அதிகரிக்கும் போர்ப் பதற்றம்.. எச்சரித்த அமெரிக்கா.. 6 விமானங்களின் அனுமதியை ரத்துசெய்த வெனிசுலா!
அமெரிக்கா - வெனிசுலா இடையே போர் பதற்றம் காரணமாக பல்வேறு நாடுகள் வெனிசுலாவுக்கான தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்துள்ளன.
கரீபியன் கடல் வழியாக லத்தீன் மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படி கடத்தப்பட்டு வரும் போதைப் பொருட்கள் அனைத்தும் அமெரிக்காவுக்குள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், வெனிசுலா நாட்டில் இருந்து போதைப் பொருள் அதிகம் கடத்தப்படுவதாகவும் இதற்கு பின்னணியில் சீனா இருப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். அதுமட்டுமின்றி, ஒருபக்கம் அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சர்வதேச கடல் எல்லையில் நீர்முழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இந்தக் குற்றச்சாட்டுகளை வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மறுத்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தன்னைப் பதவி நீக்கம் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, வெனிசுலாவிற்கான விமானங்களை நிறுத்திய ஆறு முக்கிய சர்வதேச விமான நிறுவனங்களின் இயக்க உரிமைகளை அந்நாடு ரத்து செய்துள்ளது. ஐபீரியா, டிஏபி, அவியான்கா, லதாம் கொலம்பியா, துருக்கிய ஏர்லைன்ஸ் மற்றும் கோல் ஆகியவற்றுக்கான அனுமதிகளை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் ரத்து செய்துள்ளது. ஏர் யூரோபா மற்றும் பிளஸ் அல்ட்ரா விமான நிறுவனங்கள் தனது சேவையை நிறுத்தி வைத்திருந்தபோதும்,அவற்றின் அனுமதிகள் ரத்து செய்யப்படவில்லை. கொலம்பியா, பனாமா மற்றும் குராக்கோ ஆகிய நாடுகளுக்குச் செல்லும் உள்நாட்டு விமான நிறுவனங்களைப் போலவே, சர்வதேச விமான நிறுவனங்களான கோபா மற்றும் விங்கோ ஆகியவை வெனிசுலாவில் தொடர்ந்து இயங்குகின்றன.
”அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்ட அரசு பயங்கரவாத நடவடிக்கைகளில் இந்த விமான நிறுவனங்கள் இணைந்துள்ளன" என்று அந்நாட்டு கராகஸ் தெரிவித்துள்ளது. முன்னதாக, ”மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை மற்றும் நாட்டில் அல்லது அதைச் சுற்றியுள்ள அதிகரித்த இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அதன்மீது பறக்கும்போது சாத்தியமான ஆபத்தான சூழ்நிலை குறித்து முக்கிய விமான நிறுவனங்களை அமெரிக்க விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் எச்சரித்திருந்தது.
இதைத் தொடர்ந்து சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் (IATA),”வெனிசுலா அதிகாரிகள் சர்வதேச விமான நிறுவனங்களுக்கு விமானங்களை மீண்டும் தொடங்க 48 மணி நேர காலக்கெடுவை வழங்கியுள்ளனர். இல்லையெனில் நாட்டிற்கு பறக்கும் உரிமையை இழக்க நேரிடும்” அது எச்சரித்திருந்தது.
ஆனால், இந்தக் காலக்கெடுவை புறக்கணித்து சில விமானங்கள் தங்களது விமானச் சேவைகளை ரத்து செய்திருந்தன. இந்த நிலையில்தான் அந்த விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில், முழுமையான பாதுகாப்பு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் வெனிசுலாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்க விரும்புவதாக ஐபீரியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

