ரஷ்யா, ஜப்பானை நோக்கி விரையும் கடல் அலைகள்.. இதுவரை உலகை தாக்கிய மிகப்பெரிய சுனாமிகள் - ஓர் பார்வை
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்
உலகின் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் ஒன்று ரஷ்யாவில் இன்று அதிகாலை பதிவான நிலையில், அந்நாட்டிலும் ஜப்பானிலும் சுனாமி அலைகள் 12 அடி உயரத்திற்கு உயர்ந்தன. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 8.8 ரிக்டர் அலகில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடலிலும் பேரலைகள் எழுந்தன. இதனால் ரஷ்யாவின் கிழக்குப் பகுதி கடற்கரைகள் மற்றும் ஜப்பானின் வடக்குப்பகுதி கடற்கரைகள் பாதிக்கப்பட்டன. மேலும், ஜப்பானுக்கும் ஹவாய்க்கும் இடையிலான மிட்வே அட்டோல் தீவின் வழியாக 6 அடி (1.8 மீ) உயரத்திற்கு ஓர் அலை எழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு, இன்னும் உலக நாடுகளில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பற்றிய பீதிகளில் மக்கள் உறைந்துள்ளனர். மறுபுறம், ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பிரெஞ்சு பாலினீசியாவில் உள்ள மார்குவேசாஸ் தீவுகளை 4 மீட்டர் உயர அலைகள் தாக்கும் என்று உள்ளூர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பிரெஞ்சு மற்றும் ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை
பிரான்சு பாலினீசியாவில் உள்ள பிரெஞ்சு குடியரசின் உயர் ஸ்தானிகராலயத்தின் அறிக்கையின்படி, உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:00 மணியளவில் (1100 GMT) 1.10 முதல் 4 மீட்டர் வரை அலைகள் நுகு ஹிவாவை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அண்டை தீவுகளான உவா ஹுகா மற்றும் ஹிவா ஓவாவும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஜப்பானிலும் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் பல பகுதிகளில் சுனாமி எச்சரிக்கைகளைக் குறைத்துள்ள போதிலும், ஹொக்கைடோ மற்றும் டோஹோகு பிராந்தியத்தின் சில பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து எச்சரிக்கைகளும் முழுமையாக நீக்கப்படும் வரை மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அதிகமாக பதிவான நிலநடுக்கம் மற்றும் உயிரிழப்புகள்...
1)1960ஆம் ஆண்டு - 9.5 ரிக்டர் அளவுகோல். சிலி நாடு - 1,600 உயிரிழப்புகள்.
2) 1964ஆம் ஆண்டு - 9.2 ரிக்டர் அளவுகோல், அலாஸ்கா, USA - 130 உயிரிழப்புகள்.
3) 2004ஆம் ஆண்டு - 9.1 ரிக்டர் அளவுகோல், சுமத்ரா தீவுகள், நிலநடுக்கம் ஏற்பட்டு சுனாமி வந்தது - 2 லட்சத்து 30 ஆயிரம் உயிரிழப்புகள்.
4) 2011-ஆம் ஆண்டு தொகுகு, ஜப்பான் - 9.1 ரிக்டர் அளவுகோல், - 1,800 உயிரிழப்புகள்.
5) 1952 தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள ரஷ்யாவின் கம்சட்கா பகுதி - 9.0 ரிக்டர் அளவுகோல், உயிரிழப்பு குறித்த தரவு இல்லை.
ரிக்டர் அளவுகோலில் ஒன்பதுக்குக்கீழ் பதிவானவை குறித்த பட்டியல்
1) 2010ஆம் ஆண்டூ - 8.8 ரிக்டர் அளவுகோல் - சிலி - 500 உயிரிழப்புகள்.
2) 1906ஆம் ஆண்டு - 8.8 ரிக்டர் அளவுகோல் - பூமத்ய ரேகை பகுதி - 1500 உயிரிழப்புகள்.
3) 1965ஆம் ஆண்டு - 8.7 ரிக்டர் அளவுகோல் - அலாஸ்க, USA - சுனாமி ஏற்பட்டு 11 மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்தன.
4) 1950ஆம் ஆண்டு - 8.6 ரிக்டர் அளவுகோல் - திபெத் - நிலச்சரிவு ஏற்பட்டது.