ஒரு லட்சம் அமெரிக்கர்களைக் கொல்லக்கூடிய கோகைன்.. கடத்திச் சென்ற 2 இந்திய லாரி ஓட்டுநர்கள் கைது!
ஒரு லட்சம் அமெரிக்கர்களைக் கொல்லும் அளவுக்கு கோகைனை கடத்திச் சென்ற குற்றத்திற்காக இரண்டு இந்திய வம்சாவளி லாரி ஓட்டுநர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோகைன் கடத்திய லாரி ஓட்டுநர்கள் கைது
அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், ‘அமெரிக்கா, அமெரிக்கர்களுக்கே’ என்ற கொள்கை ரீதியில் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். சட்டவிரோத குடியேற்றம், விசா கட்டுப்பாடுகள், வரிகள் விதிப்பு, போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்டவற்றுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சமீபத்தில்கூட போதைப் பொருட்களை அமெரிக்காவுக்குள் கடத்த வெனிசுலா உறுதுணையாக இருந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டிய நிலையில், கடந்த 3ஆம் தேதி அந்நாட்டு ராணுவம் வெனிசுலாவில் தாக்குதல் நடத்தி, அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரைக் கைது செய்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியது. அங்கு அவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஒரு லட்சம் அமெரிக்கர்களைக் கொல்லும் அளவுக்கு கோகைனை கடத்திச் சென்றக் குற்றத்திற்காக இரண்டு இந்திய வம்சாவளி லாரி ஓட்டுநர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர். Fox59 அறிக்கையின்படி, கடந்த 3ஆம் தேதி அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில், புட்னம் கவுண்டியில் உள்ள இன்டர்ஸ்டேட் 70இல் வழக்கமான போக்குவரத்து நிறுத்தத்தின்போது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரை-டிராக்டர் அளவுக்கு 309 பவுண்டுகள் மதிப்புள்ள கோகைன் டிரெய்லரை இடைமறித்த போலீசார் அதைப் பறிமுதல் செய்தனர். இது, 7 மில்லியன் டாலர் மதிப்பு என அவர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், இந்த கோகைன் மூலம், 1,13,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களைக் கொல்ல முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதைக் கடத்திய இரண்டு லாரி ஓட்டுநர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் எனவும், சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது. இதன்மூலம் அவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தியதாக முதற்கட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். இது லெவல் 2 குற்றமாகும். இதையடுத்து, ICE இருவரையும் நாடு கடத்துவதை நிறுத்தி வைத்துள்ளது.
அமெரிக்காவில் அதிகளவில் இந்திய லாரி ஓட்டுநர்கள்
அமெரிக்கா ஒரு குறிப்பிடத்தக்க போதைப்பொருள் தொற்றுநோயின் மத்தியில் இருக்கும் வேளையில் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2024ஆம் ஆண்டு அமெரிக்க தேசிய போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சுகாதார ஆய்வு 4.3 மில்லியன் அமெரிக்கர்கள் கோகைன் உட்கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை கொலம்பியாவிலிருந்து கடத்தப்படுகின்றன. இதற்கிடையே, அமெரிக்க சாலை விதிகளை வேண்டுமென்றே மீறியதால், இந்திய வம்சாவளி லாரி ஓட்டுநர்களால் அமெரிக்க சாலைகளில் ஏற்பட்ட தொடர்ச்சியான விபத்துகள், புலம்பெயர்ந்த லாரி ஓட்டுநர்கள் மீது அதிக ஆய்வுக்கு வழிவகுத்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பரில், 17,000 புலம்பெயர்ந்த லாரி ஓட்டுநர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கோகைன் என்பது என்ன?
அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட கோகைன் என்கிற தாவரத்தில் இருந்துதான் கோகைன் போதைப்பொருள் தயாரிக்கப்படுகிறது. கோகைன் இலைகளை பறித்து நன்றாக காய வைத்து பின்னர் அதனை பொடியாக்கி கைகைன் போதைப்பொருளாக பயன்படுத்துகிறார்கள். அமெரிக்கா, ஆப்பிரிக்க நாடுகளின் பழங்குடி மக்கள் இதனை அதிக அளவில் தொடக்க காலத்தில் மயக்க மருந்துக்காக பயன்படுத்தி வந்துள்ளனர். இது நாளடை வில் போதைப் பொருட்களாக பயன்படுத்த தொடங்கியதும் பல்வேறு நாடுகளும் தடை விதித்தன. இருப்பினும் தடையை மீறி கோகைன் போதைப்பொருள் சர்வதேச அளவில் மிகப்பெரிய கடத்தல் சந்தையாகவே மாறி இருக்கிறது.

