தண்ணீருக்காக தொடங்கிய போர்.. அடித்துக்கொள்ளும் தேசிய இனங்கள்.. பரிதவித்து நிற்கும் ஆப்ரிக்க நாடு!
ஆப்பிரிக்காவின் சாட் நாட்டில் கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக, சாட் ஏரி வரலாறு காணாத அளவில் வறண்டு, நிலத்தடி நீர் மட்டமும் சரிந்துள்ளது. இதனால் மீன்வளம், விவசாயம் பாதிக்கப்பட்டு, நீர் ஆதாரங்களை கைப்பற்ற இரு தேசிய இனங்கள் ஆயுத மோதலில் ஈடுபட்டு, வாடி ஃபிரா மாகாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் வன்முறை வெடித்து, அவசரநிலை, ராணுவ குவிப்பு நிலவுகிறது.
மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காகதான் ஏற்படும் என பலர் கூறி வரும் நிலையில், அதனை உண்மையாக்கும் வகையில் தண்ணீருக்காக பெரும் போர் தற்போது ஆப்பிரிக்க நாடான சாட் நாட்டில் நடந்து வருகிறது. அங்கு தண்ணீர் பஞ்சம் வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளதால், நாடே வன்முறை காடாக மாறியுள்ளது.
ஒரு காலத்தில் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றாக இருந்த சாட் ஏரி (Lake Chad) தற்போது வறண்டுவிட்டது. அதாவது 1960-களில் 25,000 சதுர கிமீ பரப்பளவில் இருந்த இந்த ஏரி, இன்று வெறும் 1,500 சதுர கிமீ-க்கும் குறைவான பரப்பளவிலேயே உள்ளது. இந்த ஏரிக்கு தண்ணீர் கொடுக்கும் ஆறுகளில் நீர் எடுப்பது அதிகரித்ததாலும், மழைப்பொழிவு குறைந்ததாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக இந்த ஏரியை நம்பி மீன்பிடித்தொழில் மற்றும் விவசாயத்தில் ஈடுபட்டு வந்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஏரியில் தண்ணீர் குறைந்து கொண்டே வருவதால் நிலத்தடி நீர் மட்டமும் கடுமையாக சரிவடைந்துள்ளது.
இதன் காரணமாக இருக்கும் நீர் ஆதாரங்களுக்காக அங்கு பல்வேறு இன குழுக்களும் தங்களுக்கும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த ஏப்ரல் 3-ம் தேதி வாடி ஃபிரா (Wadi Fira) மாகாணத்தில் உள்ள நீர் நிலையில் இருக்கும் தண்ணீரை பயன்படுத்துவது குறித்து இரு இனங்களுக்கு இடையே வாக்குவாதம் தொடங்கியுள்ளது.
இது முதலில் சிறிய அளவிலான மோதலாக வெடித்த நிலையில், பின்னர் ஆயுதம் ஏந்திய மோதலாக பெரிய அளவில் உருவெடுத்தது. இது குறித்து சாட் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மோதலில் இதுவரை 42 பேர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலைக் கட்டுப்படுத்த அந்தப் பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு ராணுவம் குவிக்கப்பட்டது. எனினும் பல்வேறு பகுதிகளுக்கும் இந்த போர் விரிவடைந்துள்ளதால் இதனை கட்டுப்படுத்த ராணுவம் திணறி வருகிறது.
சாட் நாட்டில் தண்ணீர் பற்றாக்குறையை பயன்படுத்தி போகோ ஹராம் போன்ற தீவிரவாத குழுக்கள் பெரும் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த அமைப்புகள் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள நீர் விநியோகத்தை கட்டுப்படுத்தி வருவதால் அங்கு தண்ணீருக்கான வன்முறை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

