக்கிய காரணியாக இருப்பார் என்றும், அவருக்கு பரிசு வழங்குவது நன்மையை விட தீமையை ஏற்படுத்துமா? என்பதையும் நோபல் குழு பரிசீலிக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், இந்த ஆண்டு அமைதி நோபல் பரிசுக்கு மொத்தம் 287 தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சூடானில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வரும் Emergency Response Rooms மற்றும் Save the Children ஆகிய அமைப்புகளும், உக்ரைன் குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் மைகோலா குலேபா (Mykola Kuleba) உள்ளிட்டோர் இடையே போட்டி நிலவலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், ட்ரம்புக்கு நோபல் அமைதிப் பரிசு கிடைக்குமா என்பது வரும் வெள்ளிக்கிழமை தெரிந்துவிடும்.

