வெனிசுலா | ஆதரவிருந்தும் எதிர்க்கட்சித் தலைவரை ட்ரம்ப் நிராகரித்தது ஏன்? மச்சாடோ சொல்வது என்ன?
வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரும், கடந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனக்கு ஆதரவை வழங்குவார் என எதிர்பார்த்தார். ஆனால், அவரது முடிவுக்கு ட்ரம்ப் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
அமெரிக்காவுக்குள் போதைப் பொருட்களை கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாகவும், அவற்றின் பரவலை ஊக்குவிப்பதாகவும் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீது அமெரிக்க தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தது. இந்நிலையில், கடந்த 3ஆம் தேதி அமெரிக்க ராணுவம் வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி, நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரைக் கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியது. நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, வெனிசுலாவின் துணை அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் பதவியேற்றார்.
முன்னதாக, வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவரும், கடந்தாண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மரியா கொரினா மச்சாடோ, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனக்கு ஆதரவை வழங்குவார் என எதிர்பார்த்தார். பொருளாதார உள்ளடக்கக் குழுவின் தலைவரும் வெனிசுலா அரசியல் ஆய்வாளருமான ஜார்ஜ் ஜ்ரைசாட்டியும், மச்சாடோ ஒரு இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த முடியும் என்று கணித்திருந்தார்,ஆனால், “மச்சாடோவுக்கு உள்நாட்டில் போதிய மரியாதை இல்லை” எனக் கூறி ட்ரம்ப் அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். வெனிசுலாவில், அமெரிக்கா எதிர்க்கட்சியை ஆதரிக்க முயன்றால், அது நாட்டை மேலும் சீர்குலைத்துவிடும், தவிர, நாட்டிற்குள் இன்னும் வலுவான இராணுவ இருப்பு தேவைப்படும் என அமெரிக்க அதிகாரிகள் ட்ரம்பிடம் தெரிவித்துள்ளனர். மேலும், அதிபர் ட்ரம்பைப் பொறுத்தவரை, அவருடைய கவனம் வெனிசுலாவின் எண்ணெய் மீதுதான் உள்ளது. ஜனநாயகத்தை ஊக்குவிப்பதில் அல்ல என்கின்றனர் கணிப்பாளர்கள். அத்துடன் மச்சோடோவும் கடந்த இரண்டு மாதங்களாக ட்ரம்புடன் சுமுக உறவை மேற்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் மச்சாடோவை நிராகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தனது அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் ட்ரம்புவுடன் பகிர்ந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மரியா மச்சாடோ, “எனக்கு நோபல் பரிசு கிடைத்தபோது அதை அதிபர் ட்ரம்ப்க்கு அர்ப்பணிப்பதாக அப்போதே அறிவித்திருந்தேன். அவர், அந்த விருதுக்குத் தகுதியானவர். ஜனவரி 3-இல் அவரின் நடவடிக்கையை யாரும் நம்பவில்லை. ஆனால், அவர் அனைத்துக்கும் தகுதியானவர் என்று கருதுகிறேன். அவர் என்ன நினைக்கிறார் என்பதை உலகத்துக்கு நிரூபித்துவிட்டார். இது, வரலாற்றில் இடம்பெறும். இது மைல்கல் சாதனை. இது வெனிசுலா மக்களுக்கு மட்டுமல்ல; மொத்த மனித குலத்திற்கானது” எனத் தெரிவித்துள்ளார்.

