பாகிஸ்தானின் எதிர்கால திட்டம் | இந்தியாவுக்கு பலூச் எச்சரிக்கை!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில், இந்தியா தாக்குதலைத் தொடங்கி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலைத் தொடங்கியதால், அதை இந்தியா தகர்த்தது. இதனால் இரு நாட்டின் எல்லைப் பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. இரு நாடுகளுக்கிடையே தாக்குதலைத் தடுக்கும் விதத்தில், அமெரிக்க மத்தியஸ்தம் செய்தது. அதன்பேரில், இரு நாடுகளும் தாக்குதலை நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டன. மேலும் அதை முறையாகவும் அறிவித்தன. எனினும், எல்லைகளில் பாதுகாப்பு தொடர்கிறது.
இந்த நிலையில் “பாகிஸ்தானில் இருந்துவரும் அமைதி, போர் நிறுத்தம் மற்றும் சகோதரத்துவம் பற்றிய ஒவ்வொரு பேச்சும் வெறும் ஏமாற்று வேலை ஆகும்” என்ற பலூச் விடுதலை இராணுவம் (BLA) தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அது வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தானில் இருந்துவரும் அமைதி, போர் நிறுத்தம் மற்றும் சகோதரத்துவம் பற்றிய ஒவ்வொரு பேச்சும் வெறும் ஏமாற்று வேலை. அவர்களின் போர் தந்திரம் என்பது தற்காலிக தந்திரம் ஆகும். ரத்தத்தால் கறைபட்ட கைகளைக் கொண்ட ஒரு இடம் அது. அதன் ஒவ்வொரு வாக்குறுதியும் ரத்தத்தில் ஊறவைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உலகளாவிய பயங்கரவாதிகளை வளர்த்துவிடும் இடமாக மட்டுமல்லாமல், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற கொடிய பயங்கரவாத குழுக்களின் அரச ஆதரவுடன் பயங்கரவாதிகளின் வளர்ச்சிக்கான மையமாகவும் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
மேலும் அதில், “இந்த பயங்கரவாதத்தின் பின்னணியில் உள்ள வலையமைப்பே ஐ.எஸ்.ஐ... பாகிஸ்தான் வன்முறை சித்தாந்தத்தின் அணு ஆயுத நாடாக மாறியுள்ளது. பலூச் விடுதலை ராணுவம் என்பது எந்தவொரு மாநிலத்திற்கோ அல்லது அதிகாரத்திற்கோ ஒரு பிரதிநிதி என்ற கருத்தை நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம். பி.எல்.ஏ ஒரு பகடைக்காயாகவோ அல்லது அமைதியான பார்வையாளராகவோ இல்லை. இந்த பிராந்தியத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால இராணுவ, அரசியல் மற்றும் மூலோபாய உருவாக்கத்தில் எங்களுக்கு சரியான இடம் உள்ளது. மேலும் எங்கள் பங்கை நாங்கள் முழுமையாக அறிந்திருக்கிறோம். பாகிஸ்தானை தொடர்ந்து பொறுத்துக்கொண்டால், வரும் ஆண்டுகளில் இந்த அரசின் இருப்பு முழு உலகத்தின் அழிவுக்கு வழிவகுக்கும். ஆகவே, உலகத்திலிருந்து, குறிப்பாக இந்தியாவிலிருந்து அரசியல், இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு ஆதரவைப் பெற்றால், பலூச் தேசத்தால் இந்த பயங்கரவாத அரசை ஒழிக்க முடியும்” என அதில் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்திய நேரத்தில், இந்தக் குழுவும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக தாக்குதலை நடத்தியிருந்தது. இதுகுறித்து BLA செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலோச்சின், "இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் உச்சத்தில் இருந்தபோது, பலூச் விடுதலை இராணுவம் (BLA) ஆக்கிரமிக்கப்பட்ட பலூசிஸ்தான் முழுவதும் 51 க்கும் மேற்பட்ட இடங்களில் 71 ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியது. இந்தத் தாக்குதல்களின் நோக்கம் எதிரிகளை அழிப்பது மட்டுமல்ல, எதிர்கால ஒழுங்கமைக்கப்பட்ட போருக்குத் தயாராக இருப்பதை வலுப்படுத்துவதற்காக இராணுவ ஒருங்கிணைப்பு, தரைக் கட்டுப்பாடு மற்றும் தற்காப்பு நிலைகளை சோதிப்பதாகும்” எனத் தெரிவித்திருந்தார்.