’எல்லா அதிரடியும் இதுக்குத்தானா’ 5 மில்லியன் டாலர்களுக்கு அமெரிக்க குடியுரிமை; ட்ரம்ப் புது திட்டம்!
உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகம் என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக, இந்தியர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். அந்த வகையில், சட்டவிரோதமாக நுழைந்தவர்கள்தான் தற்போது ட்ரம்ப் அரசு மூலம் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக தற்காலிகமாக அனுமதிக்கப்படும் விசாவே H1B ஆகும். குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். இந்த விசா மூலம் அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக 3 ஆண்டுகள் பணியாற்ற முடியும். ஹெச் 1 பி விசாக்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது என்பதால், கணினி குலுக்கல் முறையில் விசாக்கள் வழங்கப்படுகிறது.
என்றாலும், ஹெச் 1 பி விசா திட்டத்தால் இந்தியர்களே அதிகம் பயன்பெறுகின்றனர். பவுண்ட்லெஸ் என்ற அமெரிக்க குடியேற்ற ஆலோசனை மையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்படி, ஹெச்1B விசாக்களில் 72.6 சதவீதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் புதிய கோல்டு கார்டு விசாவை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளார். இது அமெரிக்காவில் 5 மில்லியன் டாலர்களை முதலீடு செய்பவர்கள் அந்நாட்டில் குடியுரிமை பெற வழி வகுக்கும். இந்தப் புதிய விசா தற்போதைய EB-5 விசாவை மாற்றும்.
இதுகுறித்து ட்ரம்ப், ”நாங்கள் ஒரு தங்க அட்டையை விற்கப் போகிறோம். அந்த அட்டைக்கு சுமார் டாலர் 5 மில்லியன் விலையை நிர்ணயம் செய்ய இருக்கிறோம். இது உங்களுக்கு கிரீன் கார்டு சலுகைகளை வழங்கப் போகிறது. மேலும் இது அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்கான ஒரு வழியாகவும் இருக்கும். இந்த அட்டையை வாங்குவதன் மூலம் செல்வந்தர்கள் நம் நாட்டிற்குள் வருவார்கள். இந்தத் திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டால், அந்நாட்டின் தேசிய கடன் விரைவாக அடைக்கப்படும் எனவும், அமெரிக்காவில் அதிக வேலைகளை உருவாக்கும் எனவும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிரந்தர குடியிருப்பாளர்களாக மாற்ற அனுமதிக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக், “1990ஆம் ஆண்டு காங்கிரஸால் நிறுவப்பட்ட EB-5 விசா, குறைந்தது 10 வேலைகளை உருவாக்கும் வணிகத்தில் சுமார் டாலர்1 மில்லியன் முதலீடு செய்பவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறது. ஆனால் ட்ரம்பின் கோல்டு கார்டு, உண்மையில் ஒரு கிரீன் கார்டு அல்லது நிரந்தர சட்டப்பூர்வ குடியுரிமையை வழங்கும். இது முதலீட்டாளர்களுக்கு அதிக விலையை நிர்ணயிக்கிறது மற்றும் EB-5 திட்டத்தில் இருக்கும் மோசடியை நீக்குகிறது. மற்ற கிரீன் கார்டுகளைப் போலவே, இது குடியுரிமைக்கு வழிவகுக்கும். இந்த கோல்ட் கார்டு இரண்டு வாரங்களில் 35 ஆண்டுகால EB-5 திட்டத்தை மாற்றும்” எனத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் சமீபத்திய குடியேற்ற புள்ளி விவரங்களின்படி, செப்டம்பர் 30, 2022உடன் முடிவடைந்த 12 மாதங்களில் கிட்டத்தட்ட 8,000 பேர் முதலீட்டாளர் விசாக்களைப் பெற்றுள்ளனர். 2021ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆராய்ச்சி சேவை அறிக்கை, EB-5 திட்டத்தில் மோசடியின் ஆபத்துகள் குறித்து எச்சரித்தது. முதலீட்டு நிதிகளின் சட்டப்பூர்வ தோற்றத்தை சரிபார்ப்பது குறித்தும் அது கவலை தெரிவித்தது. முதலீட்டாளர் விசாக்கள் உலகளவில் பரவலாக உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், கிரீஸ், மால்டா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் இத்தாலி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகள் பணக்கார விண்ணப்பதாரர்களுக்கு கோல்டு விசாக்களை வழங்கி வருகின்றன.