250 நாட்கள் ரோந்துப் பணி.. ஈரானிலிருந்து புறப்பட்ட லிங்கன் கப்பல்.. அமெரிக்காவுக்கு பெரிய அடி?
ஈரானின் கடல் எல்லையில் நிறுத்தப்பட்டு, கிட்டத்தட்ட 250 நாட்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்ட அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பல், தற்போது தாய்லாந்துக்குச் செல்லவுள்ளது. திடீரென அது அங்குச் செல்வது ஏன்? வாருங்கள், இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
அணு ஆயுதம் விவகாரம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலைத் தொடங்கின. போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அங்கு தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே ஈரானிய துறைமுகங்கள் மீது மீண்டும் விதிக்கப்பட்ட முற்றுகையை அமெரிக்க கடற்படை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது. இதற்காக, அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) விமானம் தாங்கி கப்பல், ஈரானை ஒட்டியுள்ள சர்வதேசக் கடல் பகுதிகளில் நிறுத்தப்பட்டது. அது, அங்கிருந்தபடியே ரோந்துப் பணியிலும் ஈடுபட்டது. குறிப்பாக, உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்கள் செல்லும் சர்வதேச வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணை (Strait of Hormuz) போன்ற முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதிகளில் அக்கப்பல்களைப் பாதுகாக்கும் நோக்கில் இக்கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தது.
மேலும், தேவைப்படும் நேரங்களில் வான்வழித் தாக்குதல்களை நடத்தவும் இக்கப்பல் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. இக்கப்பல், மத்திய கிழக்கில் தொடர்ச்சியாக 250 நாட்களுக்கு மேல் ரோந்து பணியில் ஈடுபட்டு வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன்மூலம், நவீன கடற்படை வரலாற்றில், துறைமுக இடைவெளி இல்லாமல் மிக நீண்டகாலம் கடலிலேயே நிலைநிறுத்தப்பட்ட அமெரிக்கக் கப்பல்களில் ஒன்றாக இது மாறியது.
மேலும், இக்கப்பலில் சுமார் 5,000 கடற்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், நீண்டகாலப் பணியமர்த்தல் காரணமாக வீரர்களிடையே மனஅழுத்தம் அதிகரித்துள்ளதாகவும், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின. ஆனால், இந்த தகவலை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மறுத்திருந்தார். இந்த நிலையில்தான், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பல், தாய்லாந்துக்குச் செல்லவுள்ளது.
இதுகுறித்து தாய்லாந்து கடற்படை, “இது வீரர்களின் ஓய்வுக்கான வழக்கமான வருகை மட்டுமே; எந்தவிதக் கூட்டு இராணுவப் பயிற்சியும் நடைபெறாது” எனத் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, தாய்லாந்து அரசு, அது வந்து சேரும் துறைமுகத்தையோ அல்லது தேதியையோ வெளியிடவில்லை. மறுபுறம், யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பல், ஜார்ஜ் வாஷிங்டன் கப்பலிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு, தாய்லாந்து வழியாக அமெரிக்கா திரும்பத் தொடங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

