அமைதி நோபல் பரிசு வென்ற மச்சாடோ.. நார்வேயின் தூதரகத்தை மூடிய வெனிசுலா.. இதுதான் காரணமா?
மரியா கொரினா மச்சாடோ அமைதிக்கான நோபல் பரிசு வென்றதைத் தொடர்ந்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ நார்வேயில் உள்ள தூதரகத்தை மூட உத்தரவிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது.
நார்வேயில் தூதரகத்தை மூட உத்தரவிட்ட வெனிசுலா
நடப்பாண்டுக்கான நோபல் பரிசு பற்றிய விருதுகள் அனைத்தும் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னும் அதுதொடர்பான கருத்துகளும், சர்ச்சைகளும் நின்றபாடில்லை. அந்த வகையில், மரியா கொரினா மச்சாடோ அமைதிக்கான நோபல் பரிசு வென்றதைத் தொடர்ந்து, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ நார்வேயில் உள்ள தூதரகத்தை மூட உத்தரவிட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது. உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான விருதுகள் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு 13ஆம் தேதியுடன் நிறைவுற்றன. நடப்பாண்டில் அனைத்துத் துறைகளுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன.
அதன்படி, அக்டோபர் 10ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்திற்காகப் போராடும் வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மரியா கொரினா மச்சாடோ அமைதிக்கான நோபல் பரிசு வென்ற சில நாட்களில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ நார்வேயில் உள்ள அந்நாட்டுத் தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட ஓர் அறிக்கையில், வெனிசுலாவின் வெளியுறவு அமைச்சகம், அதன் இராஜதந்திர பணிகளின் உள் மறுசீரமைப்பின் விளைவாக, நார்வேயின் தலைநகரில் உள்ள அதன் தூதரகத்தை மூட மதுரோ அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூதரகத்தை மூடுவதற்கான திடீர் காரணம் என்ன?
மச்சாடோவின் நோபல் பரிசு குறித்து நிக்கோலஸ் மதுரோவின் அரசாங்கம் இதுவரை எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நார்வே நோபல் குழுவின் முடிவை அவரது ஆட்சி ஏற்கவில்லை என்பதை இது குறிக்கிறது. இதற்கிடையில், வெனிசுலா தூதரகத்தில் தொலைபேசி சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், எந்த விளக்கமும் அளிக்காமல் வெனிசுலா, தனது ஒஸ்லோ தூதரகத்தை மூடியதாக நார்வே வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. "இது வருந்தத்தக்கது. பல விஷயங்களில் எங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், வெனிசுலாவுடன் உரையாடலைத் திறந்த நிலையில் வைத்திருக்க நார்வே விரும்புகிறது" என்று அமைச்சக செய்தித் தொடர்பாளர் சிசிலி ரோங் AFPவிடம் தெரிவித்துள்ளார். ”அமைதிக்கான நோபல் பரிசு நார்வே அரசாங்கத்தைச் சாராதது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவில் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியை ’சர்வாதிகாரம்’ என்று மச்சாடோ பலமுறை விவரித்துள்ளார். அவருக்கு எதிரான ஏராளமான அரசாங்க எதிர்ப்பு போராட்டங்களில் மச்சாடோ முன்னணியில் இருந்துள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து, மதுரோ 2024 அதிபர் தேர்தலில் மோசடி செய்ததாக குற்றம்சாட்டியுள்ளார். சரியான வெற்றியாளர், தனது கட்சி சகாவான எட்முண்டோ கோன்சாலஸ் என்று மச்சாடோ கூறி வருகிறார். மதுரோவின் சர்வாதிகாரத்தின்கீழ் தன் சக நாட்டு மக்களின் உயிர் குறித்து அஞ்சுவதாகக் கூறிய மரியா கொரினா மச்சாடோ, ஆகஸ்ட் 2024 முதல் தலைமறைவானார். இந்த நிலையில்தான் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னொரு புறம், மதுரோவின் அரசாங்கத்திற்கும் வெனிசுலா எதிர்க்கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் நார்வே தொடர்ந்து மத்தியஸ்தராக இருந்து வருகிறது. அதில் மச்சாடோவும் உறுப்பினராக உள்ளார். 2019 மற்றும் 2024க்கு இடையில் இருதரப்பினருக்கும் இடையே அவ்வப்போது பேச்சுவார்த்தைகளை நார்வே அரசாங்கம் மத்தியஸ்தம் செய்துள்ளது. இதன் விளைவாக பார்படாஸ் ஒப்பந்தம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.