‘ப்ளீஸ் தூங்காதீங்க..’ - ரத்த வெள்ளத்தில் இந்திய விமானி.. 45 நிமிடம் போராடிய பல் மருத்துவர்!
ஃபிளைதுபாய் சம்பவத்தில் இந்திய விமானியைக் காப்பாற்ற பல் மருத்துவர் ஒருவர் 45 நிமிடங்கள் போராடியுள்ளார். அப்போது, இந்திய விமானி பல் மருத்துவரிடம் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை கவனம் ஈர்த்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சார், உடல்நலம் தேறி வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
துபாயிலிருந்து கடந்த செப்டம்பர் 30 அன்று, டெல் அவிவ் நோக்கி ஃபிளைதுபாய் விமானம் சென்று கொண்டிருந்தது. இதில் ஓமன் நாட்டுத் துணை விமானி ஹமாம் அல்-ஹம்மாமி, இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரைத் தாக்கி, விமானத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற முயன்றார். இதனால், அந்த விமானம் 30 வினாடிகளுக்கும் சற்று அதிகமான நேரத்தில் 16,000 அடி கீழே சரிந்தது. எனினும் காயத்துடன் போராடிய விமானி ஸ்மித் மச்சார், சாமர்த்தியமாக விமானம் கடத்தப்பட்டதற்கான சர்வதேச 'Squawk 7500' அவசர எச்சரிக்கை குறியீட்டை அனுப்பினார். மேலும், காக்பிட் (Cockpit) கதவைத் திறந்து பயணிகள் மற்றும் ஓய்வில் இருந்த விமானிகள் உதவியுடன் அந்த தாக்குதல் சம்பவத்தை முறியடித்தார்.
இதில் உயிருக்குப் போராடிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சாரை இஸ்ரேலில் வசிக்கும் ஜார்ஜிய பல் மருத்துவர் டாக்டர் ஷுடா மூசாயேவ் முதலுதவி செய்து காப்பாற்றினார். அவரைக் காப்பாற்ற கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் போராடியதாக பல் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “அவருக்கு மிகவும் ஆழமான வெட்டுக்காயங்கள் இருந்தன. அவரது தலையிலிருந்தும் இடது கையிலிருந்தும் அதிக ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது. அதற்காக ஐஸ் கட்டிகள் அதிகம் தேவைப்பட்டன. தொடர்ந்து ஐஸ் கட்டிகளை வைத்து அழுத்திக் கொண்டிருந்தேன். கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அப்படியே செய்துகொண்டிருந்தேன். இதற்கிடையே அவருடைய சுயநினைவு முக்கியம் என்பதை நான் உணர்ந்தேன். இதற்காக அவரிடம் குடும்பம் பற்றிப் பேச்சு கொடுத்தேன். தொடர்ந்து, ’தயவுசெய்து தூங்காதீர்கள், நீங்கள் எங்களுக்குத் தேவை.. நீங்கள் உங்கள் குடும்பத்திடம் திரும்பிச் செல்வீர்கள், நாம் விரைவில் தரையிறங்குவோம்.
எல்லாம் சரியாகிவிடும்’என்றேன். அப்போது இந்திய விமானி, தனது பெயருடன் துபாயில் வசிப்பதாகவும் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்ததுடன், 'தயவுசெய்து எனக்கு உதவுங்கள். நான் இங்கே இறக்க விரும்பவில்லை' என தெரிவித்தார். உண்மையில் ஸ்மித் ஒரு நாயகன். அவர், எங்கள் உயிரைக் காப்பாற்றினார், நாங்கள் அவர் உயிரைக் காப்பாற்றினோம்” என பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சார், உடல்நலம் தேறி வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

