மொஜ்தபா காமேனி எங்கே? தலைமையில்லாமல் திண்டாடும் ஈரான்? கடுமையாக விமர்சிக்கும் டிரம்ப்!
செய்தியாளர் - ராஜ்குமார்.ர
ஈரானின் அணுசக்தித் திட்டம் தொடர்பாக பல ஆண்டுகளாக அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் நீடித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது மிகப்பெரிய அளவிலான தாக்குதலைத் தொடங்கின. இந்தத் தாக்குதலில் ஈரானின் அப்போதைய உச்சத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். அவருடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் சிலரும் உயிரிழந்தனர். அலி காமேனியின் மரணத்துக்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா காமேனி ஈரானின் புதிய உச்சத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், புதிய உச்சத் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு மொஜ்தபா காமேனி இதுவரை பொதுமக்கள் முன்னிலையில் தோன்றவில்லை. தாக்குதலில் அவர் காயமடைந்ததாகவும், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், ஈரான் அதிகாரிகள் அவர் நாட்டை வழிநடத்தி வருவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே அவர் பொதுவெளியில் தோன்றாமல் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். ஆனால், மொஜ்தபா காமேனியின் இந்தத் தொடர்ச்சியான பொதுவெளி இல்லாமை பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
குறிப்பாக, அவரது தந்தை அலி காமேனியின் இறுதிச் சடங்கில் உலக நாடுகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் அவரது சகோதரர்கள் மூவர் கலந்து கொண்ட நிலையில், புதிய உச்சத் தலைவரான மொஜ்தபா காமேனி அங்கு இல்லாதது சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இதனால், மொஜ்தபா காமேனியின் தற்போதைய நிலை என்ன? அவர் எங்கிருந்து நாட்டை வழிநடத்துகிறார்? ஈரானின் முக்கிய முடிவுகளை உண்மையில் எடுப்பது யார்? என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
ஈரானின் அரசியல் அமைப்பில் உச்சத் தலைவர் மிக முக்கியமான அதிகார மையமாகக் கருதப்படுகிறார். ஆனால், மொஜ்தபா காமேனி நேரடியாக பொதுவெளியில் தோன்றாத நிலையில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிப் பாதுகாப்புப் படையான IRGC-ன் செல்வாக்கு குறித்து விவாதங்களும் அதிகரித்துள்ளன.போர் தொடர்பான முக்கிய ராணுவ முடிவுகளில் IRGC முக்கியப் பங்கு வகித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ஈரானில் அதிகாரம் ஒரே நபரிடம் குவிந்துள்ளதா? அல்லது உச்சத் தலைமை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அதிகார மையங்களுக்குள் பகிரப்பட்டுள்ளதா? என்ற விவாதமும் தீவிரமடைந்துள்ளது. இந்தச் சூழலில்தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் தற்போதைய தலைமை குறித்து கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.
அக்டோபர் 6ஆம் தேதி பேசிய டிரம்ப், ஈரானின் உயர்மட்ட தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ள நிலையில், தற்போது அந்த நாட்டை உண்மையில் யார் வழிநடத்துகிறார்கள் என்பதே தெளிவாக இல்லை என்று தெரிவித்தார்.“அவர்களின் தலைவர்கள் போய்விட்டார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த தலைவர்களும் போய்விட்டார்கள். எனக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால், இந்த நாட்டை யார் நடத்துகிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை” என்று டிரம்ப் கூறினார். ஈரானின் தலைமை குறித்து ஏற்கனவே பல்வேறு கேள்விகளும் கருத்துகளும் எழுந்து வரும் நிலையில், டிரம்பின் இந்தக் கருத்து தற்போது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
