“H1B விசா வைரஸை நிறுத்துங்கள்” | அமெரிக்க வாழ் இந்தியர்களிடம் கையெழுத்து - அதிர்ச்சி வீடியோ
பொருளாதார ரீதியாக வளர்ந்த நாடுகளில் வேலை செய்வதற்காகவும், கல்வி பயிலவும் வளர்ந்து வரும் மற்றும் பின்தங்கிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் படையெடுப்பது வழக்கமாக நடைபெறுகிறது. அந்த வகையில் உலக அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகம் என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக இந்தியர்கள் அதிக அளவில் இருக்கின்றனர்.
அமெரிக்காவில் தங்கி வேலை செய்வதற்காக தற்காலிகமாக அனுமதிக்கப்படும் விசாவே H1B ஆகும். குறிப்பிட்ட துறையில், திறம்பெற்ற நிபுணர்களுக்கு மட்டுமே இந்த விசா வழங்கப்படும். இது ஒருபுறம் இருக்க அமெரிக்காவில் இருக்கும் வலதுசாரி தரப்பினர் தங்களது நாட்டினரின் வேலை வாய்ப்புகள் வெளியில் இருந்து வருபவர்களால் பாதிக்கப்படுகிறது என்ற கருத்தை தொடர்ச்சியாக முன் வைத்து வருகின்றனர்.
தற்போது இந்த ஹெச்1B விசா விவகாரத்தைப் பொறுத்தவரைக்கும், அமெரிக்க அதிபராகப் பதவியேற்க இருக்கும் டொனால்டு ட்ரம்பின் ஆதரவாளர்கள் மற்றும் தீவிர வலதுசாரிகள் எல்லாம் ஒருபக்கம் நிற்கிறார்கள். மறுபக்கம், ட்ரம்ப் வெற்றிபெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்த எலான் மஸ்க் மாதிரியான தொழிலதிபர்கள் இருக்கிறார்கள்.
அதாவது, குடியேற்ற விதிகளை கடுமையாக்க வேண்டும் எனச் சொல்லும் குடியரசுக் கட்சிக்காரர்களுக்கும் தொழில்நுட்பத்துறையில் டொனால்ட் டிரம்ப்வுக்கு ஆலோசகர்களாக செயல்படுகிற நபர்களுக்கும் இடையில் இது ஒரு விவாதமாகவே மாறிபோய் உள்ளது.
சட்டவிரோத குடியேற்றத்தை நிறுத்தப் போவதாகத் தொடர்ந்து பேசிவரும் டொனால்டு ட்ரம்ப், சட்டப்பூர்வ குடியேற்ற முறைகளான ஹெச் 1 பி விசா திட்டங்களில்கூட மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என்று ட்ரம்பின் குடியரசுக் கட்சியில் இருந்தே கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதனால் இந்தியர்களுக்கு சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குக் காரணம், ஹெச்1 பி விசா நடைமுறையில் ட்ரம்ப் மாற்றம் கொண்டு வரலாம் என பேசப்படுகிறது.
இந்த நிலையில், H1B விசாவுக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள இந்தியர்களிடமிருந்து ஒரு அமெரிக்கர் கையெழுத்துப் பெறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளார். அதாவது, “H1B வைரஸ் பரவுவதை நிறுத்துங்கள்” என்ற முழக்கத்துடன் அவர் இந்த செயலை முன்னெடுத்துள்ளார்.
அலெக்ஸ் ரோசன் என்ற அந்த நபர், H1B விசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவில் இந்தியர்களால் நிர்வகிக்கப்படும் பல்வேறு கடைகளுக்குச் சென்று ஒரு மனுவில் கையெழுத்து வாங்குகிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டுள்ளனர். ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் பவுண்ட்லெஸ் என்ற அமெரிக்க குடியேற்ற ஆலோசனை மையம் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள்படி, ஹெச்1B விசாக்களில் 72.6 சதவீதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.