ரூ.90 மட்டும் இருந்தா போதும்.. ஒரு வீட்டையே வாங்கிடலாம்.. இந்தியர்களுக்கு ஜாக்பாட்!
ஒரு வீட்டைக் கட்டவும் வாங்கவும் லட்சக்கணக்கில் செலவு ஆகும் நிலையில், வெறும் 90 ரூபாய் இருந்தா போதும்.. ஒரு வீட்டையே வாங்கிடலாம். அப்படியொரு சந்தர்ப்பம் கிடைச்சா யார்தான் அத விடுவாங்க? வாங்க, அந்த வீடு எங்கே இருக்குனு தெரிஞ்சக்கலாம்..
ஒவ்வொருவருக்கும் வீடு வாங்குவது என்பது தன் வாழ்நாளின் லட்சியக் கனவாக இருக்கிறது. ஆனால், அதற்காக அவர்கள் எண்ணற்ற போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் சிலர் வெற்றிபெற்று விடுகிறார்கள்; இன்னும் சிலரோ கடைசிவரை போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இந்த நிலையில்தான் இத்தாலியில் உள்ள ஒரு நகரம், வெறும் 1 யூரோவிற்கு, அதாவது இந்திய மதிப்பில் வெறும் 90 ரூபாய்க்கு வீடுகளை விற்பனை செய்து வருகிறது.
அந்நாட்டின் சிசிலி தீவில் உள்ள நாரோ (Naro)நகரம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. இங்கு, இடைக்காலக் கோட்டைகள் (Chiaramontano Castle) மற்றும் பரோக் (Baroque) உள்ளிட்ட கட்டடக்கலைப் பகுதிகள் நிறைந்துள்ளன. மேலும், இந்நகரம், யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமான 'கோயில்களின் பள்ளத்தாக்கு' (Valley of the Temples) மற்றும் அழகிய கடற்கரைகளுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இப்படி, வரலாற்றுச் சிறப்புமிக்க நகரத்தில்தான் வீட்டின் விலையும் குறைத்து விற்பனை செய்யப்படுகிறது.
மக்கள்தொகை குறைவதைத் தடுக்கவும், கைவிடப்பட்ட பழைமையான கட்டடங்களைச் சீரமைத்துச் சுற்றுலாவை மேம்படுத்தவும் அம்மாநில உள்ளாட்சி நிர்வாகம் இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. 'Case 1 Euro Naro' என்ற அதிகாரப்பூர்வத் திட்டத்தின் மூலம் வெளிநாட்டினரும் இந்த வீடுகளை வாங்க விண்ணப்பிக்கலாம். case1euronaro.it என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கிடைக்கும் வீடுகளின் விவரங்களைப் பார்த்து நேரடியாக விண்ணப்பிக்கலாம். இத்தாலி குடிமக்கள் மட்டுமின்றி, இந்தியர்கள் உட்பட அனைத்து வெளிநாட்டினரும், நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். இந்த வீடுகளைச் சொந்த வசிப்பிடமாகவோ, விடுமுறை ஓய்வு இல்லமாகவோ அல்லது ஹோட்டல் (B&B) போன்ற வணிக நோக்கங்களுக்கோ பயன்படுத்திக் கொள்ளலாம். அதேநேரத்தில், ரூ.90-க்கு வீடுகள் விற்பனை செய்யப்பட்டாலும் அதன் பின்னணியில் சில முக்கிய நிபந்தனைகளும் செலவுகளும் அடங்கியுள்ளன.
அப்பகுதியில் இருக்கும் வீடுகள் அனைத்தும் மிகவும் பழைமையானவை என்பதால் வீட்டைப் புதுப்பிக்கும் செலவை வாங்குபவரே ஏற்க வேண்டும். பத்திரப்பதிவு, நோட்டரி (Notary) கட்டணம் மற்றும் வரிகளை வாங்குபவரே செலுத்த வேண்டும். மேலும், வீட்டைப் புதுப்பிப்பதற்கான விதிமுறைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். தவிர, இவையனைத்தையும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டியது கட்டாயமாகும். அதேநேரத்தில், அப்பகுதியில் ரூ.90க்கே வீடுகள் விற்பனை செய்யப்பட்டாலும் அதைப் புதுப்பிப்பதற்கும் சட்டப்பூர்வக் கட்டணங்களுக்கும் தேவையான நிதியைத் திட்டமிட்டு இறங்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர் ரியல் எஸ்டேட் வல்லுநர்கள்

