போர்ப் பதற்றம் | படைகளைக் குவிக்கும் அமெரிக்கா.. வெனிசுலாவை ட்ரம்ப் குறிவைப்பது ஏன்?
வெனிசுலா - அமெரிக்கா இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், புவர்ட்டோ ரிக்கோவில் அமெரிக்க ராணுவ விமானங்கள் மற்றும் போர் வாகனங்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா - வெனிசுலா அதிகரிக்கும் போர்ப் பதற்றம்
அமெரிக்கா, வெனிசுலா இருநாடுகள் இடையேயான மோதல் நீண்டகாலமாக நடந்துவரும் சூழலில், அதிகளவில் குற்றவாளிகளையும், போதைப் பொருளையும் அமெரிக்காவிற்கு கடத்த வெனிசுலா உறுதுணையாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ போதைப்பொருள் கடத்தலை ஊக்குவிப்பதாகவும், அந்த கும்பல்களுடன் அவர் தொடர்பில் இருப்பதாகவும் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். தவிர, மதுரோவை தானாக முன்வந்து பதவி விலகுமாறு ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ட்ரம்ப் நிர்வாகம் மதுரோவிற்கு எதிராக அதிக அழுத்தத்தைக் கொடுத்து வருகிறார்.
பொருளாதாரத் தடைகளுக்கு அப்பால் இராணுவமும் தயார் நிலையில் உள்ளது. புவர்ட்டோ ரிக்கோவில் அமெரிக்க ராணுவ விமானங்கள் மற்றும் போர் வாகனங்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, 15,000க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள் இப்போது கரீபியன் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இது பல தசாப்தங்களில் கரீபியனில் நிறுத்தப்பட்ட மிகப்பெரிய அமெரிக்க இராணுவ இருப்பு ஆகப் பார்க்கப்படுகிறது. இதனால், கரீபியனில் மோதல் ஏற்படக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகளிடம் பரவி வருகிறது. மேலும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெனிசுலாவுக்கு எதிராக ரகசிய நடவடிக்கைக்கு அங்கீகாரம் அளித்துள்ளார். இதனால், அமெரிக்காவின் தாக்குதல்கள் விரைவில் கடல்கடந்த படகுகளில் இருந்து நாட்டிற்குள் உள்ள இலக்குகளை நோக்கி நகரக்கூடும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், வெனிசுலா எந்தவொரு படையெடுப்பையும் எதிர்க்கும் என மதுரோ ட்ரம்புக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
வெனிசுலாவை ட்ரம்ப் குறிவைப்பது ஏன்?
எண்ணெய், தங்கம், எரிவாயு உள்ளிட்ட வளங்களை வெனிசுலா கொண்டிருக்கிறது. குறிப்பாக, உலகின் மிகப்பெரிய நிரூபிக்கப்பட்ட எண்ணெய் இருப்பை வெனிசுலா கொண்டுள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். சுமார் 303 பில்லியன் பீப்பாய்கள் என அவர்கள் மதிப்பிடுகின்றன. இது சவுதி அரேபியாவைவிட அதிகம் எனவும் மதிப்பிடப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத் தடைகளால் பாதிக்கப்பட்ட எண்ணெய் உற்பத்தி வெகுவாகக் குறைந்திருந்தாலும், இத்தகைய பரந்த இருப்புக்களின் மீதான கட்டுப்பாடு உலகளாவிய எரிசக்தி சந்தைகளை பாதிக்கலாம் மற்றும் மேற்கு ஆசிய எண்ணெய்யை அமெரிக்கா சார்ந்திருப்பதைக் குறைக்கலாம். இன்னொரு புறம், சீனாவும் ரஷ்யாவும் வெனிசுலாவிற்கு பில்லியன் கணக்கான டாலர்களை கடனாகக் கொடுத்து, அதை எண்ணெய் மூலம் திரும்பப் பெறப்படுகிறது. மேலும் இந்த இருநாடுகளுடன் ஈரான், கியூபாவிடமிருந்தும் வெனிசுலா ஆயுதங்களைப் பெற்று வருகிறது. வெனிசுலாவின் இந்தச் செயல் அமெரிக்காவிற்கு வெறுப்பை ஏற்றுவதாக இருக்கிறது.
வெனிசுலாவின் இந்த நடவடிக்கை இன்று நேற்று நிகழ்ந்தது அல்ல.1999 இல் ஆட்சிக்கு வந்த இடதுசாரி அதிபரான ஹ்யூகோ சாவேஸ் காலத்திலிருந்தே உருவானது. அவர், வெனிசுலாவின் எண்ணெய் தொழிற்துறையை தேசியமயமாக்கினார். இதன்மூலம், அமெரிக்க நிறுவனங்களின் பங்கைக் குறைத்தார். மேலும் அவர், கியூபா, ரஷ்யா, சீனா மற்றும் ஈரானுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொண்டார். இந்த நிலையில், 2002இல் சாவேஸ் ஆட்சி வீழ்ந்தது. அதற்கு, அவரது அரசாங்கம் அமெரிக்கா ஆதரவளித்ததாக குற்றம்சாட்டியது. 2013இல் சாவேஸின் மரணத்திற்குப் பிறகு பதவியேற்ற தற்போதைய அதிபர் மதுரோவும் அதே வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்து வருகிறார். 2015ஆம் ஆண்டு ஆட்சியில் இருந்த ஒபாமா நிர்வாகம் தடை விதித்தது. அதைத் தொடர்ந்துவந்த ட்ரம்பின் முதலாவது அரசாங்கமும் தடைகளை விரிவுபடுத்தியது. இதன் காரணமாக வெனிசுலா - அமெரிக்கா உறவில் விரிசல் நீடித்து வருகிறது.

