தொடரும் தாக்குதல் | ஈரானின் கெஷ்ம் தீவை குறிவைக்கும் அமெரிக்கா.. பின்னணி என்ன?
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடரும் சூழலில், ஹார்முஸ் நீரிணை நுழைவாயிலில் அமைந்துள்ள கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தியது. யுனெஸ்கோ புவிசார் பூங்காவாகவும், ஈரானின் நிலத்தடி ராணுவத் தளங்கள், ரேடார், Electronic Warfare அமைப்புகள், அதிவேக கடற்படகுகள் குவிந்துள்ள இடமாகவும் இருக்கும் இந்தத் தீவு, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் கடற்படை நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும் முக்கியத் தளமாக விளங்குகிறது.
செய்தியாளர்: M.மீரா
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 20% கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் ஈடுபட்டு வருகிறது. போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் போர் நிறுத்தத்தையும் மீறி இஸ்ரேல் லெபனான் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வருவதால் அமெரிக்கா- ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் தொடராது என ஈரான் அறிவித்தது.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு ஜூன் 2ஆம் தேதி, ஈரானின் கோருக் மற்றும் கெஷ்ம் தீவுகளில் அமைந்துள்ள ரேடார் மற்றும் ட்ரோன் கட்டுப்பாட்டு மையங்கள்மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இந்த வருடத்தில் மட்டும் 4 முறை கெஷ்ம் தீவுகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. கெஷ்ம் தீவு (Qeshm Island) வளைகுடாவில் அமைந்துள்ள ஈரானுக்குச் சொந்தமான மிகப்பெரிய தீவு. ஈரானின் தெற்குக் கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள இந்தப் பகுதி, உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹார்முஸ் நீரிணைக்கு மிக நெருக்கத்தில் அமைந்துள்ளது.
இந்தத் தீவு, அதன் தனித்துவமான பாறை அமைப்புகள், பள்ளத்தாக்குகள், குகைகள் மற்றும் கடல்சார் காடுகளுக்காக அறியப்படுகிறது. மேலும் இது, யுனெஸ்கோவின் உலகளாவிய புவிசார் பூங்காக்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. வளைகுடாவில் பயணிக்கும் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் மற்றும் சர்வதேச எண்ணெய்க் கப்பல்களை விரைவாகச் சூழ்ந்து தாக்கும் வல்லமை கொண்ட நூற்றுக்கணக்கான சிறிய, அதிவேகப் படகுகள் இத்தீவின் மறைவிடங்களில்தான் நிறுத்தப்பட்டுள்ளன.
கடற்படை ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள், கெஷ்ம் தீவின் மலைக் குகைகள் மற்றும் நிலத்தடி தளங்களில் மறைமுகமாக நிறுவப்பட்டுள்ளன. தீவின் பாறை நில அமைப்பை சாதகமாக பயன்படுத்தி, ஈரான் விரிவான நிலத்தடி ராணுவ கட்டமைப்புகளை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா அல்லது இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கு எளிதில் சேதமடையாத வகையில், சக்திவாய்ந்த Bunker-buster குண்டுகளையும் தாங்கக்கூடிய திறன் கொண்ட ’ஏவுகணை நகரங்கள்’ இங்கு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தீவில் அமைக்கப்பட்டுள்ள ஈரானின் நவீன ரேடார் கண்காணிப்பு அமைப்புகள் மற்றும் Electronic Warfare சாதனங்கள் வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் 5-ஆவது கடற்படை (US 5th Fleet) மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் நடமாட்டங்களை 24 மணி நேரமும் கண்காணிக்கின்றன. பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தலைமையகம் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் ஆகியவற்றுக்கு மிக அருகில் கெஷ்ம் தீவு அமைந்துள்ளது.
ஹார்முஸ் நீரிணையின் (Strait of Hormuz) நுழைவாயிலில், கெஷ்ம் தீவு (Qeshm Island) அமைந்துள்ளதால், இந்த சர்வதேச கடல்வழிப் பாதையைக் கட்டுப்படுத்துவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. கெஷ்ம் தீவு இந்த நீரிணைக்கு இணையாக, மிக நீண்ட பரப்பளவோடு அமைந்துள்ளது. இதனால், இந்த நீரிணை வழியாகச் செல்லும் ஒவ்வொரு வணிகக் கப்பலும், எண்ணெய் டாங்கரும் கெஷ்ம் தீவின் மிக அருகிலேயே கடந்து செல்ல வேண்டும். இத்தீவில் இருந்துகொண்டு முழுக் கடல் வழிப் பாதையையும் ஈரானால் எளிதாகக் கண்காணிக்க முடியும்.
இவ்வாறு உலகின் எரிசக்தி விநியோக பாதுகாப்பு, கடல் வர்த்தக சுதந்திரம் மற்றும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் பாதுகாப்பு சமநிலை ஆகிய காரணங்களால் கெஷ்ம் தீவு அமெரிக்காவின் முக்கிய கவனப் பகுதியாக மாறியுள்ளது.

