கச்சா எண்ணெய் விலையேற்றம்.. ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கான தடையை தளர்த்திய அமெரிக்கா!
ஏப்ரல் 17க்குள் கப்பலில் ஏற்றப்பட்ட ரஷ்ய எண்ணெய் தயாரிப்புகளை வாங்குவதற்கான காலக்கெடு மே 16 வரை நீட்டிக்கப்பட்டது. அமெரிக்கா–இஸ்ரேல்–ஈரான் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ள சூழ்நிலையே இந்த முடிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.
ரஷ்யாவிலிருந்து பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான பொருளாதாரத் தடையில் இருந்து ஒரு மாத காலத்திற்கு அளிக்கப்பட்ட விலக்கை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் கப்பலில் ஏற்றப்பட்ட ரஷ்ய எண்ணெய் தயாரிப்புகளை வாங்குவதற்கு மே 16 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதைக் கருத்தில்கொண்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்திலிருந்து நடைமுறையில் இருந்த ரஷ்ய மற்றும் ஈரானிய எரிசக்திப் பொருட்களை வாங்குவதற்கு அனுமதித்த 30-நாள் உரிமங்களை அமெரிக்கா புதுப்பிக்காது என்று அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியிருந்தார். அவ்வாறு கூறிய 2 நாள்களுக்கு பிறகு அமெரிக்க நிதி அமைச்சகம் வெளியிட்ட உத்தரவின்படி, ரஷ்யாவிடமிருந்து எரிசக்திப் பொருட்களை வாங்குவதற்கு அனுமதித்த முந்தைய உரிமத்திற்குப் பதிலாக, ஒரு புதிய பொது உரிமம் அமலுக்கு வரும் என்றும் ஈரானிய எரிசக்திப் பொருட்களை வாங்குவதற்கு இனிமேல் அனுமதி வழங்கப்படாது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

