வரப்போகும் H1B விசா திருத்தம்: ட்ரம்ப் ஆதரவாளர்கள் Vs மஸ்க், விவேக் ராமசாமி.. வெடித்த வார்த்தை மோதல்
டொனால்ட் ட்ரம்ப்பின் மேக் அமெரிக்கா கிரேட் அகெய்ன் (Make America Great Again - MAGA) அமைப்பிற்கும், எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் பின்னணியை அறியலாம்...
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக பதவி ஏற்க உள்ள நிலையில் அவர் அமெரிக்க குடியேற்ற சட்டமான H-1B விசா சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இச்சட்டதிருத்தம் அமல் செய்யப்பட்டால், பெரும்பாலான அமெரிக்கவாழ் இந்தியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என சொல்லப்படுகிறது. டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் MAGA சட்டத்தை ஆதரிக்கின்றனர். அதே சமயம் எலோன் மஸ்க், விவேக் ராமசாமி மற்றும் அவர்களது தொழில் நண்பர்கள் இந்த சட்டத்தை எதிர்க்கின்றனர். இதனால் இரு பிரிவினருக்குள்ளும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பிளவுகள் தோன்ற காரணம் என்ன?
வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தில் செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை வழிநடத்த இந்திய வம்சாவளி முதலீட்டாளரும் மஸ்க்கின் நண்பருமான ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்துதான், MAGA அமைப்புடனான இந்த பிளவுகள் தோன்றின.
எலான் மஸ்கின் எக்ஸ் தள பதிவு:
H-1B விசாவில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மஸ்க் தனது எக்ஸ் வலைதளத்தில், "உங்கள் அணி வெற்றி பெற விரும்பினால், அதற்கு நீங்கள் திறமையானவர்களை உங்கள் அணியில் சேர்க்க வேண்டும்.
ஒருவர் எந்த இனம், மதம் அல்லது தேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர் அமெரிக்காவிற்கு வந்து இந்த நாட்டிற்கு பங்களிப்பதற்காக கடுமையாக உழைத்திருந்தால், என்றென்றும் அவருக்கு என் மரியாதை உண்டு" என்று பதிவிட்டுள்ளார். திறமையான பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்குவதில் எலான் மஸ்க் எப்போதுமே முன் நின்று வருகிறார்.
MAGA பார்வை..
எலான் மஸ்கின் இந்த பதிவை MAGA ஆதரவாளர்கள், ஜனரஞ்சக கொள்கைகளுக்கு மஸ்க் துரோகம் செய்வதாக பார்க்கின்றனர். மேலும் இந்தியா போன்ற நாடுகளில் இருந்து திறமையான பனியாளார்களை பணியமர்த்துவதை முழுமையாக நிறுத்துமாறு அவர்கள் கூறிவருகின்றனர். அதற்கு அவர்கள், “அமெரிக்காவில் திறமையானவர்கள் இல்லையா? ஏன் இந்தியர்களை பணியமர்த்த வேண்டும்” என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.
விவேக் ராமசுவாமி
இந்நிலையில், தொழிலதிபரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான விவேக் ராமசுவாமி ஒரு கருத்தை முன்வைத்துள்ளார். அதில் அவர், “பிரச்னை குடியேற்றத்தில் இல்லை, மாறாக அமெரிக்க கலாசாரத்திலேயே உள்ளது. அமெரிக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தவறாக வளர்க்கிறார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியில் அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும். தற்போதைய கல்வி முறையில் குறைபாடுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் “சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டில் பிறந்தவர்களையும் முதல் தலைமுறை பொறியாளர்களையும் வேலைக்கு அமர்த்துவது என்பதற்கு அர்த்தம், அமெரிக்கர்களுக்கு உள்ளார்ந்த திறமை இல்லை என்பதல்ல. அமெரிக்க கலாசாரம் சிறந்ததை விட சாதாரணமான தன்மைக்கு முன்னுரிமை அளிக்கிறது என்பதே காரணம். தொழில்நுட்ப திறமைகளுக்கான அதிக போட்டி நிறைந்த உலகளாவிய சந்தையில் திறமையே முக்கியம்; சாதாரணமல்ல” என்று தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து MAGA ஆதரவாளர்களை கடும் கோபமடைய செய்துள்ளது. இதையடுத்து இவ்விவகாரம் பூதாகரமாகி உள்ளது.