”இனி வீட்டுப்பாடம் இல்லை” பள்ளிக்கல்வி முறையில் மாற்றம்.. யுஏஇ அரசு அதிரடி!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2026-2027 கல்வியாண்டிற்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அந்நாட்டு கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. கோட்பாட்டு அடிப்படையிலான கல்வியிலிருந்து திறன் சார்ந்த கல்விக்கு மாறும் நோக்கில் இந்த முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. கேஜி முதல் 2-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இனி வீட்டுப்பாடம் கிடையாது. இது மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் அன்றாட வாழ்க்கைச் சமநிலையை உறுதிப்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ள முடிவாகும் என கல்வித்துறை அமைச்சர் சாரா அல் அமிரி தெரிவித்தார்.
மாணவர்களின் கல்வித் திறனை மதிப்பிடும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி மதிப்பீடுகள் 50 சதவீத மையப்படுத்தப்பட்ட தேர்வுகள் மற்றும் 50 சதவீத பள்ளி அடிப்படையிலான தேர்வுகள் எனப் பிரிக்கப்படும். தேசிய கல்வி சாசனத்தின் கீழ் ஆறு வழிகளில் புதிய கல்வி முறை அமல்படுத்தப்பட உள்ளது. சில பாடங்களுக்கு டிஜிட்டல் கருவிகளின் பயன்பாடு தவிர்க்கப்பட்டு, நேரடி கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
2026-27 கல்வியாண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இந்த புதிய சீர்திருத்தங்கள் அமீரக பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கல்வியியல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பை அதிகரிப்பதுடன், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை நவீனமயமாக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டுவரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

