முடிவுக்கு வந்த வர்த்தகப் போர் | அமெரிக்காவின் போயிங் விமான தடையை நீக்கிய சீனா!
அமெரிக்க அதிபரான டொனால்டு ட்ரம்ப், கடந்த மாதம் உலக நாடுகளுக்கு பரபஸ்பர வரிவிதிப்பை அமல்படுத்தியிருந்தார். இருப்பினும், அவ்வரிவிதிப்பைத் தொடங்குவதற்கு முன்பே வணிகப் போர், சர்வதேச பங்குச் சந்தைகளின் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்றவற்றின் காரணமாக அதை 90 நாட்களுக்கு ட்ரம்ப் நிறுத்திவைத்துள்ளார்.
எனினும், இந்தப் பட்டியலில் சீனாவைத் தவிர்த்த அவர், அந்த நாட்டுக்கு தொடர்ந்து வரிவிதிப்பை உயர்த்தினார். பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கப் பொருட்களுக்கான வரிவிதிப்பை உயர்த்தியது. சீனப்பொருட்களுக்கான வரியை அமெரிக்கா 145% ஆக உயர்த்திய நிலையில் அதற்கு சீனா, அமெரிக்க பொருட்களுக்கான 125% ஆக அதிகரித்திருந்தது.
மேலும், இதை 245 சதவீதமாக்கவும் அமெரிக்கா முயற்சித்தது. இந்த வரி விகித உயர்வால், இரு நாட்டு வர்த்தகமும் பாதிக்கப்பட்டது. இதனால், அவ்விரு நாடுகளுக்கு இடையே வர்த்தகப் போர் தீவிரமாய் நடைபெற்றது. இந்த நிலையில், அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்கு இடையிலான வர்த்தகப் போர் பதற்றத்தைத் தணிக்க, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இரு நாட்டு உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் சீன பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. இதனை தொடர்ந்து இரு நாடுகளும் 115% வரியைக் குறைக்க ஒப்பந்தம் செய்துள்ளன.
சீனாவின் 145% மீது அமெரிக்க விதித்த வரியில் 30% சதவிகிதம் குறைக்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், அமெரிக்கப் பொருட்களுக்கான 125% சீன வரிகள் 10% ஆகக் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இப்படி வரி விவகாரத்தில் அமெரிக்கா, சீனா இடையில் நிலவி வந்த பதற்றச் சூழல் தற்போது தணிந்துள்ளதைத் தொடர்ந்து, போயிங் விமான இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையையும் சீனா அகற்றிக் கொண்டுள்ளது. தற்போது நிலைமை ஓரளவு சீராகியுள்ள நிலையில் சீனா தனது தடையை விலக்கிக்கொண்டுள்ளது. முன்னதாக, சீனாவின் இந்தத் திடீர் தடையால், பங்குச்சந்தையில் போயிங் நிறுவனத்தின் பங்கு மதிப்புகள் 3 சதவீதம் சரிவை கண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.